Published:Updated:

நானும் நீயுமா - 21 | ஜெயலலிதா Vs ரஜினி... பர்சனல் போயஸ் கார்டன் சண்டைதான் அரசியல் கனவுக்குக் காரணமா?

ரஜினி - ஜெயலலிதா
News
ரஜினி - ஜெயலலிதா

ஒரு நெருக்கடியான நிலையில் பல்வேறு விஷயங்களை பரிசிலித்து ஆராய்ந்து சட்டென்று ஒரு முடிவு எடுத்தால்தான் பல விஷயங்கள் உடனுக்குடன் நகரும். மாறாக அதைப் பற்றி வருடக்கணக்கில் யோசித்து, தயங்கி, முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடும்.

சென்ற வார கட்டுரையில் ரஜினிக்கு சாதகமான பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. 'ரஜினியால் அரசியல் தந்திரங்களையும் கீழ்மைகளையும் பின்பற்ற முடியாது' என்பதுதான் அந்தக் கட்டுரையின் சாரமே. ஆனால் அதற்கு வந்திருந்த சில ஆவேசமான பின்னூட்டங்கள், சம்பந்தப்பட்ட அன்பர்கள் சகிப்புத்தன்மையுடன் கட்டுரையை முழுக்கவும் வாசித்தார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மறுபடியும் அதேதான். ஒரு பிரபலமான பிம்பத்தின் மீது ஏற்படும் கண்மூடித்தமான மயக்கம், நம்முடைய சமநிலையுணர்வை எப்படியெல்லாம் கலைத்துப் போடுகிறது என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகிறது. இந்தக் கட்டுரைத் தொடரின் மைய அம்சமே, இது போன்ற பிம்ப மயக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதுதான்.

ஓகே... இந்த வார விஷயத்துக்கு வருவோம். விரும்பினாலும் விரும்பினாலும் ஒரு வெகுசன பிரபலத்தை அரசியல் தன் பக்கம் ஈர்க்க முயல்வது எப்போதுமே நடக்கும் ஒன்றுதான். அதிலும் 'நின்றால் செய்தி, நடந்தால் தலைப்பு செய்தி' என்று எப்போதும் மீடியாக்களில் அடிக்கடி அடிபடும் ரஜினிகாந்த்தை அரசியல் விட்டுவைக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பொதுவாக பொதுநலம் அல்லது சுயநலம் ஆகிய இரண்டு காரணிகள்தான் ஒருவரை அரசியலின் பக்கம் ஈர்க்கும். சமூகத்தின் மீதுள்ள அக்கறையால், அதாவது பொதுநலம் காரணமாக அரசியலுக்குள் வருபவர்கள் உண்டு. இந்தியச் சுதந்திரப் போராட்டமே அப்படி நடந்த ஒன்றுதான். நேரு போன்ற செல்வந்தர்கள் கூட தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

ஆனால், தனிப்பட்ட அனுபவங்கள் கூட சிலரை அரசியல் பக்கம் இழுத்து விடும். சுயநலத்திலிருந்து உருவாகிற பொதுநலம் என்று அதைச் சொல்லலாம். உதாரணத்துக்கு, வெள்ளையனால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கசப்பான அனுபவம்தான் காந்தியை பொதுநலம் நோக்கி தள்ளியது. தென்னாப்ரிக்காவில் நிறவெறி காரணமாக கறுப்பினத்தவர்களும் இந்தியர்களும் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் பற்றி அவரை ஆழமாக சிந்திக்க வைத்தது அந்த அனுபவம்தான். 'அகிம்சை' என்று புதிய வெளிச்சத்தை உலகுக்கே அவர் முன்னுதாரணமாக காட்டுவதற்கு இந்தப் சம்பவம்தான் விதையாக அமைந்தது.

அரசியல் பாதையில் ரஜினி வந்து விழுந்த கதையும் ஏறத்தாழ இது போலத்தான். அரசியலில் ஈடுபட வேண்டும் எவ்வித நோக்கமும் ஆசையும் இல்லாமல் அவர் பாட்டுக்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். கருணாநிதி, மூப்பனார் என்று அனைத்து மாநில, தேசிய அரசியல்வாதிகளிடமும் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது பாதுகாப்பான பயணமாக இருந்தது. அவர் பெரிதும் வெளிப்படையாக முரண்பட்டது இரண்டே இரண்டு அரசியல் ஆளுமைகளுடன் மட்டுமே. ஒன்று, ஜெயலலிதா. இரண்டு, ராமதாஸ். ஆனால் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட முரண்கள்தான் ரஜினியின் பயணத்தில் ஆழமான தடயங்களாக அமைந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

92-ல் ஜெயலலிதா ஆட்சியின் போது ரஜினியின் வாகனம் போயஸ் கார்டனில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம், ரஜனிக்கு பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலி 'அண்ணாமலை' திரைப்படத்தின் வசனத்தில் பிரதிபலித்தது. (‘’எம்பாட்டுக்கு என் வேலையை செஞ்சிக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்").

