Published:Updated:

`மூன்று முடிச்சு’ டு `கபாலி’ … ரஜினி கரியரிலேயே சிறப்பாக நடித்தது இந்த 12 படங்கள்தானா?!

கபாலி
கபாலி

நானும் நீயுமா - 19: ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனுக்குள் இருக்கும் ஒரு மென்மையான காதலனை 'ஜானி' திரைப்படத்தில் அற்புதமாக பதிவு செய்தார் மகேந்திரன். இதில் முற்றிலும் புதுவிதமான ரஜினிகளைப் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கமலைப் போலவே ரஜினிக்கும் தமிழில் நல்ல திரைப்படங்களைத் தர வேண்டும் என்கிற விருப்பம் ஆரம்பக் கட்டத்தில் இருந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இது மட்டுமல்ல, 'ஒரு சிறந்த நடிகனாக' அவர் வெளிப்பட்ட திரைப்படங்கள் எவை என்று ஒரு கறாரான லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.

சமகால இளம் தலைமுறையினர் அவற்றில் எத்தனை திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இதுவரை பார்க்காமல் இருந்தால் கீழ்கண்ட பட்டியலில் உள்ள திரைப்படங்களை உடனே தேடிப் பார்த்து விடுங்கள். எனில் ரஜினி வெறும் 'கமர்ஷியல் ஹீரோ' மட்டுமில்லை என்பது இளம் ரசிகர்களுக்கு புரியும். ‘ஆரம்பிக்கலாங்களா?!’

‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘முள்ளும் மலரும்’, ‘தப்புத் தாளங்கள்’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘ஜானி’, ‘தில்லு முல்லு’, ‘நெற்றிக்கண்’, ‘தளபதி’, ‘கபாலி’. இந்த வரிசையில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘முள்ளும் மலரும்’, ‘அவள் அப்படித்தான்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் கட்டாயம் பார்க்க வேண்டியவை. இந்தத் திரைப்படங்களைப் பற்றியும் ரஜினி இவற்றை கையாண்ட விதத்தைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

'முள்ளும் மலரும்' பலரும் அறிந்த ஒரு க்ளாசிக் திரைப்படம். காளி என்கிற பாசமிகு அண்ணனாகவே ரஜினி வாழ்ந்திருப்பார். ஷோபாவும் இவருடன் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். ரஜினிக்குள் இருந்த இயல்பான நடிகனை வெளிக்கொணர்ந்ததற்காக இயக்குநர் மகேந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தன்னளவில் ரஜினிக்கே மிக திருப்தியைத் தந்த படம் இது.

திரைப்படக் கல்லூரி மாணவரான, ருத்ரய்யா இயக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை இரண்டு மட்டுமே. அதில் ஒன்று 'அவள் அப்படித்தான்'. இதுவரை தமிழில் உருவான மிகச்சிறந்த டாப் 10 திரைப்படங்கள் என்று ஒரு கறாரான பட்டியலை தயார் செய்தால் அதில் முதல் இடத்தைப் பிடிக்கக்கூடியது. அப்படியொரு தரமான திரைப்படம். பிரெஞ்சு 'நியூ வேவ்' பாதிப்பில் உருவாக்கப்பட்டது. 'ஆணாதிக்கமும் சுயமுனைப்பும்' மிகுந்த பாத்திரத்தை தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக கச்சிதமாக வடிவமைத்த திரைப்படம் இதுதான். 'தியாகு' என்கிற அந்தப் பாத்திரத்தை மிக சுவாரசியமாகவும் அநாயசமாகவும் கையாண்டிருப்பார் ரஜினி. ‘’டேய் மாப்ள…’’ என்று அழைத்து கமலை நோக்கி இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் பட்டாசாக இருக்கும். வெறுக்கப்பட வேண்டிய எதிர்மறை பாத்திரமாக இது இருந்தாலும் நம்மால் அப்படிச் செய்ய முடியாத மாயத்தை நிகழ்த்தியிருப்பார் ரஜினி.

