Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 3

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

பாடகனா ஆகுறதுக்கு முன்னாடி எம்.எஸ்.வி ஒரு நடிகரும் கூட...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 3

பாடகனா ஆகுறதுக்கு முன்னாடி எம்.எஸ்.வி ஒரு நடிகரும் கூட...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ன்னைக் கையும் களவுமா பிடிச்சுட்ட நீல கண்ட வாத்தியார்." ஏண்டா.. படிக்க ஸ்கூலுக்குப் போகாமனு அதட்டிக் கேட்டார்.

தயங்கித் தயங்கி எனக்குச் சங்கீதம் கத்துக்கறதுலே இஷ்டம் இருக்கிறதைச் சொன்னேன். அதே சமயம், மாசம் மூணு ரூபா ஃபீஸ் கட்டற நிலைமைல எங்க குடும்பம் இல்லேங்கிறதையும் தெரிவிச்சேன்." சரி... அப்படீன்னா மியூஸிக் ஸ்கூல்ல ஒரு வேலைக்காரனா சேரு... பார்ப்போம்...'னு சொன்னார். எப்படியாவது அந்த ஸ்கூல்ல சேர்ந்துடணும்கிற என் விருப்பத்துக்குக் கிடைச்ச வெற்றியா நினைச்சு சந்தோஷப்பட்டேன்.

குருவுக்குப் பணிவிடை செய்வது, அவருடைய அறையைச் சுத்தமாகப் பெருக்கி இசைக்கருவிகளை எல்லாம் துடைத்து, ஒரு சிஷ்யனாக அடுத்த நாளே என் பணியை ஆரம்பித்தேன்.

விஜயதசமி வந்தது. அன்று என் மனசு ஏனோ பரபரத்தது. விடியற்காலை மூணு மணிக்கே எழுந்து இடங்களையெல்லாம் சாணத்தால் மெழுகிச் சுத்தம் பண்ணி, மாக்கோலம் போட்டேன். வாத்தியக் கருவிகளுக்கு சந்தனம், குங்குமப் பொட்டு வெச்சேன். அப்ப மணி நாலரை இருக்கும். யாரும் வரமாட்டாங்க என்கிற தைரியத்துல முதன் முதல்ல ஆர்மோனியப் பெட்டியைத் தொட்டுக் கும்பிட்டு உரக்கப் பாட ஆரம்பிச்சு அதுலயே லயிச்சுப் போயிருந்த நான் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி குரு நீலகண்ட பாகவதர் !

எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போய், கையும் காலும் நடுக்கத்தில் தாளம் போட்டன. என்னை எழுந்துவரச் சொன்னார். அவர்கிட்ட போனேன்.

அப்படியே என்னைக் கட்டி அணைச் சிக்கிட்டு, "டேய் விஸ்வநாதா... இங்க கத்துக்கிற ஒரு பயலுக்கும் சங்கீதமே வரலை. நான் ஏதோ கூலிக்கு மாரடிக்கிறேன்னு நெனச்சு வருத்தப்பட்டேன். நீ வெளியில் நின்னுக்கிட்டே இவ்வளவு தூரம் பாடக் கத்துக்கிட்டதைப் பார்க்கும்போது என் மனசுக்கு நிறைவா - சந்தோஷமா இருக்குடா. நீ முறையா கத்துக்கிட்டுக் கச்சேரி பண்ற அளவுக்கு உசரணும் . இன்னிக்கே வித்யாரம்பம்.. என்னோட வா..' னு சொல்லி சிட்சையை அன்னிக்கே ஆரம்பிச் சுட்டார்.