இது போன்ற வசனங்கள் ஜெயலலிதாவைத்தான் குறிக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அவரது ரசிகர்கள், வழக்கத்தை விடவும் அதிகமாக ரஜினியை ஆராதிக்க ஆரம்பித்தார்கள். 'நாளைய முதல்வரே' என்று ரஜினியை வைத்து அடிக்கப்பட்ட போஸ்டர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தின. 'ரஜினி அரசியலுக்கு வருவார்' என்கிற யூகம் ரசிகர்களிடையேயும் பொதுமக்களிடமும் அழுத்தமாக ஏற்படத் தொடங்கிய காலக்கட்டம் இதுதான்.

ரஜினி
ரஜினி

அடுத்த சம்பவம் 95-ல் நிகழ்ந்தது. மணிரத்னத்தின் 'பம்பாய்' படம் வெளியான சமயத்தில் அவருடைய வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவில் இது பற்றி '’தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவியுள்ளது’' என்று ஆவேசமாக பேசினார் ரஜினி. இந்தச் சம்பவமும் பிறகு மிக ஆழமான அதிர்வலைகளை ஏற்படுத்திய கதையெல்லாம் நமக்குத் தெரியும்.

ஆக... போயஸ் கார்டன் சம்பவம் தொடர்பான தனிப்பட்ட பிரச்னை, தான் சார்ந்திருக்கும் சினிமாத்துறை சார்ந்த பிரச்னை போன்ற விஷயங்கள்தான் ரஜினியை அரசியல் நோக்கி இழுத்து வந்தன. அப்போதைய ஆளுங்கட்சிக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு பெரிய பனிப்போர் நிகழ்ந்தது.

ஆனால் பிரச்னை என்னவென்றால், இந்த சர்ச்சைகளையே தன்னுடைய திரைப்படங்களில் வசனமாகவும் பாடல்வரிகளாகவும் தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது. ‘நான் என் வழில போறேன். சீண்டாதீங்க’ என்பதுதான் இதன் சாரம். இயக்குநர்களும் பாடலாசிரியர்களும் தங்களின் உற்சாகமான பங்களிப்புகளின் மூலம் இந்தப் போக்கை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் படத்தின் வணிகத்திற்கான ஒரு காரணியாக பார்த்தார்கள்.

திரைப்படத்திற்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இந்த அம்சத்தை கதைக்குள் பொருத்தி ரசிகர்களும் ஆரவாரத்துடன் ரசித்தார்கள். ரஜினி திரைப்படங்களின் வெற்றிக்கு இதையும் ஒரு காரணமாக சொல்லலாம்.

ஒருவரின் அரசியல் வருகை என்பது தீவிரமான சமாச்சாரம். காமெடி ஷோ அல்ல. 'தன்னைக் காப்பாற்ற எந்த அவதார நாயகனாவது வரமாட்டானா' என்கிற எளிய மக்களின் ஏக்கம், மன்னராட்சி முதல் குடியாட்சி வரை வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக காலத்தில், ஏற்கெனவே களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழக்கத் துவங்கும் போது 'யாராவது வந்து தங்களின் துன்பங்களைத் தீர்க்க மாட்டார்களா' என்றே தேடத் துவங்குவார்கள். இது இயல்பான விஷயம். ஆனால் இதற்கான சரியான தேர்வை சரியான திசையில் தேடாமல் சினிமாவில் அவர்கள் தேடுவதுதான் பரிதாபம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினியின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் பொதுசமூகத்தின் ஒரு பகுதியும் ரஜினியின் அரசியல் வருகையை ஆவலாக எதிர்பார்த்தது. ரஜினியின் எளிமை, பணிவு, ஆன்மீகத் தேடல், அரசியல் ஆசையின்மை போன்ற பல விஷயங்கள் ரஜினிக்கு நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. 'இவர் அரசியலுக்கு வந்தால் நேர்மையான நிர்வாகத்தைத் தருவார்' என்ற நம்பிக்கை மக்களிடையே அப்போது இருந்தது.

இப்படியொரு சீரியஸான விஷயத்தை, ஒரு குழந்தை விளையாட்டுப் பொம்மையை கையாண்டது போல் ரஜினி கையாண்டாரோ என்று தோன்றுகிறது. ‘'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, இல்லையா?" என்று கேட்கப்படும் போதெல்லாம் ‘'காலம்தான் அதற்கு பதில் சொல்லும். யாருக்குத் தெரியும்?" என்றே மையமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ இல்லை... பல வருடங்களுக்கு இந்த விளையாட்டை சீரியஸாக ஆடிக் கொண்டிருந்தார் ரஜினி.

ரஜினி
ரஜினி

'நாளை நடப்பது யாருக்குத் தெரியும். நேற்று நான் கண்டக்டர்... இன்று நான் நடிகன்’ என்று தத்துவார்த்தமான விளக்கம் எல்லாம் ரஜினியின் அளவில் சரியானதாக, பொருத்தமானதாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் 'மக்களின் எதிர்பார்ப்பு' என்கிற விஷயத்தோடு நாம் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறோமே என்று அவர் நிச்சயம் யோசித்து ஒரு கட்டத்தில் இந்த ஊசலாட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.