ஸ்ரீப்ரியாவை கவர்ச்சியும் துடுக்குத்தனமும் நிரம்பிய நடிகையாகவே நாம் பெரும்பாலான திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவருக்குள் இருந்த மிகச் சிறந்த நடிகையை வெளிக்கொணர்ந்த திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. தமிழ் சினிமாவில் 'பெண் மையத் திரைப்படங்கள்' இப்போது கூட அபத்தமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அந்தக் காலத்திலேயே நாயகியின் பாத்திரத்தை மையமாக வைத்து உருவானது. மிகவும் சிக்கலான 'மஞ்சு' என்கிற பாத்திரத்தை ஸ்ரீப்ரியா அட்டகாசமாக கையாண்டிருந்தார்.

கமென்ட் பாக்ஸில் திட்டுக்கள் வரும் என்பதை இப்போதே யூகிக்க முயன்றாலும், இதையும் சொல்லி விடுகிறேன். 'அவள் அப்படித்தான்' உருவானதற்கு கமலின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது. 'அருண்' என்கிற நேர்மறைப் பாத்திரத்தை சிறப்பாக ஏற்றதோடு, இந்தத் திரைப்படம் உருவானதற்கும் வெளியானதற்கும் கமல் முக்கிய காரணமாக இருந்தார். இந்த பிராஜெக்ட்டில் ஸ்ரீப்ரியாவைகொண்டு வந்ததே அவர்தான்.

அவள் அப்படித்தான்
அவள் அப்படித்தான்

அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தாலும், இப்படியொரு எதிர்மறையான பாத்திரத்தை ஏற்கவும், அறிமுக இயக்குநரோடு கைகோர்க்கவும் ரஜினி தயங்கவில்லை. கமலைப் போல ரஜினிக்கும் தமிழில் புதிய மாற்று முயற்சிகள் வெளிவருவதற்கு விருப்பம் இருந்தது. அதற்காக தன்னால் இயன்ற விஷயங்களை செய்து கொண்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இவை.

விளிம்புநிலை சமூகத்தின் மனிதர்களை பிரதான பாத்திரங்களாக அமைப்பதில் பாலசந்தரின் துணிச்சலுக்கு ஈடு கிடையாது. அந்த வகையில் 'தப்புத் தாளங்கள்' திரைப்படத்தில் ரஜினி ரவுடியாகவும் சரிதா பாலியல் தொழிலாளியாகவும் நடித்திருந்தார்கள். ஒரு சில்லறை ரவுடியின் பாத்திரத்தை மிகச் சிறப்பான முறையில் கையாண்டிருந்தார் ரஜினி.

'ஆறிலிருந்து அறுபது வரை' திரைப்படத்தை நான் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கே இல்லை. இதில் ரஜினிக்காகவே பார்த்தது சிலமுறை. அத்தனை சிறந்த நடிப்பு. ஒரு குடும்பத்தில் மூத்த அண்ணனாக பிறந்து அந்தக் குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் சென்டிமென்ட் படம்தான். ஆனால், உறவுகளின் நிராகரிப்பையும் அதன் கசப்பையும் நிஜ வாழ்க்கையில் அனுபவித்தவர்கள், மனதளவில் நெருக்கமாக உணரக்கூடிய பல காட்சிகள் இதில் உண்டு. ரஜினியின் 'கமர்ஷியல்' திரைப்படங்களை இயக்கிய அதே எஸ்.பி. முத்துராமனா, இதையும் இயக்கினார் என்று ஆச்சரியமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நண்பனின் காதலியை அடையத் துடிக்கும் வில்லன் பாத்திரம் 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினிக்கு அமைந்திருந்தது. தனக்குப் பிடித்த பெண், நண்பனை விரும்புகிறாளே என்கிற மனப்புழுக்கத்தையும் நண்பனின் மீதான வெறுப்பையும் வன்மத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. கமலைப் போலவே ரஜினியின் ஆரம்பக் கட்ட திரைப்பயணத்திற்கும் ஒரு சிறந்த அஸ்திவாரத்தை போட்டுத் தந்தவர் பாலசந்தர் என்பதை எவரும் மறுக்க முடியாது.

