Published:Updated:

நானும் நீயுமா - 15: சாமியாராகப் போன ரஜினியை, கமல் ஏன் மீண்டும் சினிமாவுக்குள் இழுத்தார்?!

ரஜினி - கமல் ( விகடன் )

ரஜினியின் 'சந்திரமுகி'யும் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படமும் 14 ஏப்ரல் 2005 அன்று ஒரே நாளில் வெளியாகின. இதுதான் கடைசியாக இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான ஆண்டாக அமைந்தது. இதற்குப் பிறகு இது நிகழவில்லை.

நானும் நீயுமா - 15: சாமியாராகப் போன ரஜினியை, கமல் ஏன் மீண்டும் சினிமாவுக்குள் இழுத்தார்?!

ரஜினியின் 'சந்திரமுகி'யும் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படமும் 14 ஏப்ரல் 2005 அன்று ஒரே நாளில் வெளியாகின. இதுதான் கடைசியாக இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான ஆண்டாக அமைந்தது. இதற்குப் பிறகு இது நிகழவில்லை.

Published:Updated:
ரஜினி - கமல் ( விகடன் )

கிங்காங் - தாராசிங் என்கிற இரண்டு பிரபல மல்யுத்த வீரர்களின் போட்டி அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்தது. இவர்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்க மக்கள் பெருமளவில் திரள்வார்கள். வழக்கத்துக்கு மாறாக ஒரு சிறிய நகரத்தில் இவர்களின் போட்டி ஏற்பாடு ஆகியிருந்தது. 'கூட்டம் வருமா, கலெக்ஷன் ஆகுமா' என்று கான்ட்ராக்டருக்கு ஒரே சந்தேகம். அவர் எதிர்பார்த்தது போலவே போட்டி குறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் அவ்வளவாக அங்கு இல்லை.

போட்டி நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னால் கிங்காங் ஏதோவொரு ஒரு கடையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருக்க அங்கு தற்செயலாக வந்தார் தாராசிங். திடீரென்று நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் உஷ்ணமாகி, "போட்டியில் உன் கையை முறிக்காமல் விட மாட்டேன்" என்று ஒருவர் கத்த, "உன் கழுத்தை ஒடிக்காமல் விட மாட்டேன். இது சத்தியம்" என்று இன்னொருவர் பதிலுக்கு கூவ... ஒரே களேபரம். ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றார்கள். இந்தச் செய்தி வாய்மொழியாக மக்களுக்குப் பரவ, போட்டி நடக்கும் நாளன்று காலை ஆறு மணிக்கே மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். டிக்கெட் கொடுத்து மாளவில்லை. கை முறிந்ததோ, கழுத்து முறிந்ததோ... ஆனால் அன்றைக்கு நல்ல கலெக்ஷன்.

Wrestling | மல்யுத்தம்
Wrestling | மல்யுத்தம்
மாதிரி படம்
இரு மல்யுத்த வீரர்களும் கடையில் பார்த்து சவால் விட்டுக் கொண்ட நிகழ்ச்சி என்பது தற்செயலாக நடந்ததில்லை. போட்டியை பரபரப்பாக்குவதற்காக கான்ட்ராக்டர் செய்த ஐடியா அது. சின்ன அண்ணாமலை எழுதிய 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்கிற நூலில் இந்தச் சம்பவம் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நான் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் பற்றி ஏதோ சொல்ல வருகிறேன் போல என்று நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. இரு முன்னணி பிராண்ட்கள் எதிரெதிராக இருப்பதும் அவற்றிற்கு இடையே போட்டியும் பரபரப்பும் தொடர்ந்து இருப்பதும் அந்த வணிகத்திற்கு மிகவும் உதவும். இந்தப் பரபரப்புகளை ஏற்படுத்துவதற்காக அந்த வணிகத்தில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மக்கள் இந்த வணிகத் தந்திரங்களுக்கு மயங்கி விடக்கூடாது என்பதற்காக மேற்கண்ட உதாரணத்தைச் சொன்னேன்.

முன்னணியில் இருக்கும் இரு பெரிய பிராண்ட் என்பது திரைத்துறையிலும் உள்ளதுதான். அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரைத் தொடரும் விரிவாக உரையாடி வருகிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என்று எந்தவொரு காலகட்டத்திலும் இந்த வணிக மாய்மாலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதாவது இரு முன்னணி நடிகர்களும் நண்பர்களாக கூட இருக்கக்கூடும். அவர்களுக்குள் தொழில் சார்ந்த போட்டியும் அது சார்ந்த கசப்புகளும் இருந்தால் கூட அவற்றையும் தாண்டிய உள்ளார்ந்த தோழமையைக் கூட அவர்கள் கொண்டிருக்கலாம்.

