Published:Updated:

நானும் நீயுமா - 11: ஜெய்சங்கர் எனும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்… எம்ஜிஆர் பகையும், கருணாநிதி நட்பும்!

ஜெய்சங்கர்

'சி.ஐ.டி சங்கர்' போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து 'டிடெக்டிவ்' பாணியை தமிழில் வெற்றிகரமாக உருவாக்கிய முன்னோடி என்று ஜெய்சங்கரை சொல்லலாம். இதைப் போலவே கெளபாய் பாணி படங்களும் தமிழிற்கு வந்தது ஜெய்சங்கரின் மூலமாகத்தான்.

நானும் நீயுமா - 11: ஜெய்சங்கர் எனும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்… எம்ஜிஆர் பகையும், கருணாநிதி நட்பும்!

'சி.ஐ.டி சங்கர்' போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து 'டிடெக்டிவ்' பாணியை தமிழில் வெற்றிகரமாக உருவாக்கிய முன்னோடி என்று ஜெய்சங்கரை சொல்லலாம். இதைப் போலவே கெளபாய் பாணி படங்களும் தமிழிற்கு வந்தது ஜெய்சங்கரின் மூலமாகத்தான்.

Published:Updated:
ஜெய்சங்கர்
ரஜினி x கமல் காலக்கட்டத்திற்கு நகரலாம் என்று கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தோம். ஆனால் அறுபது, எழுபதுகளின் காலக்கட்டத்தில் மக்களின் மனங்களைக் கவர்ந்த இதர சில ஹீரோக்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று வாசக நணபர்கள் வேண்டுகோள் வைத்திருந்தார்கள். தட்ட முடியாத, நியாயமான வேண்டுகோள்.

தமிழ் சினிமாத் துறையில் எண்ணற்ற ஏராளமான ஆளுமைகள் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, பாலைய்யா, சந்திரபாபு, நாகேஷ் என்று தனித்துவம் கொண்ட மிகச் சிறந்த கலைஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பற்றி தனித்தனியாகவே ஒரு தொடர் எழுத முடியும். ஆனால் இந்தத் தொடரில் நாம் எடுத்துக் கொண்ட விஷயம் என்பது, ஒரு காலகட்டத்தில், முன்னணியில் எதிரும் புதிருமாக இயங்கும் இரு ஆளுமைகளைப் பற்றி மட்டுமே. அதில் ஒருவர் மட்டும் ஏன் அதிக செல்வாக்கைப் பெறுகிறார், இன்னொருவர் ஏன் சற்று பின்தங்கி விடுகிறார் என்பதை ஆராய்வதுதான் இதன் பிரதானமான குறிக்கோள். இந்த பிம்ப மோதல்களில் உள்ள முரண்கள், சுவாரசியங்கள், சமூக எதிர்வினைகளை அலசுவதுதான் அடிப்படையான நோக்கம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன்

என்றாலும் நண்பரின் வேண்டுகோளை ஏற்று, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் காலகட்டத்தில் மூன்றாம் நிலையில் இருந்த ஜெமினிகணேசனைத் தாண்டி செயல்பட்ட மூன்று ஹீரோக்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று ஹீரோக்களும் முன்னணியில் நின்று தீவிரமாக செயல்பட்ட காலத்தில் அவர்கள் 'மூவேந்தர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள் என்று பார்த்தோம் அல்லவா?... அதைப் போலவே அதற்கு அடுத்த பத்தாண்டுகள் கழித்து, அடுத்த நிலையில் 'மூவேந்தவர்களாக' நின்றவர்கள் என்று மூன்று நடிகர்களைப் பற்றி சொல்ல முடியும்.

இதில் முதலாமவர் ஜெய்சங்கர். என்னுடைய இளமைப் பருவம் என்பது ரஜினி x கமல் காலகட்டத்தைச் சேர்ந்தது. 'ஸ்டைல் மன்னன்' ரஜினிகாந்த் x 'காதல் இளவரசன்' கமல்ஹாசன் ஆகிய இருவரும்தான் பிரதானமாக என் பதின்ம வயதுகளில் சூழ்ந்திருந்தார்கள். என்றாலும் ஜெய்சங்கர் என்றவுடன் என் மனதில் தோன்றிய உடனடி அபிப்ராயம் என்னவெனில் ‘'ப்பா... இவன்தான்டா. ஹீரோ... பார்க்க எத்தனை அட்டகாசமா இருக்கான்" என்பதே. ஆம். 'நடை, உடை, பாவனை' என்று அனைத்திலும் மேனாட்டு கலாசார பாணியைப் பின்பற்றி மிக 'ஸ்டைலாக' தோன்றிய முன்னோடி நடிகர் என்று ஜெய்சங்கரை சொல்ல முடியும். படிய வாரப்பட்ட பளபளப்பான சுருள்முடி, வசீகரமான புன்னகை, நேர்த்தியான உடலமைப்பு, ஆங்கிலேயேருக்கு சவால் விடும் நாகரிக உடை என்று சகல விதங்களிலும் ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்கு நிகரான தோற்றத்தைக் கொண்டிருந்தவர் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஆக்ஷன் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இளைஞர்களை பரவசப்படுத்தியவர் என்று ஜெய்சங்கரை மட்டுமே சொல்ல முடியும். இதனால்தான் அவருக்கு 'தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்' என்ற செல்லமான பட்டமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்தது. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை யாக நமக்கு கிடைத்த 'சீன் கானரி' இவர்தான்.

