Published:Updated:

எம்ஜிஆர்-சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம் `கூண்டுக்கிளி' - படுதோல்வியாகி கூண்டுக்குள் முடங்கியது ஏன்?

கூண்டுக்கிளி

'நானும் நீயுமா?' தொடரின் 9-ம் பகுதி... இன்றைய பதிவில் எம்ஜிஆர் - சிவாஜி சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி மற்றும் கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த 'எதிரொலி' படங்களை அலசியிருக்கிறார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

எம்ஜிஆர்-சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம் `கூண்டுக்கிளி' - படுதோல்வியாகி கூண்டுக்குள் முடங்கியது ஏன்?

'நானும் நீயுமா?' தொடரின் 9-ம் பகுதி... இன்றைய பதிவில் எம்ஜிஆர் - சிவாஜி சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி மற்றும் கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த 'எதிரொலி' படங்களை அலசியிருக்கிறார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

Published:Updated:
கூண்டுக்கிளி

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகதவரும், அவரது காலத்தில் இணை நட்சத்திரமாக ஜொலித்த பி.யூ.சின்னப்பாவும் எந்தவொரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை. விதிவிலக்காக 'பவளக்கொடி' என்கிற நாடகத்தில் மட்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கடந்த வார அத்தியாயங்களில் ஒன்றில் ஏற்கெனவே பார்த்திருந்தோம்.

'ஒரு உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது’ என்கிற இந்த விஷயம், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கும் அப்படியே பொருந்தும். ஏறத்தாழ இருவரும் ஒரே காலக்கட்டத்தில் வளர்ந்து முன்னணி நிலைக்கு நகர்ந்திருந்தாலும் இணைந்து நடித்ததற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. விதிவிலக்காக ஒரேயொரு முறை அந்த அதிசயம் நிகழ்ந்தது.

1954-ல் வெளியான 'கூண்டுக்கிளி'தான் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோர் இணைந்து நடித்த ஒரேயொரு திரைப்படம். தனது தம்பியான டி.ஆர்.ராமண்ணாவை சிறந்த இயக்குநராக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார் டி.ஆர்.ராஜகுமாரி. இருவரும் ஒப்புக்கொண்டார். இரு முன்னணி நடிகர்கள் முதன் முதலில் இணையும் திரைப்படம் என்பதால் இது விசேஷமான அம்சமாக அமைந்து படத்திற்கான கூடுதல் கவனம் கிடைப்பதோடு வசூலையும் வாரிக் குவிக்கும் என்று கனவு கண்டார் இயக்குநர் ராமண்ணா.

எம்ஜிஆர் - சிவாஜி
எம்ஜிஆர் - சிவாஜி

ஆனால், படம் வணிக ரீதியான தோல்வியைத் தழுவியது. பார்வையாளர்களின் நோக்கில், இது எம்.ஜி,ஆர் படமாகவும் அல்லாமல், சிவாஜி படமாகவும் அல்லாமல் 'இரண்டாங்கெட்டானாக' அமைந்ததே காரணம். இரு பிரபல நடிகர்களுக்கேற்ற கதையைத்தான் உருவாக்கத் தவறியதே படத்தின் தோல்விக்கு காரணம் என்பதை தாமதமாக உணர்ந்தார் ராமண்ணா.

மறுபடியும் அதேதான். சினிமா ஹீரோக்களுக்கு என்று உருவாகி விட்ட இமேஜை அனைத்துத் திரைப்படங்களிலும் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதுதான் இவ்வகையான விபத்துக்களுக்கு காரணம். ‘'புதுமையான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வருவதில்லையே?!" என்று ஆதங்கப்படுபவர்களும் அவர்களேதான். ஆனால், புதிய முயற்சிகள் மலரும்போது பல சமயங்களில் கருணையேயின்றி நிராகரிப்பவர்களும் அவர்களேதான்.

'கூண்டுக்கிளி'யின் கதை பிரபல எழுத்தாளர் விந்தனால் உருவாக்கப்பட்டது. சிவாஜி விரும்பிய ஒரு பெண்ணை, சந்தர்ப்ப சூழலால் எம்.ஜி.ஆர் திருமணம் செய்து கொள்வார். இதனால் மனம் பேதலித்துப் போய் தற்கொலை செய்ய முயலும் சிவாஜியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கேயே தங்க வைப்பார் எம்.ஜி.ஆர். அவருக்கு சிவாஜியின் 'முன்னாள் காதல்' பற்றிய விவரம் தெரியாது. எம்.ஜி.ஆர் சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்படும் போது, நண்பனின் மனைவி என்றும் பாராமல் அத்துமீற முயல்வார் சிவாஜி. இப்படி ஒரு முக்கோண காதலை அடிப்படையான அம்சமாக கொண்ட படமாக 'கூண்டுக்கிளி' அமைந்தது. இயக்குநர் ராமண்ணாவின் மனைவியான B.S. சரோஜா, நாயகியாக நடித்திருந்தார்.