ஆனால், திரைத்துறையும் ஊடகங்களும் அவர்களை அவ்வாறு நண்பர்களாக கட்டமைக்க விரும்புவதில்லை. இருவருக்குள்ளும் ஏதோ ஜென்மப்பகை உள்ளது போல சித்தரிப்பார்கள். ஒருவர் மேடையில் பேசும் உரையில் இருந்து சில வாக்கியங்களை, வார்த்தைகளை மட்டும் பிய்த்தெடுத்து அதற்கு கண், காது, மூக்கு வைத்து வேறு அர்த்தங்கள் கொடுப்பார்கள். அப்போதுதான் சம்பந்தப்பட்ட இரு நடிகர்களின் ரசிகர்களும் உஷ்ணமாவார்கள். இப்படிப்பட்ட பரபரப்பு தொடர்ந்து இருந்தால்தான் அந்த வணிகம் செழித்து வளரும். கிங்காங் - தாராசிங் சண்டைக்கு வந்தது போல திரையரங்குகளில் கூட்டம் அள்ளும்.

ரஜினி  - கமல், அஜித் - விஜய்
ரஜினி - கமல், அஜித் - விஜய்

ஒரு முன்னணி நடிகரின் திரைப்பட பாடல் வரிகளில், வசனங்களில், அங்க அசைவுகளில் அவருக்கு போட்டியாக இருக்கும் நடிகரைப் பற்றிய சீண்டல்கள், வம்புகள், உள்குத்து விவகாரங்கள் போன்றவை தன்னிச்சையாகவோ அல்லது திட்டமிட்டோ இடம் பெற்று விடும். இது நடிகரின் ஒப்புதலுடன் நடக்கிறதா அல்லது அவரையும் மீறி நடக்கின்றவையா என்பது புரிய முடியாத ரகசியம். இந்த வணிகத் தந்திர உளவியலை நடிகர்களும் அறிவதால்தான் அதற்கு உடன்படுகின்றனர். மேலும் இந்தத் தந்திரங்களுக்கு காரணகர்த்தாவாக அவர்களே கூட இருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். சமகாலத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரின் திரைப்படங்களில் தொடர்ந்து 'நட்பு', 'துரோகம்' ஆகியவற்றைப் பற்றிய ஆவேச வசனங்கள், 'பன்ச்' டயலாக்குகள் தொடர்ந்து வருகின்றன. சினிமா வம்புகளை தேடிப் படிக்காத சராசரி ஆசாமிகளுக்கு இந்த உள்குத்து விஷயங்கள் புரியாது. எனவே ஏன் இந்த வசனங்கள் சம்பந்தமில்லாமல் வருகின்றன என்று விழித்துக் கொண்டே படத்தைப் பார்ப்பார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு மட்டும் இவை சரியாகப் புரிந்து விடுகின்றன. எனவே திரையரங்குகளில் கூச்சலும் விசிலும் காதைக் கிழிக்கிறது. உடனே எதிர் தரப்பு ரசிகர்கள் இதற்கு சமூகவலைத்தளங்களில் ஆவேசமாக 'கவுன்ட்டர்' கொடுக்க ஆரம்பிப்பார்கள். கிண்டலான மீம்ஸ்களும் கண்ணிய எல்லையைத் தாண்டுகிற ஆவேசமான கமென்ட்டுகளும், இணையத்தில் தெறிக்க ஆரம்பிக்கும். முன்னணி நடிகர்களின் ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் இந்தச் சடங்குகள் உத்தரவாதமாக நிகழும்.

சம்பந்தப்பட்ட நடிகரின் படத்துக்கு அவரின் ரசிகர்கள் செல்வதில் ஒருவித நியாயம் இருக்கிறது. ஆனால், 'அப்படி என்னதான் கிழித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்' என்று திட்டுவதற்காகவே எதிர்தரப்பு ரசிகர்களும் செல்வார்கள். இப்படி சமூக வலைத்தளங்களில் நிகழும் சண்டைகளைப் பார்த்து 'ஏன் இப்படி அடிச்சிருக்கானுங்க… அதுல என்னதான் இருக்கு. வாங்க... நாமளும் பார்த்துட்டு வருவோம்' என்று சராசரி பார்வையாளர்களும் கிளம்புவார்கள்.