சென்னை, புதுக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சங்கருக்கு இயல்பிலேயே நடிப்பார்வம் இருந்தது. 'சோ'வின் நாடகக்குழுவில் சிறு வேடங்களில் நடித்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பு சங்கருக்கு இருந்தது. '’எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில் நீ என்ன செய்து விட முடியும்?" என்கிற சோவின் அக்கறையுடன் கூடிய நிராகரிப்பு கூட சங்கரின் ஆவலைத் தடுக்கவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்தார். இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜோசப் தளியத்தின் மூலம் சங்கருக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது. சங்கர் என்கிற பெயரை 'ஜெய்சங்கர்' என்று மாற்றிய ஜோசப் தளியத், தான் இயக்கி 1965-ம் ஆண்டு வெளியான 'இரவும் பகலும்' என்கிற திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார்.

அந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையின் போது 'இரவும் பகலும்' திரைப்படம் வெளியானது. அதே நாளில் எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை', சிவாஜியின் 'பழனி' ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகின. பார்வையாளர்களின் அதிக எதிர்பார்ப்பானது, முன்னணியில் இருந்த இரண்டு ஜெயிக்கும் குதிரைகளின் மீது மட்டுமே அதிகம் இருந்தன. ஆனால் எவரும் எதிர்பாராதவிதமாக அந்த ரேஸில் கலந்து கொண்டு ஒரு சாதாரண குதிரையும், இந்த இரண்டு குதிரைகளோடு போட்டி போட்டு முன்னணிக்கு நகர்ந்ததுதான் ஆச்சரியம். ஆம். 'இரவும் பகலும்' என்கிற திரைப்பட கதையின் எளிமையும், பாடல்களின் இனிமையும், படத்தின் விறுவிறுப்பும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. '’யாரடா இது ஜெய்சங்கர்... பார்க்க ஸ்டைலாக இருக்கிறாரே?!" என்று இளைஞர்களின் கவனம் ஜெய்சங்கரின் மீது குவிந்தது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இதன் பிறகு ஜெய்சங்கரின் வேகத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு ஜெய்சங்கரின் திரைப்படம் வெளியாகும் என்கிற நிலைமை அன்று இருந்தது. எனவே 'வெள்ளிக்கிழமை ஹீரோ' என்கிற செல்லப்பெயரும் ஜெய்சங்கருக்கு கிடைத்தது. சிறு முதலீட்டுத் திரைப்படங்களின் ஆபத்பாந்தவனாக ஜெய்சங்கர் இருந்தார். மிக குறைந்த அளவு முதலீடு இருந்தால் கூட போதும், ஜெய்சங்கரின் கால்ஷீட்டைப் பெற்று விடலாம் என்கிற நம்பிக்கையை லோ -பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படுத்தினார். எனவே எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் செய்வதை கனவு கூட காண முடியாத சிறிய தயாரிப்பாளர்கள், ஜெய்சங்கரை மொய்த்தனர். இதனால் ஜெய்சங்கரின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தன.

'அடடே!.. ஜெய்சங்கர் அதிக பணத்தாசை பிடித்தவர் போலிருக்கிறது. எனவேதான் வதவதவென்று நிறைய படங்களை ஒப்புக் கொண்டு நடித்துத் தள்ளினார் போலிருக்கிறது' என்று சிலர் எண்ணக்கூடும். ஆனால் நிலைமை முற்றிலும் வேறானது. தனக்கு வரவேண்டிய சம்பளத்தில் கணிசமான பகுதி பாக்கி இருக்கிறது என்றாலும் கூட அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் 'பணப் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு நிற்கக் கூடாது' என்று தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் விதத்தில் ஜெய்சங்கருக்கு நிகரில்லை என்கிறார்கள்.

