Published:Updated:

நானும் நீயுமா 14: கமலின் அறிவுஜீவித்தனம் vs ரஜினியின் வெள்ளந்திமுகம்! யாரை அதிகம் கொண்டாட வேண்டும்?

ரஜினி, கமல்

சினிமாத்துறை தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ரஜினியின் நல்ல நோக்கம் சரி. ஆனால், உலகத்தின் சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் அதன் தரமும் அதல பாதாளத்தில் இருக்கிறதே என்கிற அக்கறை அவருக்கு இருந்தாய் தெரியவில்லை.

நானும் நீயுமா 14: கமலின் அறிவுஜீவித்தனம் vs ரஜினியின் வெள்ளந்திமுகம்! யாரை அதிகம் கொண்டாட வேண்டும்?

சினிமாத்துறை தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ரஜினியின் நல்ல நோக்கம் சரி. ஆனால், உலகத்தின் சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் அதன் தரமும் அதல பாதாளத்தில் இருக்கிறதே என்கிற அக்கறை அவருக்கு இருந்தாய் தெரியவில்லை.

Published:Updated:
ரஜினி, கமல்
ஒருவர் சினிமா வாய்ப்பிற்காக சென்னையில் அலைந்து திரிந்து தங்க இடம் கிடைக்காமல் எல்.ஐ.சி கட்டடத்தின் படிக்கட்டுகளில் உறங்கியிருக்கிறார். இன்னொருவரை அவரின் இளம் வயதிலேயே ஒரு படத்தின் தயாரிப்பாளர் வியந்து பார்த்து குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தார். முன்னவர் கடவுள், ஆன்மீகம் என்கிற தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர். பின்னவரோ "கடவுள்னு ஒருத்தர் இருந்தா நல்லாத்தான் இருக்கும்" என்று பகுத்தறிவு பேசுபவர். ஒருவர் சூப்பர் ஸ்டார். மற்றவர் 'சூப்பர் ஆக்டர்'.

இப்படி பல விஷயங்களில் எதிரும் புதிருமாக முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஆத்மார்த்தமான நண்பர்களாகத் தொடரும் ரஜினி - கமல் ஆகிய இருவரும்தான் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் இயக்கத்தைப் பிரதானமாக தீர்மானித்தார்கள்.

தொடக்க காலத்தில் ஒரு சராசரி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்கிற தணியாத தாகமும் ஆர்வமும் கமலுக்குள் இருந்தது. அவர் தேடி தேடிப் பார்த்த சிறந்த உலக சினிமாக்கள், வாசித்த புத்தகங்கள், அறிஞர்களின் நட்பு போன்ற விஷயங்கள் அவருக்குள் இருந்த தீயைக் கிளறிவிட்டது. கமலின் மொழியிலேயே சொன்னால், கே.பாலசந்தர், அனந்து போன்ற 'சிறந்த குருமார்கள்' கமலுக்கு அமைந்தார்கள். சில குருமார்களை கமலே தேடிச் சென்றார். ஹீரோவாக நடித்து பொருளாதார நோக்கில் தன்னை சற்று நிலை நிறுத்திக் கொண்ட பின்னர், சொந்த சினிமா நிறுவனத்தைத் தொடங்கிய கமல், சிறந்த முயற்சிகளை தமிழ் சினிமாவில் நிகழ்த்தத் தொடங்கினார். தொழில்நுட்பம், திரைக்கதை, ஒப்பனை என்று தமிழக சினிமாவின் பல்வேறு துறைகளில் நவீன பாணிகளை புகுத்திய முன்னோடியாக கமலை சொல்லலாம்.

கமல், கே.பாலசந்தர், ரஜினி
கமல், கே.பாலசந்தர், ரஜினி

எனில் ரஜினிக்கு மட்டும் நல்ல கதையம்சம் கொண்ட சினிமாக்களின் மீது ஆர்வமில்லையா என்ன? நிச்சயம் இருந்தது. ரஜினி திரைப்படக் கல்லூரியில் படித்தவராயிற்றே? இயக்குநர் மகேந்திரனிடம் சிறந்த சினிமாக்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பாராம் ரஜினி. சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையே இது காட்டுகிறது. எனவேதான் 'முள்ளும் மலரும்' 'ஜானி', 'அவள் அப்படித்தான்' போன்ற மாற்று முயற்சிகள் தமிழில் சாத்தியமாகின. இதற்கு நல்ல கதையுள்ள சினிமாக்களின் மீது ரஜினிக்கு இருந்த ஆர்வமும் ஒருவகையில் காரணம்.