ஆக... இப்படி திட்டமிட்டும் மற்றும் தன்னிச்சையாகும் உருவாகும் சண்டைகளினால் பரபரப்பு ஏற்பட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத்திற்கு உத்தரவாதமான வசூல் நிகழும். இந்த உத்தி காரணமாக ஒரு திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெறும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் திரைத்துறையின் வணிகத்திற்கு இது போன்ற வம்புச் சண்டைகளும் ஒரு காரணியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆக... இதுதான் 'கிங்காங் -தாராசிங்' ஃபார்முலா.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

ஓகே... இப்போது ரஜினி - கமல் காலகட்டத்திற்கு வருவோம். இவர்களின் காலத்திலும் இப்படி ரசிகர்களின் சண்டைகள் இருந்ததா என்றால் இருந்தது. ரஜினியும் கமலும் தனித்தனியாக நடிக்க ஆரம்பித்து இருவருக்கும் 'முன்னணி ஹீரோ' என்கிற ஒரு நிலைத்த அடையாளம் கிடைத்த பின்னால், இவர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால் அன்று திரையரங்குகளில் குறைந்தபட்சம் இருவரின் மண்டையாவது உடையும் என்கிற நிலைமை ஏற்பட்டது.

எவருடைய கட்அவுட்டின் உயரம் அதிகமானது என்பது முதற்கொண்டு யாருடைய திரைப்படம் வசூல் அதிகம் என்பது வரை குடுமிப்பிடிச் சண்டைகள் இறைபட்டன. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டதால் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவது தவிர்க்கப்பட்டது. ரஜினியின் 'சந்திரமுகி'யும் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படமும் 14 ஏப்ரல் 2005 அன்று ஒரே நாளில் வெளியாகின. இதுதான் கடைசியாக இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான ஆண்டாக அமைந்தது. இதற்குப் பிறகு இது நிகழவில்லை.

இருவரது திரைப்படங்களிலும் ஒருவரையொருவர் மறைமுகமாக சீண்டிக் கொள்ளும் வசனங்களும் பாடல் வரிகளும் இருந்ததா என்றால் இருந்தது. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா அல்லது தன்னிச்சையானவையா அல்லது நாமே ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதமா என்பதற்கு திட்டவட்டமான விடையைக் கண்டுபிடிப்பது சிரமம். உதாரணத்துக்கு கமல் நடித்து வெளியான 'தேவர் மகன்' திரைப்படத்தின் 'சாந்து பொட்டு... சந்தனப் பொட்டு' பாடலில் 'தமிழச்சி பால் குடிச்சவண்டா' என்றொரு வரி வரும்.

காவிரி நீர்ப் பிரச்னை கர்நாடகத்தில் வெடிக்கும் போதெல்லாம் தமிழகத்திலும் அதன் பிரதிபலிப்பு ஏற்பட்டு போராட்டங்கள் நிகழும். திரைத்துறையிலும் இது எதிரொலித்து 'தமிழர் அல்லாத நடிகர் யார் யார்' என்று அநாவசியமான பட்டியலை சிலர் தோண்டியெடுப்பார்கள். இந்த வரிசையில் முதன்மையாக உருளும் தலை ரஜினியுடையாகத்தான் இருக்கும். '’ரஜினி தமிழரா அல்லாதவரா?" என்கிற விவகாரமான தலைப்பில் பட்டிமன்றங்கள் பொறி பறக்கும். ரஜினி உள்ளூர வருத்தமும் சங்கடமும் அடையும் விஷயம் இது. எனவே ஒரு முறை அவர் 'தமிழில் ஆர்வம் கொண்டு தமிழ் பேசும் அனைவரும் தமிழர்தான்' என்று ஒரே போடு போட்டார்.

தேவர் மகன்
தேவர் மகன்
கமலுக்கு சாதி, மதம், இனம் போன்ற கற்பிதங்களில் நம்பிக்கையில்லை. 'தேவர் மகனின்' சக்திவேல் பாத்திரமும் இதே தன்மையைக் கொண்டதுதான். எனில் 'தமிழச்சி பால் குடிச்சவண்டா' என்கிற வரி இடம் பெறுவதற்கு எப்படி அவர் சம்மதித்தார்? இந்த வரி அவரது சக போட்டியாளருக்கு வைக்கப்பட்ட 'செக்மேட்' வரியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு சந்தேகத்தை எழுப்பும் வில்லங்கமான வரியை கமல் எப்படி அனுமதித்தார் என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
இப்போது இதன் எதிர்முனைக்கு வருவோம். ரஜினி நடித்து வெளியான 'முத்து' திரைப்படத்தில் 'தில்லானா... தில்லானா' பாடலில் சில வரிகள் வரும். "சிவப்பான ஆண்கள் இங்கே சில கோடி உண்டு... கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன" என்று நாயகியை நோக்கி நாயகன் ரஜினி கேட்பது போல் அந்த வரிகள் அமைந்திருக்கும். இது யாருக்கான கவுன்ட்டர் வரி?

ரஜினி - கமல் என்றல்ல, எந்தவொரு இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இம்மாதிரியான பல விஷயங்கள் சூசகமாக அமைந்திருப்பதைக் காணலாம். 'ரூம் போட்டு யோசித்தால்' இன்னமும் நிறைய தரவுகளைத் தோண்டியெடுக்க முடியும். இவையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா, தற்செயலானவையா அல்லது நம்முடைய கற்பனையா என்பது ஆய்வுக்குரியது.