தனக்கு சம்பளம் வராதது மட்டுமல்ல, 'நிதிப்பற்றாக்குறையினால் நின்று போன படப்பிடிப்புகளைக் கூட முன் நின்று ஆதரித்து படம் வெளிவர உதவியவர்' என்றும் சொல்லப்படுகிறது. ஜெய்சங்கரின் இந்த நல்ல குணத்தை, பல தயாரிப்பாளர்கள் மோசமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஜெய்சங்கருக்கு தரப்பட்டு, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலைகள், ஒரு சூட்கேஸ் நிறைய இருந்ததாக சொல்லப்படுகிறது. இது தவிர கண்ணுக்குத் தெரியாமல் பல உதவிகளை ஜெய்சங்கர் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்திருக்கிறார். பணம் என்பதை ஒரு முக்கியமான அம்சமாக அவர் கருதவில்லை.

'கௌபாய்' ஜெய்சங்கர்
'கௌபாய்' ஜெய்சங்கர்

'சி.ஐ.டி சங்கர்' போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து 'டிடெக்டிவ்' பாணியை தமிழில் வெற்றிகரமாக உருவாக்கிய முன்னோடி என்று ஜெய்சங்கரை சொல்லலாம். இதைப் போலவே கெளபாய் பாணி படங்களும் தமிழிற்கு வந்தது ஜெய்சங்கரின் மூலமாகத்தான். 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரித்த பெரும்பாலான படங்களின் நாயகன் ஜெய்சங்கர்தான். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்து தனக்கென்று ஒரு தனியான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டார். ஆனால் வெறுமனே ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் நகைச்சுவை, குணச்சித்திரம் போன்ற இதர ஏரியாக்களிலும் ஜெய்சங்கர் வெற்றி பெறத் தவறவில்லை. 'குழந்தையும் தெய்வமும்', 'பட்டிணத்தில் பூதம்' போன்ற வெற்றிப்படங்கள் ஜெய்சங்கருக்கு தனியான அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தன. கே.பாலசந்தரின் இயக்கத்தில் 'பூவா தலையா?' 'நூற்றுக்கு நூறு' போன்ற வித்தியாசமான பாத்திரங்களிலும் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

குறைந்த பட்ஜெட், இனிமையான பாடல்கள், அழகான நாயகிகள், அடிப்படையில் எளிமையான கதை போன்ற அம்சங்கள் ஜெய்சங்கரின் கிராஃபை உயர்த்திக் கொண்டே சென்றன. ஆனால் இவர் அதிகமான படங்களை ஒப்புக் கொண்டதின் மூலம் பல திரைப்படங்கள் தோல்வியடைந்து காணாமல் போயின என்பதையும் சொல்ல வேண்டும். '’நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் நடித்து எனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் போனேனே?" என்று பிற்காலத்தில் ஜெய்சங்கர் வருந்தியதாக சொல்வார்கள்.

ஜெய்சங்கரின் வசீகரமான புன்னகையும் இதமான நடவடிக்கைகளும் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அப்படியே வெளிப்பட்டது. "அண்ணே", 'சார்" என்று மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், தயாரிப்பாளர் முதல் லைட்மேன் வரை பாரபட்சமில்லாமல் அனைவரையும் ‘'ஹாய்... ஹாய்'’ என்று தோழமையான புன்னகையுடன் கையசைத்துக் கொண்டே முகமன் கூறுவது ஜெய்சங்கரின் வழக்கமாகவும் பிறகு தனித்த அடையாளமாகவும் ஆகிப் போனது. பணக்காரன், ஏழை என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான நட்புடன் பழகுவதும், அணுகுவதும் ஜெய்சங்கரின் தனித்த பண்பாகவும் அடையாளமாகவும் இருந்தது. இதனாலேயே சர்ச்சைக்கு ஆளாகாத அரிய நடிகர்களுள் முக்கியமானவராக ஜெய்சங்கர் இருந்தார். இதைப் போலவே பத்திரிகையாளர்களிடமும் நட்பு பாராட்டுவதில் ஜெய்சங்கருக்கு இணை யாருமில்லை. இவரைப் பற்றிய கிசுகிசுக்களோ, வம்புகளோ அந்தக் காலத்தில் அதிகம் வந்ததில்லை.

ஜெயலலிதா - ஜெய்சங்கர்
ஜெயலலிதா - ஜெய்சங்கர்

என்றாலும் ஜெயலலிதாவுடன் தொடர்ச்சியாக நடித்ததால் ஜெய்சங்கரின் மீது எம்.ஜி.ஆருக்கு அதிருப்தியும் கோபமும் இருந்ததாக சொல்வார்கள். இதனால் கருணாநிதி வசனம் எழுதிய சில திரைப்படங்களில் ஜெய்சங்கர் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், திமுகவில் இணைவதற்கான அழைப்பும் சந்தர்ப்பமும் ஏற்பட்ட போது அதை நாசூக்காக மறுத்து விட்டார் ஜெய்சங்கர். '’எப்போதுமே அரசியலில் எனக்கு நாட்டமில்லை’' என்பது இவரது தீர்மானமான கொள்கையாக இருந்தது.