ஆனால், ஒரு காலகட்டத்தில் தனது பாதையை தீர்மானமாக முடிவு செய்து கொண்டார் ரஜினி. அது 'கமர்ஷியல் ஹீரோ' என்கிற பாதை. ‘சினிமா உருவாவதற்கு ஆதாரமான காரணமாக இருக்கிற தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அந்தத் துறை நன்றாக இருக்கும், அதைச் சார்ந்திருக்கும் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்' என்கிற பிரதான நோக்கம் ரஜினிக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. கமலும் சரி, ரஜினியும் சரி அவரவர்களின் நோக்கில் தமி்ழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ரஜினிக்கும் கமலுக்கும் முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. சினிமாவின் மூலம் தான் சம்பாதித்த பொருளை அந்தத் துறையிலேயே முதலீடு செய்து சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுபவர் கமல். ஆனால், ரஜினி சிறந்த சினிமாக்களை தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாததை ஒரு பின்னடைவாகத்தான் சொல்ல வேண்டும். சினிமாத்துறை தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ரஜினியின் நல்ல நோக்கம் சரி. ஆனால், உலகத்தின் சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் அதன் தரமும் அதல பாதாளத்தில் இருக்கிறதே என்கிற அக்கறை அவருக்கு இருந்ததைப் போல தெரியவில்லை.

சினிமா தயாரிப்பில் முன்னணியில் இருக்கிற ஹாலிவுட்டில் கூட பெரும்பாலும் வணிக படங்கள்தான் வெளியாகின்றன. ஆனால் அதன் இணைக்கோடாக சிறந்த மாற்று முயற்சிகளும் கூடவே உருவாகின்றன. இரு தரப்பிற்கும் அந்தந்த அளவில் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டிற்குமான வணிகமும் இருக்கிறது. சிங்கம் வாழ்கிற அதே காட்டில் மான் வாழ்வது போன்று இதைச் சொல்லலாம்.
ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ஒரு காட்டில் சிங்கமும் வாழ வேண்டும். மான்களும் அழியாமல் தொடர்ந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காடு வளமாக இருக்கும். மான்கள் மொத்தமாக இரையாகி அழிந்து சிங்கம் மட்டுமே இருப்பதற்கு பெயர் காடு இல்லை. சினிமாத்துறையும் இதே போலத்தான். வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஜனரஞ்சகமான திரைப்படங்கள் ஒருபக்கம் வந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ஆரோக்கியமான மாற்று முயற்சிகளும் தொடர்ந்து நிகழ வேண்டும். அதற்கு அந்தத் துறையில் இருக்கும் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், கலைஞர்கள் காரணகர்த்தாவாக இருக்க வேண்டும்.தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் போன்று ஒரு சில நபர்களே இதைச் செய்கிறார்கள். இந்த நோக்கில் ரஜினியின் பங்களிப்பு என்ன என்பது விடை காண முடியாத பெரிய கேள்வி.

சரி, தமிழில் பெரும்பாலும் கமர்ஷியல் படங்கள்தான் வெளியாகின்றன அல்லவா? வரட்டும். ஆனால் அவற்றிலாவது ஏதாவது வித்தியாசமோ, புதுமையோ இருக்கிறதா? அரைத்த மாவையே தொடர்ந்து அரைத்து காலம் காலமாக உபயோகிக்கிற அதே புளித்துப் போன மசாலாவைப் போட்டு பிரட்டுகிறார்கள். ஆனால், பேக்கிங் மட்டும் அட்டகாசமாக இருக்கிறது. விதம் விதமான விளம்பரங்கள் மற்றும் பிரமோஷன்களின் மூலம் புத்தம் புது உறையில் இட்டு பழைய மசாலாவை விற்பனை செய்யும் தந்திரம் மட்டுமே இங்கு நடக்கிறது. இந்தப் போக்கு குறித்து ரஜினி என்ன கருதுகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட துறையின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவரைத்தான் பொது சமூகம் அதிகமாக ஆதரித்து பாராட்டி, அங்கீகரித்து மகிழ வேண்டும். இதுதானே நியாயம்? ஆனால் சினிமாவில் மட்டும் என்ன நிகழ்கிறது? சினிமாவையே சுவாசிப்பதோடு அதைப் பற்றியே பெரிதும் யோசித்துக் கொண்டிருக்கும் கமலை விடவும் 'கமர்ஷியல் ஹீரோ'வான ரஜினிக்குத்தான் மக்களிடையே அதிக புகழும் செல்வாக்கும் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டின் நிலைமையே தலைகீழாக மாறும் என்று மக்களின் ஒரு பகுதி தீவிரமாக நம்பிய காலகட்டம் கூட இருந்தது. எனவே அதிகாரத்தை தூக்கி அவரிடம் தருவதற்கு தயாராக இருந்தது.