இதுக்கு நடுவுல தாத்தாவுக்கு விஷயம் போய் , அவர் எப்ப என்னை அடிக்கப் போறாரோன்னு பயந்துக்கிட்டேருந்தேன். அது நடக்கலை. பாட்டு வாத்தி யாரே தாத்தாவை நேர்ல பார்த்து எல்லாத்தையும் சொல்லி நான் பாட்டு கத்துக்க தாத்தாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டாருன்ற விஷயம் எனக்குப் பின்னாடிதான் தெரியவந்தது .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூணு நாலு வருஷம் எனக்குச் சங்கீதத்துல அசுரப் பயிற்சி கொடுத்து ஒரு பலமான அஸ்திவாரத்தைப் போட்டுக் கொடுத்துட்டாரு குருநாதர். அதோட நிக்கலை. கண்ணனூர் டவுன் ஹால் அரங்கத்துல என்னை மேடையில் ஏத்தி மூணு மணி நேர முழுக் கச்சேரி பண்ண வெச்சார். ஒருவித டென்ஷன், படபடப்பு இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வெச்சுப் பாடினேன் . ஆடியன்ஸ்கிட்டேருந்து நிறைய அப்ளாஸ்; பாராட்டு. இந்தச் சிறுவன் இசையுலகில் ஒரு இடத்தைப் பிடிப்பான் 'என்று' இந்து ' ஆங்கிலப் பத்திரிகை மற்றும் மலையாளப் பத்திரிகைகளில் விமரிசித்திருந்தார்கள் .

என்னை உருவாக்கிய குருநாதர் நீல கண்ட பாகவதரின் பாதங்களில் அந்தப் பாராட்டுகளையெல்லாம் சமர்ப்பித்தேன். பெருமிதம் பொங்க ஆனந்தக் கண்ணீர் வடித்தார் அவர். குருதட்சணையாக அவருக்கு வாரிக் கொடுக்க நம் கையில் பணம் இல்லையே ' என்பதை நினைத்து அன்று பூராவும் அழுதேன்.

குருநாதரும் என் தாத்தாவும் ரொம்ப தோஸ்த் ஆயிட்டாங்க .

ஒரு விழாவுக்கு ஜெயில் கைதிகள் எல்லாம் சேர்ந்து ஒரு டிராமா போட ஆசைப்பட்டாங்க . அரிச்சந்திரா 'நாட கத்தை நீலகண்ட பாகவதர் எழுதிக் கொடுத்தாரு. அந்த நாடகத்துல பால லோகிதாசன் வேஷம் எனக்கு . குருநாதரோட பேரைக் காப்பாத்தணும்கிறதை மனசுல வெச்சுக்கிட்டு நடிச்சேன். இந்தப் பையன் சினிமாவுல சேர்ந்தா பெரிய ஹீரோவா வருவான்னு வந்திருந்த கலெக்டர், போலீஸ் அதிகாரிகள்லாம் என்னைப் பாராட்டிப் பேசினாங்க. இசையோட, சினிமாவுல நடிக்கிற ஆசையும் என் மனசுல கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சுது .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சமயத்துல - நாங்க இருக்கிற போலீஸ் க்வார்ட்டர்ஸ்ல கழைக்கூத் தாடிங்க செண்டை தாள வாத்தியங்களோட வித்தை காட்ட ஒரு நாள் வந்தாங்க. கருணாகரன் என்னைவிட ரெண்டு வயசு பெரியவன் ) என்கிற என் நண்பனும் நானும் வேடிக்கை பார்க்க நின்றோம். ஒரு ஆள் டமடம்னு தாளம் அடிக்க, ஒரு பெண் கயித்து மேல பாலன்ஸ் பண்ற சாகசமெல்லாம் செய்வா. நான் சும்மா இல்லாம, நான் அந்தத் தாள் வாத்தியத்தை வாசிக்கிறேன்னு சொல்லிப் படுகுஷியா வாசிச்சேன். அந்த ஆள் வேற தம்பி நீ நல்லா வாசிக்கறேன்னு என்னை உசுப்பிட்டுப் போயிட்டான். அன்னிக்கு வித்தைக் காரங்களுக்கு வழக்கத்தைவிட வசூல் அதிகமா கெடைச்சுது. இந்த நேரத்துல, கருணாகரன்" நீ மட்டும்தான் வாசிப்பியா.. நானும் வாசிக்கிறேன் பாரு"னு சவால் விட்டுக் கன்னாபின்னானு அடிச்ச துல வாத்தியத்தோட தோல் கிழிஞ்சு போச்சு. 'விஸ்வநாதன்தான் அப்படிக் கிழிச்சுட்டான்"னு பழியை என் மேலே போட்டுட்டுக் கருணாகரன் நைஸா நழு விட்டான். அவ்வளவுதான்....

