Published:Updated:

நானும் நீயுமா - 2: போட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் யார்?

பி.யு சின்னப்பா, தியாகராஜ பாகவதர்

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா - 2: போட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் யார்?

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

Published:Updated:
பி.யு சின்னப்பா, தியாகராஜ பாகவதர்
இந்தத் தொடரின் முதல் வார கட்டுரையில், எப்படி தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகள் எதிரும் புதிருமாக இயங்கும் வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதின் அடிப்படையைப் பார்த்தோம். இரண்டாவது வாரத்திற்குள் செல்வதற்கு முன்னால் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

‘’நாம் ஏன் பழைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்?’’ என்பது போன்ற சலிப்பான கேள்விகளை கடந்த பதிவின் பின்னூட்டங்களில் பார்த்தேன். ஒரு வீட்டிற்கு அஸ்திவாரம் அவசியமா என்பதைப் போன்ற கேள்வி இது. ஆம்… கடந்த கால வரலாற்றின் மீதுதான் நிகழ்கால வரலாறு நின்று கொண்டிருக்கிறது. எனவே நிகழ்காலத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள நாம் கடந்த காலத்தை நோக்கி நிச்சயம் பயணித்தேயாக வேண்டும்.

இரண்டாவது ‘’சினிமா நடிகர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அவசியம்தானா?’’ என்கிற நோக்கிலான கேள்விகள்.

தமிழ் சமூகம் சினிமா நடிகர்களின் மீதான மோகத்திலிருந்து பெருமளவும் விலகிவிட்டதா என்பதை யோசித்துப் பார்த்தாலே இதற்கான விடை கிடைத்து விடும். இன்றும் கூட அரசியலுக்கு வரும் நடிகர்களிடம் அதிகாரத்தை அப்படியே தூக்கிக் கொடுத்து விடும் மனோபாவம் ஏறத்தாழ அப்படியே நீடிக்கிறது.

நானும் நீயுமா?
நானும் நீயுமா?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால் ஒருவர் புகழ்பெற்ற நடிகர் என்கிற ஒரே காரணத்தினாலேயே அவருடைய அரசியல் கட்சிக்கு வாக்களிப்பதைப் போன்ற அவலம் வேறில்லை. கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை இன்றைய இளைய தலைமுறையினர் கூட பெரும்பாலும் புரிந்து கொள்ளவில்லை. தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்காக சமூகவலைத்தளங்களில் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டைகளை இன்றும் கூட வேதனையுடன் பார்க்க முடிகிறது.

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. புகழ்பெற்ற நடிகர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்கள் தனிநபர்கள்தான். அது தொடர்பான ஆசாபாசங்கள், போட்டி மனப்பான்மைகள் அவர்களுக்குள்ளும் உண்டு. எனவே அவர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் நம்மைப் போன்ற மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்.

ஓகே… முன்னுரை போதும். இரண்டாவது வாரத்திற்குள் சட்டென்று நுழைந்து விடுவோம்!

தொலைக்காட்சி சேனல்களைத் திருப்பும்போது கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் காட்சிகள் வருவதை சில நொடிகள் கூட இளைய தலைமுறையினரால் சகிக்க முடிவதில்லை. சட்டென்று திருப்பி 'ரகிட ரகிட ரகிட' என்பது போன்ற பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே இந்தத் தொடரிலும் கறுப்பு - வெள்ளை காலத்தை சட்டென்று முடித்து விட்டு கலர் ரீலுக்குள் விரைவில் நுழைந்து விடலாம். கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் மற்றும் அவருக்கு இணையாக சாதனை புரிந்த பி.யூ.சின்னப்பா பற்றி பார்த்தோம்.

இருவரின் இசைப்பாணியும் வெவ்வேறாக இருந்தது. பாகவதரை விடவும் சின்னப்பாவின் பாடும் முறையை ஒரு படி மேலே வைக்கிறார்கள் இசை விமர்சகர்கள். ஆனால், சின்னப்பாவை விடவும் பாகவதரே அதிக புகழும் செல்வாக்கும் பெற்றிருந்தார். காரணம் அவரின் பிரகாசமான தோற்றம். அவரது அழகில் மயங்கி அவரை பார்க்கத் துடித்தவர்களில் பெண்களுக்கு நிகராக ஆண் ரசிகர்களும் இருந்தார்கள். அவரின் சிகையலங்காரம் உள்ளிட்ட பல விஷயங்களை நகலெடுத்தார்கள். 'பாகவதர் கிராப்' என்பது அந்தக் காலத்தில் புகழ்பெற்றதாக இருந்தது. இந்த விஷயத்திலும் தமிழ் ரசிகர்கள்தான் முன்னோடி.

தியாகராஜ பாகவதர்
தியாகராஜ பாகவதர்
ஏறத்தாழ சமமான திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஒருவர் முன்னே நிற்கிறார், மற்றொருவர் ஒருபடி கீழே நிற்கிறார் என்று பார்த்தோம் அல்லவா? அதற்கான துவக்க உதாரணம்தான் பாகவதரும் சின்னப்பாவும்.

இத்தனைக்கும் பாகவதரோடு ஒப்பிடும் போது சின்னப்பாதான் சிறந்த நடிகர். முறையாக சண்டை பயின்றவர். தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் (உத்தமபுத்திரன் - 1940). மூன்று வேடங்களில் நடித்தவரும் இவர்தான். அப்படி இவர் நடித்த 'மங்கையர்க்கரசி' 1949-ல் வெளியானது. இது மட்டுமல்ல 'ஆர்யமாலா' (1941) என்கிற திரைப்படத்தில் பத்து வெவ்வேறு வேடங்களில் தோன்றி அசத்தினார்.