நாம் இந்தத் தொடரின் ஆதாரப் புள்ளியாக பேசிக் கொண்டிருக்கும் விஷயமும் இதுதான். சமமான இரு முன்னணி ஆளுமைகள் சினிமாவில் இருந்தாலும் ஒருவர் ஓரடி முன்னே இருப்பார். அடுத்தவர் அடுத்த படியில் நிற்பார். ஏறத்தாழ எம்.ஜி.ஆர் - சிவாஜி காலகட்டத்தில் நிகழ்ந்த அதே விஷயம், ரஜினி - கமல் காலகட்டத்திலும் தொடர்வதைக் காண முடிகிறது. சிவாஜியைப் போலவே நடிப்பில் சிறந்த விளங்குகிற கமலால், சிவாஜியைப் போலவே மக்களின் செல்வாக்கைப் பெற முடியவில்லை. மாறாக எம்.ஜி.ஆருக்கு நிகரான செல்வாக்கை ரஜினி பெற்றிருந்தார்.

அருணாச்சலம் படத்தின் போது ரஜினி, சுந்தர்.சி-யுடன் கிரேஸி மோகன்
அருணாச்சலம் படத்தின் போது ரஜினி, சுந்தர்.சி-யுடன் கிரேஸி மோகன்

இந்தப் போக்கிற்கு அடிப்படையான காரணம் என்ன? மறுபடியும் அதேதான். நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை துல்லியமாக பிரித்துக் கொள்ளும் பயிற்சி பொது சமூகத்திற்கு அறவே இல்லை. சினிமாவில் ஏழைகளின் கண்ணீரைத் துடைத்து விடும் ஹீரோ, நிஜ வாழ்விலும் தன் துயரங்களைத் தீர்த்து விடுவான் என்று வெள்ளந்தியாக நம்புகிறார்கள். '’நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்'’ என்று ஹீரோ திரையில் பாடுவதை உண்மை என்று நம்பி அவரையே தங்களை ஆள்பவனாக தேர்ந்தெடுக்கும் எல்லைக்குச் சென்று விடுகிறார்கள். ஊதப்பட்டிருக்கும் பிம்பங்களின் தோற்றங்களில் மயங்கி அவற்றை அசல் என்று நம்பி விடுகிறார்கள்.

தற்போது இந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வந்தாலும் பெரும்பான்மையாக மறையும் போதுதான் சமூகத்தில் அரசியல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை சினிமா நடிகரை நோக்கி 'தலைவா... எங்களை ஆள வா' என்கிற அபத்தமான கோஷங்கள் மறையாது.

சிறந்த நடிகராக இருக்கும் ஒரு கலைஞனைக் காட்டிலும் சிறந்த 'கமர்ஷியல் ஹீரோ'வைத்தான் பெரும்பாலான பார்வையாளர்கள் இங்கு அதிகம் ரசிக்கிறார்கள். அவரை மையப்புள்ளியாக கொண்டுதான் சினிமாத்துறையே இயங்குவதைப் போன்ற ஒரு பிரமை உருவாகி விடுகிறது. ஹீரோக்களுக்காக 'உருவாக்கப்படும்' கதைகளை நாம் விழுந்து விழுந்து ரசிக்கும் வரை இந்த நிலையில் மாற்றம் ஏற்படாது. கதைக்காக மட்டுமே ஹீரோ என்கிற நிலைமை ஏற்பட வேண்டும். ஆக, மக்களின் ரசனை மாற்றமும் ஒரு முக்கியமான காரணி.

