Published:Updated:

நானும் நீயுமா - 17: கமல்ஹாசன் எனும் மிகச்சிறந்த நடிகன் ஏன் இவ்வளவு அடிபட்டார்?

நாயகன் - கமல்ஹாசன்

வணிகத் திரைப்படங்களாகவே இருந்தாலும் உடல்மொழி, ஒப்பனை, அசைவு என்று தன்னுடைய பாத்திரங்களில் எப்படியாவது வித்தியாசத்தைக் காட்டுவதற்காக கமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.

நானும் நீயுமா - 17: கமல்ஹாசன் எனும் மிகச்சிறந்த நடிகன் ஏன் இவ்வளவு அடிபட்டார்?

வணிகத் திரைப்படங்களாகவே இருந்தாலும் உடல்மொழி, ஒப்பனை, அசைவு என்று தன்னுடைய பாத்திரங்களில் எப்படியாவது வித்தியாசத்தைக் காட்டுவதற்காக கமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.

Published:Updated:
நாயகன் - கமல்ஹாசன்
ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்' என்றும் கமலுக்கு 'சூப்பர் ஆக்டர்' என்றும் ஒரு பொதுவான பிம்பம் இருக்கிறது. ரஜினியின் முகம் என்பது முற்றிலும் வணிக அடையாளமாகத் தெரியும் அதே சமயத்தில் கமலின் முகம் என்பது 'மாற்று முயற்சிகளை நிகழ்த்தி சினிமாவின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்' அடையாளமாக நமக்குத் தெரிகிறதல்லவா? ஒருவகையில் இதுவொரு காட்சிப்பிழையே. இந்த இரு முன்னணி நடிகர்களுமே தங்களின் எதிர் அடையாளங்களுக்காக மிகவும் போராடியிருக்கிறார்கள். சற்று விரிவாகப் பார்ப்போம்.

உலகின் சிறந்த சினிமாக்களை ஒரு ரசிகனாக கண்டிருந்த கமலுக்கு அதன் தரத்தில் ஒரு பகுதியையாவது தமிழுக்கு கடத்திக்கொண்டு வர வேண்டும் என்கிற கனவும் ஏக்கமும் உள்ளூற நெடுங்காலமாக இருந்தது. இந்தத் தணியாத தாகம் உள்ளுக்குள் இருந்தாலும் அதை ஒளித்து வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் பல கிளிஷேவிற்குள்தான் அவர் நீண்ட காலம் வாழ வேண்டியிருந்தது. ஒருபக்கம் உலக சினிமாவின் கனவைச் சுமந்து கொண்டு, இன்னொரு பக்கம் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவது உள்ளிட்ட பல அபத்தங்களை கமல் செய்ய வேண்டியிருந்தது. தன் இருப்பிற்காக இவ்வகையான சமரசங்களைச் செய்வதற்கு ஒரு கலைஞன் மிகப் பெரிய மனஉளைச்சலை சுமக்க வேண்டும்.

ராஜபார்வை | கமல்ஹாசன்
ராஜபார்வை | கமல்ஹாசன்

ஏறத்தாழ தொன்னூற்றொன்பது படங்களைக் கடந்து பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகுதான் 'ராஜபார்வை' என்கிற, தன்னுடைய கனவுலகத்தின் முதல் படிக்கட்டை கமலால் எட்ட முடிந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்று புகழை அடைந்து விட்டாலும் விடலைப் பருவத்திற்கும் இளைஞராக முதிர்ச்சி பெறும் வயதிற்கும் இடையில் அவர் பல அல்லாட்டங்களை சந்தித்தார். தமிழ் சினிமாதான் தன் எதிர்காலம் என்று முடிவாகிவிட்ட பிறகு அதில் தன்னுடைய அடையாளம் என்பதை கண்டு கொள்ளவதற்காக அவர் விதம் விதமாக தத்தளித்தார். நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அத்தனை எளிதில் அப்போது கிடைக்கவில்லை. தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் அப்போது அவருக்கு இருந்தது.