கமல்ஹாசனின் 'தசாவதாரம்’ படத்திற்கு முன்னோடி சின்னப்பாதான். (இன்னொருவர் எம்.என்.நம்பியார்). பாகவதரை விடவும் ஒரு முறையான கதாநாயகனாக பல்வேறு திறமைகளை சின்னப்பா கொண்டிருந்தாலும் அவரையும் முந்திக் கொண்டு பாகவதரின் கொடிதான் உயரப் பறந்தது. காரணம் அவரது அழகான தோற்றம். ஒருவரின் திறமையை விடவும் அவரின் புறத்தோற்றத்திற்கு நாம் அதிக மதிப்பளிக்கிறோம் என்கிற அணுகுமுறை இன்றும் கூட நீடிக்கிறது.

‘’ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது" என்கிற பொன்மொழிக்கேற்ப இப்படிப்பட்ட இரு ஆளுமைகளும் இணைந்து பங்காற்ற மாட்டார்கள். ஒரு படத்தில் நடிப்பதன் புகழும் வணிகமதிப்பு மொத்தமும் தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மையே இதற்கு பிரதான காரணம். இது ஒருவகையில் ஆரோக்கியமான போட்டியாக இருந்தாலும் சமயங்களில் கோடு தாண்டுவதுண்டு.

தியாகராஜ பாகவதரும், சின்னப்பாவும் எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை. விதிவிலக்காக ஒன்று நிகழ்ந்தது. ஆனால் அந்த அதிசயம் சினிமாவில் நடைபெறவில்லை. நாடகத்தில் நடந்தது. 'பவளக்கொடி' என்னும் நாடகத்தில் பாகவதர் அர்ஜூனனாகவும், சின்னப்பா கிருஷ்ணனாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்கள்.

10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு சின்னப்பா
10 வேடத்தில் நடித்த முதல் நடிகர் பி.யு சின்னப்பா

இதுபோன்ற கலைஞர்கள் நாடக மேடைகளில் ஒருவரையொருவர் முந்தி தங்களின் திறமையைக் காண்பித்து ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற வேண்டும் என்று குறியாக இருப்பார்கள். எனவே நாடகத்தில் இல்லாத விஷயங்களைக் கூட மேடையில் சட்டென்று சமயோசிதமாக செய்து பாராட்டுக்களைப் பெற்று விடுவார்கள். 'பவளக்கொடி' நாடகத்திலும் இது போன்ற ருசிகரமான சம்பவம் நடந்தது. பாகவதரின் அற்புதமான குரலில் மயங்கிக் கிடந்த ரசிகர்களை, தனது திடீர் யோசனையால் நடித்து முந்த முயன்றார் சின்னப்பா. பாகவதர் இதற்கு முதலில் கோபித்துக் கொண்டாலும் பிறகு சின்னப்பாவின் திறமையைப் பாராட்டினார்.

வானத்தில் இருக்கும் சூரியன், நிலவு போல இப்படிப்பட்ட இரு ஆளுமைகள் திரையில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் நட்சத்திரங்கள் போல சிலரும் இருப்பார்கள். இவர்களுக்கான ரசிகர் பட்டாளமும் உருவாவதுண்டு. அப்படியாக பாகவதர் என்கிற சூரியனையும், சின்னப்பா என்கிற நிலவையும் தாண்டி நட்சத்திரமாக ஜொலித்தவர் டி.ஆர்.மகாலிங்கம். ‘’செந்தமிழ் தேன்மொழியாள்’’ என்கிற அந்தக் காலத்து ஹிட் பாடலைக் குறிப்பிட்டால் இப்போதைய தலைமுறையினருக்கு கூட நினைவிற்கு வந்து விடும். டி.ஆர்.மகாலிங்கமும் அற்புதமான குரல் வளத்தைக் கொண்டவர். தமக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருந்தார். மகாலிங்கத்தைப் போலவே அந்தக் காலத்தில் வேறு சில நட்சத்திரங்களும் இருந்தார்கள்.

என்றாலும் இந்தக் காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும் மட்டுமே. இந்த இரு ஆண்களுக்கு நிகராக புகழ்பெற்ற நடிகையைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும்… அல்லவா? அந்த வகையில் தமிழ் சினிமாவின் முதல் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று டி.ஆர்.ராஜகுமாரியைச் சொல்லலாம். இந்தக் கனவுக்கன்னியின் அழகைப் பார்த்து பெருமூச்சு விட்டபடி மறுபடி மறுபடி இவரது திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டாடினார்கள் அந்தக் காலத்து ரசிகர்கள்.

காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி...
காந்தக் கண்.. கவர்ந்திழுக்கும் நடிப்பு... அன்றைய நயன்தாரா டி.ஆர்.ராஜகுமாரி...

என்னதான் ஒரு நடிகை அதிக திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஓர் ஆண் நடிகரின் புகழுக்கும் செல்வாக்குக்கும் இணையாக பெண்களால் நகர முடிந்ததில்லை. ஏறத்தாழ இன்றும் கூட இந்த நிலைமைதான் தொடர்கிறது. நயன்தாரா போன்ற அரிதான சில நடிகைகளால் சூழல் மாறினாலும் இன்னமும் ஆண் நடிகர்கள்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சுகிறார்கள்.

இனி இதற்கு அடுத்தக் காலக்கட்டத்திற்குள் நுழைவோம். அடுத்த வார இரு பெரும் ஆளுமைகள்… எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி!

- போட்டிப் போடுவார்கள்!