கமலை விடவும் ரஜினியின் செல்வாக்கு அதிகமிருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகத் தோன்றுகிறது. தன்னை அறிவுஜீவியாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு எப்போதுமே அதிக ஆர்வமுண்டு. அவரின் நேர்காணல்கள், கவிதைகள், உரையாடல்கள், ட்வீட்கள், வாசிக்கும் நூல்கள், காட்டும் மேற்கோள்கள், சுட்டிக் காட்டும் அறிஞர்கள் போன்றவற்றைக் கண்டால் இது நன்கு தெரியும். தன்னைச் சுற்றிலும் அறிஞர் கூட்டம் ஒன்று நண்பர்களாக இருப்பதையே கமல் விரும்புவார். அவர்களிடமுள்ள அறிவை தானும் பெற்றுக் கொள்வதற்கான பிரயத்தனங்களை நிறைய செய்வார். தமிழ் இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும் புள்ளிகளில் ஒருவராக கமல் இருந்தார். எனவேதான் சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களால் தமிழ் சினிமாவிற்குள் வர முடிந்தது.

ஆனால், சமூகம் என்பது பொதுவாக அறிவுஜீவிகளை சற்று தூர நின்று வியந்து பார்ப்பதோடு நின்று விடும். ஏன், சமயங்களில் கிண்டல் கூட செய்யும். அறிவின் பிரகாசம் கண்டு ஏற்படும் சமூகத்திற்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு அடிப்படையான காரணம். எந்தவொரு சிறந்த அறிவாளியும் வாழும் காலத்தில் சமூகத்தால் அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. காலம் கடந்த பிறகே அவரின் மேதமையை உணர்ந்து கொண்டாட ஆரம்பிப்பார்கள். அப்படி கொண்டாடப்படாமலேயே புதைந்து போன அறிஞர்களும் ஏராளமாக உண்டு.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
ஒருவகையில் கமலின் அறிவுஜீவித்தனம், அது குறித்த அவரின் பாவனைகள் போன்ற சமாச்சாரங்கள் பொதுச்சமூகத்திலிருந்து அவரைச் சற்று விலக்கி வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் அவரும் 'கமர்ஷியல் ஹீரோ'வாக நிறைய நடித்திருந்தாலும், கணிசமான ரசிகர்களைப் பெற்றிருந்தாலும் ஒரு சராசரி ரசிகன், கமலை சற்று அந்நியமாகவே பார்க்கிறான் என்றே தோன்றுகிறது.

ஆனால், இதன் எதிர்முனையில் ரஜினியைக் கவனியுங்கள். தன்னை மிக எளிமையானவராக, வெள்ளந்தியானவராக, ஆன்மீக நம்பிக்கையுள்ளவராக காட்டிக் கொள்கிறார். ரஜினியின் எளிமை குறித்து ஏராளமான அனுபவங்கள், சம்பவங்கள், கதைகள் தமிழ்த் திரையுலகில் உலவுகின்றன. '’உணவை தன் கையால் தானே எடுத்துச் சாப்பிட்டார். எத்தனை எளிமை?!" என்கிற எல்லை வரை ரஜினியின் எளிமை மிகவும் சிலாகிக்கப்படுகிறது. "உங்களோட அரசியல் கொள்கை என்னன்னு கேட்டாங்க.. எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு" என்று மேடையிலேயே வெள்ளந்தியாக 'அரசியல்' பேசுமளவிற்கு ரஜினி இருக்கிறார். ஒருவகையில் ரஜினியின் இந்த எளிமையான பிம்பம் மக்களிடம் அவரை நெருக்கமாக கொண்டு சேர்த்திருக்கிறது. தன்னுடைய பலத்தைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளாதது மட்டுமல்ல, தன்னுடைய பலவீனங்களையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நேர்மையாளராக ரஜினி இருக்கிறார்.

கமலின் அறிவுஜீவி பாவனையை விடவும் ரஜினியின் இந்த வெள்ளந்தி பிம்பம்தான் மக்களை அதிகம் வசீகரித்திருக்கிறதா?

அடுத்த வாரத்தில் விரிவாக அலசலாம்!