'அவள் அப்படித்தான்' படத்தில் வெளிப்பட்ட அதே ஆணாதிக்க பாத்திரம்தான். அதையே இன்னொரு சுவாரஸ்யமான வடிவத்தில் ரஜினி கையாண்ட படம் 'அவர்கள்'. விதவிதமாக தன் மனைவியை கொடுமைப்படுத்தி இன்பம் காணும் மிஸ்டர் ராமநாதனாக தனது பிரத்யேக ஸ்டைலினால் அமர்க்களப்படுத்தியிருந்தார் ரஜினி.
ஜானி
ஜானி

ரஜினியை வணிக நாயகனாக வடிவமைத்ததில் முக்கிய பங்கு இருக்கும் அதே எஸ்.பி.முத்துராமன்தான், அவரை வேறு விதமான குணச்சித்திர பாத்திரங்களிலும் அற்புதமாக காட்டியுள்ளார். இந்த வரிசையில் 'புவனா ஒரு கேள்விக்குறி' மிக முக்கியமான திரைப்படம். காதலியின் பிரிவு, நண்பனின் துரோகம், தனிமையின் கொடுமை போன்ற உணர்ச்சிகளை மிக அருமையாக இந்தத் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி. சிவகுமார்தான் இந்தப் படத்தின் ஹீரோ என்றாலும் ரஜினிதான் ஹீரோவாக தெரிவார். பாத்திர தேர்வில் ஏற்பட்ட சறுக்கல் குறித்து சிவகுமாரே பின்னாளில் வருந்தினார்.

ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனுக்குள் இருக்கும் ஒரு மென்மையான காதலனை 'ஜானி' திரைப்படத்தில் அற்புதமாக பதிவு செய்தார் மகேந்திரன். இதில் முற்றிலும் புதுவிதமான ரஜினிகளைப் பார்க்கலாம். ஆம், இதில் இரட்டை வேடம்.

நகைச்சுவைக் காட்சிகளை தன்னால் கையாள முடியுமா என்கிற சந்தேகம் ரஜினிக்கே உள்ளூற நிறைய இருந்தது. இந்தச் சந்தேகத்தை உடைத்தெறிந்த பெருமை பாலசந்தரையே சாரும். அதுவரை ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த ரஜினியின் பிம்பத்தை 'தில்லு முல்லு' திரைப்படத்தின் மூலம் மாற்றியமைத்தார் பாலசந்தர். இதற்குப் பிறகான திரைப்படங்களின் காமெடி காட்சிகளில் ரஜினி தன்னம்பிக்கையுடன் நடித்ததற்கு அஸ்திவாரம் போட்ட திரைப்படம் இதுதான்.

சபலக்கார கிழவராக ஒரு ரஜினி, அவரைத் திருத்த முயலும் மகனாக இன்னொரு ரஜினி. இப்படியொரு கலாட்டாவான காம்பினேஷில் உருவான திரைப்படம் 'நெற்றிக்கண்'. இதில் வயதான பாத்திரத்தில் ரஜினி செய்திருக்கும் அலட்டலான நடிப்பு சுவாரஸ்யமானது.

தனது புத்துணர்ச்சியான திரைமொழியின் மூலம் தமிழ் சினிமாவின் நிறத்தையே முற்றிலும் மாற்றியமைத்தவர் மணிரத்னம். அப்படியொரு இயக்குநரும் ரஜினியும் இணைந்தால் அந்த காம்பினேஷன் எப்படியிருக்கும்? விளைவு 'தளபதி'. ரஜினியின் பிம்பத்திற்கு அதிக சேதாரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மணிரத்னம் சற்று கீழே இறங்கி வந்திருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்கவில்லை.

பல நீண்ட வருடங்களுக்குப் பிறகு 'பழைய ரஜினி'யின் இயல்பான நடிப்பை 'கபாலி'யில் காண முடிந்ததில் அவரது ரசிகர்களே உற்சாகமாகியிருப்பார்கள். புதிய இயக்குநரின் கையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டதின் பலனை ரஜினி அடைந்தார்.