என்னதான் வெற்றிகரமான நாயகனாக இருந்தாலும், தலைமுறை மாற்றம் மற்றும் ரசனை மாற்றங்கள் நிகழும் போது எவருக்குமே வீழ்ச்சி ஏற்படவே செய்யும். அந்த நிலைமை ஜெய்சங்கருக்கும் ஏற்பட்டது. வில்லன் பாத்திரம், குணச்சித்திர வேடம் போன்ற அழைப்புகள் ஜெய்சங்கருக்கு வந்தாலும் 'ஹீரோ என்கிற நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டுமா?" என்கிற சிறு தயக்கம் ஜெய்சங்கருக்குள் இருந்ததால் அந்த வாய்ப்புகளை தொடர்ச்சியாக மறுத்துக் கொண்டே வந்தார். ஆனால் 1980-ல் வெளிவந்த 'முரட்டுக்காளை' என்கிற திரைப்படம், நிலைமையை மாற்றி அமைத்தது.

இந்தத் திரைப்படத்தில் வில்லனாக ஜெய்சங்கர் நடித்தால் வித்தியாசமாக இருக்கும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும், தயாரிப்பாளர் சரவணனும் விரும்பினர். இருவருமே ஜெய்சங்கரின் நண்பர்கள்; நலம் விரும்பிகள். என்றாலும் இந்த வாய்ப்பை தயக்கத்துடன் மறுத்துக் கொண்டே வந்த ஜெய்சங்கர், ஒரு கட்டத்தில் 'நண்பர்கள் தனக்கு கெடுதலா நினைப்பார்கள்?' என்கிற யோசனையுடன் இந்த வாய்பை ஏற்றுக் கொண்டார்.

'முரட்டுக்காளை' திரைப்படத்தின் மூலம் ஜெய்சங்கரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. ஜெய்சங்கர் இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொள்வார் என்று அதன் ஹீரோவான ரஜினிகாந்த் கூட முதலில் நம்பவில்லை. ஆனால் இந்தத் தகவல் உறுதியானதைத் தொடர்ந்து '’கதையிலும் விளம்பரங்களிலும் தனக்கு நிகரான முக்கியத்துவம் ஜெய்சங்கருக்கும் தரப்பட வேண்டும்’' என்கிற வேண்டுகோளை தயாரிப்பு நிர்வாகத்திடம் வைத்தார் ரஜினி. பிறகு ரஜினியின் பல திரைப்படங்களில் ஜெய்சங்கர்தான் வில்லனாக நடித்தார். அதன் பிறகு பல குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

முரட்டுக்காளையில் வில்லனாக ஜெய்சங்கர், ரஜினியுடன் மோதும் காட்சி...
முரட்டுக்காளையில் வில்லனாக ஜெய்சங்கர், ரஜினியுடன் மோதும் காட்சி...

ஹீரோவாக நடித்த காலக்கட்டத்தை விடவும் ஜெய்சங்கர் அதிகம் சம்பாதித்தது இந்த காலகட்டத்தில்தான். எனவே '’வில்லனாக நடிக்க முடிவு செய்தது எனக்கு நன்மையையே செய்தது’' என்று பிற்காலத்தில் மகிழ்ந்து சொல்லியிருக்கிறார் ஜெய்சங்கர். பிரபலமான ஹீரோக்களின் வாரிசுகளும் சினிமாத்துறையில் நுழைவது வழக்கமாக இருந்த சூழலில், இதிலும் விதிவிலக்காக இருந்தவர் ஜெய்சங்கர். அவரது மூத்த மகனான விஜய சங்கர் பிரபல கண் மருத்துவராக உள்ளார்.

சினிமாத்துறையில் நீண்ட காலம் வெற்றிகரமாக இயங்கினாலும் 'சினிமாத்தனம் அறவே இல்லாத அற்புத மனிதர்களுள்' ஒருவராக ஜெய்சங்கரை சொல்ல முடியும். திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஹீரோவாக விளங்கிய உன்னதமான நபர் ஜெய்சங்கர். அவருடைய சில தேர்ந்தெடுத்த திரைப்படங்களை இன்றைய தலைமுறையினர் கூட ரசிக்க முடியும். இந்த 'இளைய மூவேந்தர்களில்' இதர இருவரைப் பற்றி அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.