அந்தக் கழைக்கூத்தாடிக்காரங்க எங்க தாத்தாகிட்ட புகார் பண்ண ஆபீஸுக்கே போயிட்டாங்க. விஷயத்தைக் கேள்விப்பட்ட தாத்தா. "உன் பையன் செய்திருக்கற்காரியத்தைப் பார்த்தியா?"னு அம்மாகிட்ட வந்து சத்தம் போட்டாரு.

உடனே என் அம்மா ஆவேசம் வந்த மாதிரி என்னை உலக்கையால் அடிச்சு நிமிர்த்திட்டாங்க . நான் அந்த வாத்தியத்தைக் கிழிக்கலைன்னு என் சித்தி உண்மையைச் சொல்லியும், அம்மா காதுல வாங்காம என்னை உதைச்சு இம்சைப்படுத்திட்டாங்க.

அன்னிக்கு ராத்திரி சாப்பிடாம பட்டினி. நான் ஒரு பக்கம் , அம்மா இன்னொரு பக்கம் அழுதுக்கிட்டே தூக்கம் வராம புரண்டுக்கிட்டிருந்தோம். 'மகனை அநியாயமா அடிச்சுட்டோம்.. அவனை மகிழ்ச்சியா வெச்சுக்க முடியலையே'ங்கற ஆதங்கத்துலதான் அம்மா அழுதிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும்.

அதேபோல, அம்மாவும் தாத்தாவும் சந்தோஷமா இருக்கணும். அவங்களுக்கு ஒரு பாரமா நான் இருக்கக்கூடாது.

என்னால அவங்களுக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாதுனு ராத்திரியே முடிவு பண்ணேன்.

திருட்டு ரயில் ஏறி திருப்பூர்ல வந்து இறங்கினேன். அங்கே என் அம்மாவோட தூரத்துச் சொந்தம் - ஒரு மாமா இருந்தாரு. நான் திருப்பூர் போனதுக்கு முக்கிய காரணம் - அங்கேதான் அப்போ படங்கள் எடுத்து பாப்புலரா இருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் ஆபீஸ். முதலாளிகளான சோமு - மொகிதீன் இரண்டு பேர்கிட்டயும் என்னை அழைச்சிக்கிட்டுப் போய்ப் பேசினார் தாய்மாமா.

"இசையைவிட இவனுக்கு நடிக்கறதுலதான் ஆசை..'னு ஸ்ட்ராங்கா சொன்னாங்க.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

"சரி.. பார்க்கலாம்"னு ஜூபிடர் முதலாளி சோமு ஒரு சின்ன ஆஸ்டின் கார்ல என்னையும் தூக்கிப் போட்டுக்கிட்டுத் திருப்பூர்லருந்து மெட்ராஸுக்கு வந்தார் .

83 , கெல்லீஸ் ஹைரோடு, இப்ப 'குமுதம்' பத்திரிகை ஆபீஸ் இருக்கற இடத்துக்குப் பக்கத்துலனு நினைக்கிறேன். அங்கேதான் ஜூபிடர் லாட்ஜ் இருந்தது. அங்கதான் ஜூபிடர் பிக்சர் ஸோட ஆபீஸும் இருந்தது.

நாங்க இங்க வந்து சேர்ந்தவுடனே. கண்ணகி 'படத்துக்குப் பூஜை நடந்தது. ஹீரோ - பி.யு. சின்னப்பா, ஹீரோயின் - பி. கண்ணாம்பா. அப்புறம் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் ஜோடி. வசனம் - இளங்கோவன் இசை - எஸ்.வி. வெங்கட் ராமன். இப்படி ஒரு பெரிய யூனிட்டே இருந்தது. இவங்களுக்கு முன்னாடி நான் பாடி, நடிச்சுக் காண்பிச்சேன்.

எனக்கு மேக்கப்பெல்லாம் போட்டு பாலகோவலன் வேஷம். பால கண்ணகியா டி.வி.ரத்னம் (பிரபல பின்னணிப் பாடகி) நடிக்க, கொஞ்சம் ஷட் பண்ணாங்க .

மறுநாள் 'டிரஷ்' போட்டுப் பார்த்து விட்டு வந்தவர்கள் இடி மாதிரி ஒரு செய்தியை என் தலையில் இறக்கினார்கள். என்னை ஆடிப்போக வைத்த அந்தத் தகவல்..

(21.11.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து..)