---

'காளி’ முதல் 'கபாலி’ வரை...
'காளி’ முதல் 'கபாலி’ வரை...

இப்படியாக, சில மாறுதலான கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவரின் அபாரமான வளர்ச்சியும் வணிக மதிப்பும் மடமடவென உயர்ந்து விட்டதால் 'கமர்ஷியல் ஹீரோ' என்று தங்க கூண்டில் அவர் சிறைப்பட வேண்டியிருந்தது. அவரே விரும்பினால் கூட வெளியே வர முடியாத நிலை.

தனது புகழையும் நட்சத்திர அடையாளத்தையும் வைத்துக் கொண்டு தனது ஆன்மீகத் தேடலை தனது ரசிகர்களுக்கும் கடத்தலாம் என்கிற நம்பிக்கையுடன் அவர் நடித்த ‘ஸ்ரீ ராகவேந்திரா’, ‘பாபா’ போன்ற படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அவரே விரும்பினாலும் கூட அவரது இடத்தில் இருந்து சற்று கீழே இறங்கி வர அவரது ரசிகர்களும் பொது சமூகமும் அனுமதிக்கவில்லை. அவரது வழக்கமான வணிக முகத்தையே விதம் விதமாக பார்க்க விரும்பினார்கள்.

ரஜினியின் மாஸ்டர் பீஸ் ‘முள்ளும் மலரும்’... ஆனால், கமல்ஹாசன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை... ஏன்?

ஆனால் ஒரு கட்டத்தில் ஒரே மாதிரியாக வெளிவந்த ரஜினியின் வணிகத் திரைப்படங்களும் மக்களுக்கு சலிக்க ஆரம்பித்தன. இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. இளம் தலைமுறையைச் சேர்ந்த சில நடிகர்களின் வளர்ச்சியும் ரஜினியின் மதிப்புக்கு நிகராக வளர்ந்து கொண்டிருந்தது. அது கமர்ஷியல் திரைப்படமாகவே இருந்தாலும் கூட கிளிஷேக்களை மக்கள் கிண்டலடிக்கத் துவங்கினார்கள். படத்தில் புதுமையான அம்சங்களும் மாறுதலான திரைக்கதையும் நம்பகத்தன்மையுடனான மேக்கிங்கும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். இது மட்டுமல்லாமல் ரஜினியைப் போன்ற வயதான ஹீரோ, இளம் நடிகைகளுடன் இணைந்து டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களே உள்ளூற ரசிக்கவில்லை.

கபாலி
கபாலி

இந்த மாற்றத்தை ரஜினியும் புரிந்து கொண்டார். வயதான பாத்திரங்களை ஏற்றுக் கொண்டார். தனது ஆஸ்தான இயக்குநர்களிடமிருந்து விலகி ஷங்கர், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற அடுத்த தலைமுறை இயக்குநர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். கபாலி போன்ற திரைப்படங்களில் பழைய 'ரஜினி'யின் நடிப்பை பார்க்க முடிந்தது.

ஆனால் சதவிகித அளவில் பார்த்தால் 'வித்தியாசமான' முயற்சிகளில் ரஜினி ஈடுபட்டது சொற்பம்தான். ஒருவேளை 'சூப்பர் ஸ்டார்' என்கிற முள் கிரீடத்தை மட்டும் ரஜினிக்கு காலம் சூட்டவில்லையென்றால் அவரது திரைப்பட வரிசை எப்படிப்பட்டதாக இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. இது நிகழ்ந்திருந்தால் 'சூப்பர் ஸ்டார்' நமக்கு கிடைத்திருக்க மாட்டார் என்பது உண்மைதான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். ரஜினி என்கிற மிகச்சிறந்த நடிகன் நம்மிடமிருந்து விலகி தொலைந்து போயிருக்க மாட்டார்.

-------- இன்னமும் அலசுவோம் --------
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு