Published:Updated:

திட்டமிட்டபடி நடக்குமா நடிகர் சங்கத் தேர்தல் !

அலாவுதின் ஹுசைன்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ஆம் தேதி நடக்கவிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் திருப்பம்.

தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்

சென்னையைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவுக்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நீதிபதி பத்மநாபன் தலைமையில் சென்னை அடையாரிலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்கவுள்ளதாக அறிக்கை வெளியானது.

நடிகர் சங்க போட்டியாளர்கள் கமலுடன்
நடிகர் சங்க போட்டியாளர்கள் கமலுடன்

சென்ற தேர்தலில் போட்டியிட்ட நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்யராஜ், ஐசரி.கே.கணேஷ் தலைமையில் 'சுவாமி சங்கரதாஸ் அணி' என இருமுனைப் போட்டியாக இந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜும், பொதுசெயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி.கே.கணேஷும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து பிரசாந்தும் போட்டியிடுகின்றனர். இதுமட்டுமல்லாமல் மொத்தம் 24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 58 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

மூவாயிரத்துக்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். இதில் 1000-1200 உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக இரு அணியினரும் மூத்த நடிகர்களையும், தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திட்டமிட்டபடி நடக்குமா நடிகர் சங்கத் தேர்தல் !

முன்னதாக நடிகர் சங்கத் தேர்தலை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரிக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, நடிகர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் போட்டியாளர் பூச்சி முருகனுடன் இணைந்து இன்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாத்தை சந்தித்தனர். அப்போது எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இதற்கு முன் நடந்த பொது நிகழ்ச்சிகளைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளனர். மேலும், புகார் அளித்தவர்களில் ஒருவரான பாரிவேந்தர் இந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிடுபவர் என்பதால் இது தேர்தலை தள்ளிப் போடும் முயற்சியாகவும் தெரிகிறது.

இந்நிலையில் காவல்துறை ஆணையரகம் அனுப்பியுள்ள கடிதத்தின் பேரில் தேர்தல் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியின் நிர்வாகம் தேர்தல் நடத்த அனுமதி கிடைக்காததால் இடத்தை தர இயலாது எனக் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இந்தத் தேர்தல் இட விவகாரம் நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ம் தேதி நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.