ஆனால், ஒன்று சொல்ல முடியும். இதர முன்னணி நடிகர்களின் காலகட்டத்தை விடவும் ரஜினி - கமல் காலத்தில் போட்டி மனப்பான்மையைத் தாண்டி அவர்கள் ஆழமான நட்புணர்வைக் கொண்டிருந்தார்கள். தங்களின் நட்பை பொதுவெளியில் வெளிப்படுத்த அவர்கள் எப்போதும் தயங்கியதில்லை. மாறாக இளம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக அமைந்தார்கள். ரஜினியும் கமலும் அசந்தர்ப்பமான நேரங்களில் ஒருவருக்கொருவர் கை கொடுத்து ஆதரவு தருவதில் உற்ற நண்பர்களாக இருந்தார்கள்.

ரஜினி
ரஜினி
ஓர் உதாரண சம்பவம். ரஜினி தீவிரமான மனச்சிக்கலையும், நரம்புப் பிரச்னைகளையும் எதிர்கொண்டிருந்த காலகட்டம் அது. அதன் எதிர்முனையில் ஆன்மிக சிந்தனைகளும் அவரை ஆட்கொண்டிருந்தன. ரஜினியின் சகோதரர், சத்தியநாராயணா சிறுவயதிலேயே ரஜினியை ராமகிருஷ்ண மடத்தின் ஆன்மிக வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்ததால் உருவான விதை அது.

'சூப்பர் ஸ்டார்' என்கிற அடையாளத்தை முள்கிரீடமாகவே ரஜினி நினைத்தார். ஓயாத படப்பிடிப்பு, உறக்கமின்மை, நிம்மதியில்லாத சிந்தனை போன்றவற்றிற்கு இடையே தத்தளித்த ரஜினி ஒரு நாள் தீர்மானித்து தான் சன்னியாச வாழ்க்கைக்கு செல்லப் போவதாக முடிவெடுத்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் ரசிகர்கள் உள்ளிட்டு பலரும் இதனால் அதிர்ச்சி அடைந்தார்கள். சில ரசிகர்கள் தற்கொலை முயற்சி வரை சென்றார்கள். ரஜினியின் குருவான பாலசந்தரால் கூட ரஜினியின் இந்த முடிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. '’நீ திரும்பி வருவேன்னு தெரியும். நான் காத்திருக்கேன்’' என்று உறுத்தாத அறிவுரையைக் கூறினார்.

ஆனால், ரஜினி தன்னுடைய முடிவை பிறகு மாற்றிக் கொண்டது கமலின் அறிவுரையால்தான். ரஜினியை சந்தித்த கமல், ‘'நீங்க இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு போராட்டங்களைச் சந்திச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். அது உங்களுக்கும் தெரியும். யாருக்கும் எளிதில் கிடைக்காத இந்த இடத்தை ஏன் இவ்வளவு ஈஸியா உதறிட்டுப் போறீங்க.. இந்த அடையாளத்தை வெச்சே மக்களுக்கு நீங்க நிறைய நல்லது செய்ய முடியும். எனவே நடிப்பை ஒரு பாதையாகவும் உங்களோட ஆன்மீக தேடலை இன்னொரு பாதையாவும் பிரிச்சு வெச்சுக்கங்க... நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க.. உங்க குடும்பத்தையும் நினைச்சுப் பாருங்க.. நீங்க இந்த இடத்திற்கு வந்ததுக்கும் ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கலாம், இல்லையா?’’

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

பகுத்தறிவுவாதியான கமல், ரஜினியின் ஆன்மிக அல்லாடல்களுக்கு தந்த உபதேசம் இது. கமலின் அறிவுரை நன்கு வேலை செய்தது. இதனால் தெளிவான ரஜினி, சாமியாராகப் போகும் முடிவை கை விட்டு நடிப்பு, ஆன்மீகம் என்று இரு பாதைகளையும் இன்று வரை தொடர்வதற்கு கமலின் சரியான நேரத்தின் உபதேசம் ஒருவகையில் காரணமாக இருக்கலாம். ரஜினியை தன்னுடைய போட்டியாளராக கமல் நினைத்திருந்தால் இப்படி தடுத்து நிறுத்தியிருப்பாரா என்கிற கேள்வியும் எழுகிறது. ஒரு துறையில் உள்ள இரு முன்னணி நபர்கள், அவர்களின் போட்டி விவகாரங்களைத் தாண்டியும் நிபந்தனையில்லாத நட்பைக் கொண்டிருக்க முடியும் என்பதற்கான உதாரணம் இது.

இன்னும் அலசுவோம்.