இதையெல்லாம் ரஜினி உணர்ந்திருக்க மாட்டாரா என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் உணர்ந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ரஜினி அடிப்படையில் மிகுந்த நல்லியல்புகள் கொண்ட மனிதர். பதவி, புகழ், பணம் போன்றவற்றின் மீதெல்லாம் அவருக்கு அதிக பற்று இருப்பதைப் போல் தெரியவில்லை.

ஆனால் எந்தவொரு முடிவையும் துணிச்சலாக எடுக்க முடியாத அளவுக்கு அவரிடம் நிறைய தடுமாற்றங்கள், குழப்பங்கள் இருந்தன. அவர் நம்பிக்கை வைத்த அரசியல் ஆலோசகர்கள், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களைச் செய்து கொண்டிருந்தாலும் 'பாதுகாப்பான விளையாட்டைத்தான்' ரஜினி எப்போதும் தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது.

ஓர் உதாரணத்தின் மூலம் இதைப் பார்க்கலாம். அர்ஜுன் நடித்து வெளியான 'முதல்வன்' திரைப்படத்தின் கதை ஆரம்பத்தில் ரஜினியிடம்தான் கூறப்பட்டிருந்தது. அப்படியொரு அட்டகாசமான திரைக்கதையில் ரஜினி நடித்திருந்தால் 'முதல்வன்' திரைப்படம் அல்லோலகல்லோமான வரவேற்பைப் பெற்றிருக்கும். அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கூட அது அமைந்திருக்கலாம். தன்னுடைய அரசியல் வருகையை திரைப்படங்களில் ரஜினி பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பார்த்தால் கூட இதன் உச்சக்கட்ட வெற்றியாக 'முதல்வன்' திரைப்படம் அமைந்திருக்கலாம்.

ஆனால் 'முதலமைச்சர் பதவி' பாத்திரத்தைக் கொண்ட ஒரு கதையில் நடிக்க ரஜினிக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. அப்போதைய ஆளுங்கட்சிக்கு எவ்விதமான சங்கடத்தையும் தர அவர் விரும்பவில்லை. அவர் ஆதரவு அளித்த திமுக ஆட்சி பதவிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தது. எனவே ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக கருணாநிதிக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரஜினி தயங்கினார். ஒருவேளை ஜெயலலிதாவின் ஆட்சி அப்போது இருந்திருந்தால் 'முதல்வன்’ படத்தில்' ரஜினி நடித்திருப்பாரோ என்று யூகிக்கத் தோன்றுகிறது. (என்னவொன்று, வில்லன் பாத்திரம் பெண்ணாக அமைந்திருக்கக்கூடும்).

விஜயகாந்த் - ரஜினி
விஜயகாந்த் - ரஜினி

ஒரு நெருக்கடியான நிலையில் பல்வேறு விஷயங்களை பரிசிலித்து ஆராய்ந்து சட்டென்று ஒரு முடிவு எடுத்தால்தான் பல விஷயங்கள் உடனுக்குடன் நகரும். மாறாக அதைப் பற்றி வருடக்கணக்கில் யோசித்து, தயங்கி, முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடும்.

ரஜினியே இதை உள்ளூற உணர்ந்திருந்ததால்தான், தன்னுடைய அரசியல் நுழைவை இத்தனை நெடிய காலம் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் என்று தோன்றுகிறது. புதிய அரசியல் கட்சியை தொடங்கினால்தான் ஒருவர் நேரடி அரசியலுக்குள் வந்தார் என்று அர்த்தம் அல்ல. "இந்தக் கட்சி ஆட்சிக்கு மறுபடியும் வந்தால் நாடு தாங்காது... எனவே இந்த அரசியல் கூட்டணியை ஆதரியுங்கள்" என்று எப்போது அவர் 'வாய்ஸ்’ தந்தாரோ, அப்போதே நேரடி அரசியலுக்குள் வந்து விட்டார் என்றுதான் பொருள்.

ரஜினி அரசியலுக்கு வர விரும்பியது, அடிப்படையில் நல்ல நோக்கத்தைக் கொண்டது. தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு நிறைய நல்லது செய்ய முடியாதா என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.நிச்சயம் பணம் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலை நாடவில்லை. ஆனால் இது சார்ந்த முடிவை எடுப்பதற்கு இருபது வருடங்களுக்கும் மேலாக தயங்கி, மக்களின் எதிர்பார்ப்பை நீர்க்கச் செய்ததுதான் மிக மோசமான விஷயம். இப்படியொரு மோசமான ஆட்டத்தை அவர் ஆடாமல் இருந்திருக்கலாம்.

ஆன்மீகம் என்பதே தன்னை அறிதல்தான். இந்த உணர்வு ரஜினிக்கு அதிகம். 'தனக்கு அரசியல் சரிப்பட்டு வருமா?' என்கிற பிரமாண்டமான கேள்வி அவரை நெடுங்காலத்துக்கு துரத்திக் கொண்டேயிருந்தது. ஒருவழியாக சமீபத்தில் அந்த கேள்விக்கு விடை சொல்லிவிட்டார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இது நல்லதுதான்.

இன்னும் அலசுவோம்!