'கூண்டுக்கிளி' திரைப்படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. எம்.ஏ.ரெஹ்மானின் சிறப்பான ஒளிப்பதிவு தனித்துக் கவனிக்கப்பட்டது. கதை, திரைக்கதை, இசை, தொழில்நுட்ப அம்சங்கள் என்று பல விதங்களிலும் 'கூண்டுக்கிளி' சிறப்பாக அமைந்திருந்தாலும் வணிகரீதியாக தோல்வி அடைந்ததற்கு காரணம், ஹீரோக்களின் பின்னால் இருந்த பிம்பம். அவர்களை கதாபாத்திரங்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் ஹீரோ இமேஜோடு இணைத்துப் பார்த்ததுதான் இதன் தோல்விற்கு பிரதான காரணம்.

எம்ஜிஆர் - சிவாஜி
எம்ஜிஆர் - சிவாஜி

'தங்கராஜ்' என்னும் ஹீரோ பாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்க, தனது இமேஜ் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத சிவாஜி 'ஜீவா' என்னும் எதிர்மறையான பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

வளர்ந்து வரும் ஹீரோவாக சிவாஜி இருந்தாலும், 'மனோகரா' போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்திருந்தாலும், வில்லன் பாத்திரத்தில் நடிக்க சிவாஜி தயங்கவில்லை. ஒரு கதையில் தான் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதையே அவர் பிரதானமாக கவனித்தார். 'திரும்பிப் பார்', 'அந்த நாள்' போன்ற சில திரைப்படங்களில் அவர் ஏற்கெனவே வில்லன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இரு முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்திருக்கும் முதல் திரைப்படம் 'கூண்டுக்கிளி' என்பதால் துவக்க நாட்களில் இரு தரப்பு ரசிகர்களும் படம் பார்க்க ஆவலாக அரங்கினுள் குவிந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த 'ஹீரோ' அதில் இல்லாததால் படம் படுதோல்வியடைந்தது. இது மட்டுமல்ல, இரு தரப்பு ரசிகர்களும் திரையரங்குகளில் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்ததால் படம் விரைவிலேயே பெட்டிக்குள் போய் விட்டது. படத்தின் தலைப்பிற்கு ஏற்ப, இந்தத் திரைப்படமும் கூண்டுக்குள்ளேயே முடங்கிப் போனதுதான் பரிதாபம்.

இமேஜ் பார்க்காமல் தான் எதிர்மறையான பாத்திரங்களில் நடித்ததுதான், சமூகத்தில் தன் செல்வாக்கு ஓரடி பின்தங்கியிருப்பதற்கும் அரசியல் தோல்விகளுக்கும் காரணம் என்கிற விஷயத்தை சிவாஜி தாமதமாக உணர்ந்து வருந்தியிருக்க வேண்டும். எனவேதான் தன் 'சுய சரிதை' நூலில் ‘’நிஜ வாழ்க்கையில் நடிகர்களுக்கு பல கெட்ட வழக்கங்கள் இருந்தாலும் படங்களில் நல்லவன் போல் காட்டிக் கொண்டு, அரசியலில் நுழைந்து, மக்களுடைய மனதில் இடம் பிடிக்க வேண்டிய தத்துவம் எனக்கு அப்போது தெரியாது. என்னைப் பொறுத்தவரை வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமல்ல. நான் நடிகனா என்பதுதான் முக்கியம்...'’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

எம்ஜிஆர் - சிவாஜி
எம்ஜிஆர் - சிவாஜி

'கூண்டுக்கிளி'யைப் போலவே சிவாஜிக்கு நிகழ்ந்த இன்னொரு விபத்தையும் உதாரணமாக பார்க்கலாம். அது கே.பாலசந்தர் இயக்கிய 'எதிரொலி' என்கிற திரைப்படம். இது 1970-ல் வெளிவந்தது. 'இது எம்.ஜி.ஆர் படம், இது சிவாஜி படம்’ என்று நடிகர்களின் பெயர்களால் திரைப்படங்கள் அறியப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவை இயக்குநரின் பெயரால் அடையாளம் காணப்பட்ட பெருமையை உருவாக்கிய முன்னோடி இயக்குநர் ஸ்ரீதர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவராக கே. பாலசந்தர் இருந்தார். ‘'பாலசந்தர் படம்னா.. நிச்சயமா போகலாம்.. நல்லாயிருக்கும்" என்று பார்வையாளர்கள் பேசிக் கொள்ளுமளவிற்கு புதுமையான கதையம்சங்களை, சுவாரஸ்யமான முறையில் கையாண்ட இயக்குநராக பாலசந்தர் இருந்தார்.