பாலசந்தர் என்கிற ஆதரவுக்கரம் மட்டும் அப்போது இல்லையென்றால் கமல் என்கிற நடிகர் இன்றைக்கு நமக்கு கிடைத்திருப்பாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆம்... கமலுக்குள் இருந்த திறமையை சரியாக அடையாளம் கண்டுகொண்ட பாலசந்தர், இயன்ற போதெல்லாம் கமலுக்கு வாய்ப்பளித்தார். சரியான சமயங்களில் தக்க வழிகாட்டியாக இருந்தார். கமலை ஒரு ஹீரோவாக தமிழில் நிலைநிறுத்திய பிறகு, 'ஏக் துஜே கேலியே' மூலம் இந்தியிலும் ஓர் உயர்ந்த அடையாளம் கமலுக்கு கிடைத்தது பாலசந்தர் வழியாகத்தான். இப்படியாக கமலின் வளர்ச்சிப்பாதையில் ஒரு முக்கிய மேம்பாலமாக இருந்தது பாலசந்தர்.

'ஹீரோ' என்கிற அடையாளத்தைப் பெறுவதற்காக மரத்தைச் சுற்றி ஆடுவது உள்ளிட்ட பல தேய்வழக்கு நடிப்புகளை கமல் சுமக்க வேண்டியிருந்தாலும் அந்த வணிகப் பகுதியிலும் தமக்கான வித்தியாசத்தை அவர் தொடர்ந்து தேடிக் கொண்டேயிருந்தார். ரஜினியை பிரதான நாயகனாக வைத்து 'தப்புத் தாளங்கள்' என்னும் திரைப்படத்தை பாலசந்தர் இயக்கிக் கொண்டிருக்கும் போது ‘'சார்... உங்க படத்துல நான் இல்லாம எப்படி... ஏதாவது ஒரு ரோல் கொடுங்க’' என்று செல்லமாக நச்சரித்திருக்கிறார் கமல். ‘'உனக்கான பாத்திரம் எதுவும் இல்லையேப்பா’' என்று பாலசந்தர் தயங்கி மறுத்த போது, '’ஹீரோயின் பாலியல் தொழிலாளிதானே... அவருக்கு வரும் கஸ்டமர்களில் ஒருவனாக நான் வருகிறேன். மறுக்காதீங்க சார்'’ என்று கமல் வேண்டிய போது பாலசந்தரால் மறுக்க முடியவில்லை.

ஆனால், சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் அந்தச் சிறிய பாத்திரத்திற்காக கமல் மெனக்கட்டது அதிகம். இரண்டு பற்கள் முன்னால் நீட்டிக் கொண்டிருப்பது போல் அமைத்துக் கொண்டு சோடா புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு சற்று உருமாறிய தோற்றத்தில் தன்னை மாற்றிக் கொண்டு வந்தார். இம்மாதிரியான தேடல்தான் பாலசந்தருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கும். கமலின் இந்த மெனக்கெடல்தான் பிற்பாடு 'கல்யாணராமன்' என்கிற பெரிய ஹிட் திரைப்படத்திற்கான விதையாக இருந்திருக்கும்.

கமல், கே.பாலசந்தர், ரஜினி
கமல், கே.பாலசந்தர், ரஜினி
1981-ல் 'கடல் மீன்கள்' என்றொரு திரைப்படம் வந்தது. இதில் 'செல்வநாயகம்' என்கிற அறுபது வயது பாத்திரமாக தன்னை மாற்றிக் கொண்டு நடித்தார் கமல். அப்போது அவருக்கு வயது சுமார் 27 மட்டுமே. இதுவே 'நாயகன்' வேலுநாயக்கருக்கு முன்னோட்டமாக இருக்கலாம்.

அது வணிகத் திரைப்படங்களாகவே இருந்தாலும் உடல்மொழி, ஒப்பனை, அசைவு என்று தன்னுடைய பாத்திரங்களில் எப்படியாவது வித்தியாசத்தைக் காட்டுவதற்காக கமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தார். இதற்கு முன்னோடி என்று சிவாஜி கணேசனை சொல்ல வேண்டும். அவரை தன்னுடைய மானசீக அடையாளமாக கமல் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு ‘ஹேராம்’, ‘விருமாண்டி’ போன்று தன்னுடைய விருப்பமான படங்களை அடைவதற்கு இத்தகைய பலமான அஸ்திவாரத்தை கமல் இட வேண்டியிருந்தது.