ஒருபக்கம், புதுமையான இயக்குநர் பாலசந்தர். இன்னொரு பக்கம் சிவாஜி என்னும் சிறந்த நடிகர். இந்த இரு அற்புதங்களும் முதன் முதலில் இணையும் திரைப்படமானது நிச்சயமாக வெற்றியைக் கண்டிருக்க வேண்டும் அல்லவா? அதுதான் இல்லை. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

காரணம் இதிலும் சிவாஜி சற்று எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்ததுதான். 'எதிரொலி' திரைப்படத்தின் கதைப்படி சிவாஜி ஒரு நேர்மையான நீதிபதி. ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக இன்னொருவருக்குச் சொந்தமான பணத்தை எடுத்து விடுவார். இதை அறிந்து கொண்ட மேஜர் சுந்தர்ராஜன், இவரை பிளாக்மெயில் செய்து கொண்டே இருப்பார். தான் செய்து விட்ட தவறு தொடர்பான குற்றவுணர்ச்சி, மனத்தத்தளிப்பு, பதட்டம், அச்சம் போன்ற உணர்வுகளை படம் முழுவதும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி.

ஏறத்தாழ 'ஹிட்ச்காக்' பாணியின் சாயலில் அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்திருந்திருந்தது, 'எதிரொலி' திரைப்படம். இன்று பார்த்தாலும் கூட விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது என்பது உத்தரவாதம். ஆனால் அந்தச் சமயத்தில் பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு 'ஹீரோ' பிம்பம்தான் காரணம்.

எம்ஜிஆர் - சிவாஜி
எம்ஜிஆர் - சிவாஜி

‘’'நேர்மையாக இருக்க வேண்டிய ஹீரோ, இப்படி தவறு செய்து விட்டு படம் பூராவும் அதிர்ச்சியடையலாமா?" என்று பார்வையாளர்கள் எண்ணியிருக்கக்கூடும். இறுதியில் அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு ஹீரோ தன் நேர்மைக்கு திரும்பினாலும் கூட மக்கள் அவரை மன்னிக்கத் தயாராக இல்லை. ஒரு நடிகரை, சம்பந்தப்பட்ட பாத்திரமாக மட்டும் பொறுத்திப் பார்க்காமல் ஹீரோவாக பார்ப்பதே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம்.

சிவாஜியும் கே.பாலசந்தரும் இணைந்த முதல் திரைப்படம் 'எதிரொலி'. ஆனால் இதன் தோல்வி காரணமாகவோ, என்னவோ, இந்தக் கூட்டணி மறுபடியும் இணையவேயில்லை என்பதை தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பரிதாபங்களுள் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். கே.பாலசந்தர் இயக்கி, கமல் நாயகனாக நடித்த 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் ஜெமினிகணேசன் நடித்திருந்த பாத்திரத்திற்கு முதலில் சிவாஜியைத்தான் யோசித்து வைத்திருந்தார்களாம். ஆனால் என்ன காரணத்தினாலோ அது நிகழவில்லை.

நிஜ வாழக்கையில், எந்தவொரு மனிதனையும் கறுப்பு - வெள்ளையில் துல்லியமாகப் பிரித்துப் பார்க்குமளவிற்கு அவர் நல்லவர் - கெட்டவராக இருக்க முடியாது. ஒருவர் அடிப்படையில் நல்லியல்புகளைக் கொண்டவராக இருந்தாலும் சந்தர்ப்ப சூழல்களால் எங்காவது சறுக்கி விடுவார். அதிலிருந்து அவர் மீண்டு மறுபடியும் நல்ல பாதைக்குத் திரும்புவதுதான் யதார்த்தம். ஆனால் ஒரு கதையின் ஹீரோ என்பவர் 24x7 நல்லவராகவே இருக்க வேண்டும் என்கிற கற்பனையை மக்கள் வளர்த்துக் கொண்டனர்.

ஒருவகையில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் இதற்கு முன்னோடியாக அமைந்தன. எம்.ஜி.ஆர் துளிகூட எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்ப மாட்டார். ஏதாவது ஒரு காட்சியில் அவர் குடிப்பது போன்ற அரிதான காட்சி வந்தால் கூட, கூடுதல் காட்சியை வைத்து எப்படியாவது அதை சமன் செய்து விடுவார். மனச்சாட்சியின் வடிவில் இன்னொரு எம்.ஜி.ஆர் எதிரே தோன்றி '’சத்தியமாக சொல்.. நீ மனிதன்தானா?" என்று கேள்வி கேட்டு விட்டால் போதும். மக்கள் சமாதானம் ஆகி விடுவார்கள்.

சிவாஜி, எம்ஜிஆர்
சிவாஜி, எம்ஜிஆர்

இதைப் போலவே பெரும்பாலும் அனைத்துத் திரைப்படங்களிலும் எந்தவொரு பெண்ணிடமும் தானாக முன்வந்து எம்.ஜி.ஆர் தன் காதலைச் சொல்ல மாட்டார். மாறாக நாயகிகள்தான் இவர் மேலே விழுந்து விழுந்து காதலைச் சொல்வார்கள். விரக தாபத்தில் தவிப்பார்கள். அவர்கள் கனவு காணும் நோக்கில்தான் பெரும்பாலான 'டூயட் பாடல்கள்' அமைந்திருக்கும். இந்தப் பாடல்களில் நாயகிகளின் உடை முதற்கொண்டு கவர்ச்சியான அம்சங்கள் கூடுதலாக இருக்கும். ஒருவகையில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் வெற்றியடைந்ததற்கு இந்த கவர்ச்சி அம்சம் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது எனலாம்.

ஆனால் என்னதான் இந்தப் பாடல்கள் கவர்ச்சியாக அமைந்தாலும் மக்கள் எம்.ஜி.ஆரை தவறாக எண்ணிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் காட்சியின் படி அவர் ஒழுக்கமானவர். ‘இந்தப் பாழாப் போன ஹீரோயின்கள்தான் மேலே விழுந்து பிடுங்குகிறார்கள்' என்றே எண்ணிக் கொள்வார்கள். இது எம்.ஜி.ஆர் வகுத்துக் கொண்ட பாதை.

ஒரு ஹீரோ என்பவன் எப்போதும் நற்பண்புகளையும் நல்லியல்புகளையும் தீய பழக்கங்கள் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும் என்பது அவரது பாணி. இது ஒருவகையான பாசாங்கு மற்றும் தேய்வழக்கு என்று தோன்றினாலும் இப்போது வெளியாகும் 'ஹீரோ' திரைப்படங்களைப் பார்க்கும்போது நமக்கு மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் வேண்டும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் சினிமாவின் தாக்கம் என்பது சமூகத்தில் செலுத்தும் செல்வாக்கு என்பது இன்னமும் கூட குறையாமல் இருக்கிறது.

மறுபடியும் அதேதான். ஓரே மாதிரியான குணாதிசயத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் கிளிஷேவாக நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பிரமாண்டமான வெற்றியைத் தந்தன. சினிமாவிலும் அரசியலிலும் அவரது செல்வாக்கும் புகழும் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் விதவிதமான வெவ்வேறு பாத்திரங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும் சினிமாவில் பாராட்டுக்களைப் பெற முடிந்ததே ஒழிய, சிவாஜியால் அரசியலிலோ, சமூக செல்வாக்கிலோ வரவேற்பைப் பெற முடியவில்லை.

நானும் நீயுமா?
நானும் நீயுமா?

'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்பது இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி திரைப்படத்தில் வரும் ஒரு வசனம். அந்த மன்னன் கோணங்கித்தனங்கள் நிரம்பியவனாக இருந்தாலும் 'வருங்கால வரலாறு தன்னை எவ்வாறு நினைவு வைத்துக் கொள்ள வேண்டும், எவ்வாறு தன்னைப் பற்றிய வரலாறு எழுதப்பட வேண்டும்?' என்பது குறித்த அறிவையும் கவனத்தையும் கொண்டிருந்தான்.

'வரலாறு என்பது கடந்த கால சம்பவங்களால் உருவாவதல்ல ; கதைகளால் உருவாவது' - இப்படியொரு அற்புதமான வசனம் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்கிற பிரபல தொலைக்காட்சித் தொடரில் வரும். அது உண்மைதான்!