"கோவணம் மட்டும் கட்டி நடிக்க வேண்டுமா... பிரச்னையில்லை, நடித்து விடலாம்!’' என்று செல்லும் வரை அவரின் நடிப்புத் தாகம் இருந்தது. பாரதிராஜா எனும் புதிய இயக்குநரிடம் இருந்த திறமையை கமல் சரியாக அடையாளம் கண்டு கொண்டதால் தன்னை முழுவதுமாக அவரிடம் ஒப்படைத்துக் கொண்டார். இதற்காக 'சப்பாணி' என்று ஹீரோவின் சாகசம் ஏதும் இல்லாத சாதாரண பாத்திரத்தில் நடிக்க கமல் தயங்கவில்லை.

இளம் ரசிகைகளின் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'காதல் இளவரசன்' என்று ஜொலிஜொலிப்பான அடையாளத்தில் கமல் பிரகாசித்துக் கொண்டிருந்த நேரம் அது. ‘16 வயதினிலே’ ஸ்டில்களில் கமல் கோவணத்துடன் நிற்கும் காட்சியைப் பார்த்த அவரின் சகோதரர் சாருஹாசன் "என்னப்பா இது... இப்படியெல்லாம் என் தம்பியை காட்டியிருக்கீங்க. அவர் இமேஜ் என்னன்னு தெரியுமில்லையா?" என்று பாரதிராஜாவிடம் கோபித்துக் கொண்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது. ஆனால் '16 வயதினிலே' பிறகு ஏற்படுத்திய சாதனையும் முன்னோடித் தடமும் வரலாற்றில் இடம் பிடித்தது.

16 வயதினிலே
16 வயதினிலே

பாரதிராஜா மட்டுமல்லாமல் பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா என்று பல உன்னதமான கலைஞர்களை அவர்களின் ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் பணியாற்ற விரும்பும் இடையறாத தேடல் கமலிடம் இருந்தது. பாலுமகேந்திரா பிரபல ஒளிப்பதிவாளராக அப்போது இருந்தாலும் இயக்குநர் எனும் பதவியின் மீதும் விருப்பம் கொண்டிருந்தார். அவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 'கோகிலா' (1977). கமல்தான் அதில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை பாலுமகேந்திராவுக்கு இருந்தது. தமிழில் கமலுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், கன்னடத்தில் இதை உருவாக்க பாலுமகேந்திரா முயன்றதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அப்போது கன்னட சினிமாவுலகில் உன்னதமான மாற்று முயற்சிகள் உருவாகி வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இரண்டு, தமிழில் இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்கிற தயக்கம் பாலுமகேந்திராவுக்கு இருந்தது.

'கோகிலா'வில் கமலுக்கு நண்பனாக நடித்த மோகனுக்கு மட்டுமே கன்னடம் தெரியும். மற்றபடி கமலுக்கோ, பாலுமகேந்திராவுக்கோ, ஷோபாவுக்கோ கன்னடமொழி சுத்தமாக தெரியாது. இதற்கு இசையமைத்தவர் வங்காளத்தைச் சேர்ந்த சலீல் செளத்ரி. இப்படி ஒரு கலவையான அடையாளங்களோடு 'கோகிலா' உருவாகியது. இது வெளியாகி பிறகு தேசிய விருதைப் பெற்றதோடு சென்னையிலும் இந்தத் திரைப்படம் நூறு நாள்களுக்கு மேல் ஓடி பாலுமகேந்திராவின் தயக்கத்தை உடைத்தது.

இப்படியாக பல மாற்று முயற்சிகளின் மீது தணியாத தாகம் கொண்ட ஒரு கலைஞனாக கமல் இருந்தாலும் 'கமர்ஷியல் ஹீரோ' என்கிற பிம்பத்திலும் தன்னை வலுவாகப் பொறுத்திக் கொள்ள அவர் தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்தார். இதற்காக அவர் பல கோணங்கித்தனங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ‘'நான்தான் சகல கலா வல்லவன்’' என்று கண்ணாடியை உடைத்துக் கொண்டு குதிக்க வேண்டியிருந்தது. நாயகியை ஓரங்கட்டி மரத்திற்குப் பின்னால் சென்று பிறகு உதட்டை அசட்டுத்தனமான இளிப்புடன் துடைத்துக் கொண்டு வர வேண்டியிருந்தது.

நாயகன்
நாயகன்
'நாயகன்' எனும் அற்புதமான திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமா உலகத்தையே புரட்டிப் போட்டு பிரமிப்பை ஏற்படுத்திய அதே 1987-ம் ஆண்டில் 'பேர் சொல்லும் பிள்ளை' என்கிற பொறுத்துக்கொள்ளவே முடியாத கமலின் திரைப்படம் வெளியாகிய போது பலருக்கும் ரத்தக் கண்ணீரே வந்தது.

தன்னுடைய உண்மையான திறமை என்னவென்பதை உள்ளூற கமல் நன்கு அறிந்திருந்தாலும் எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற கமர்ஷியல் இயக்குநர்களிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். தன்னை ஒரு வணிக நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் செய்த சமரசங்கள்தான் இதற்கு காரணம்.

உதாரணத்துக்கு 1986-ல் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படத்தைச் சொல்ல வேண்டும். 'கம்ப்யூட்டர்' என்றால் என்னவென்று தமிழ் சமூகம் அறிந்திராத காலகட்டத்தில் அது சார்ந்த சமாசாரங்களை இணைத்து ராக்கெட் கடத்தல், அதை மீட்கச் செல்லும் RAW ஏஜென்ட் என்று தமிழில் ஓர் 'ஜேம்ஸ் பாண்ட்' பாணி திரைப்படத்தை தருவதற்கு கமல் முயன்றார். இதன் கதையை சுஜாதா எழுதி, திரைக்கதையை கமலுடன் இணைந்து அமைத்தார். இந்த பிராஜக்ட் ஒரு சிறந்த இயக்குநரிடம் மாட்டியிருந்தால் 'விக்ரம்' இன்றைக்கும் கூட பேசப்படும் ஒரு சிறந்த வணிகத் திரைப்படமாக இருந்திருக்கும்.

விக்ரம்
விக்ரம்

முதற்பாதி வரை ஒரு மாதிரியாக பயணப்படும் 'விக்ரம்', பிறகு சலாமியா என்னும் கற்பனை தேசத்திற்கு சென்ற பிறகு நிறைய குழம்பி முழு அபத்தக் களஞ்சியமாக மாறி விட்டது. கமல் ஏன் ராஜசேகரிடம் இதை ஒப்படைத்தார் என்றால், ராஜசேகர் அப்போது வெற்றிகரமான வணிகத் திரைப்பட இயக்குநராக இருந்தார். அது மட்டுமே காரணம். இந்த அவல நகைச்சுவை அனுபவத்தைப் பற்றி தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக எழுத்தாளர் சுஜாதா பிற்பாடு விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

உள்ளுக்குள் சிறந்த சினிமாக்களைப் பற்றிய கனவுகளும் விருப்பங்களும் நிரம்பியிருந்தாலும் கமல் தன்னையொரு 'கமர்ஷியல் ஹீரோ'வாக நிலைநிறுத்திக் கொள்ள ஏன் இத்தனை அரும்பாடுபட்டார்? தனக்கு அத்தனை உவப்பில்லாத பிம்பத்திற்காக ஏன் இப்படி முட்டி மோதினார் என்பதற்கு ஒரு பிரதானமான காரணத்தை யூகிக்க முடியும்.

அது ரஜினிகாந்த் என்னும், எதிர்முனையில் இருந்த இன்னொரு வலுவான கமர்ஷியல் ஹீரோ!

இதைப் பற்றி அடுத்த வாரத்தில் விரிவாக அலசலாம்.