Published:Updated:

`பிகில்' பெரிய வெற்றிபெறணும்! - நாகை விஜய் ரசிகர்கள் `மண்சோறு' வேண்டுதல்

`பிகில்' திரைப்படம் வெற்றியடைவதற்காக நாகை விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.

விஜய் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளியையொட்டி திரைக்கு வருகிறது `பிகில்' திரைப்படம். சமீபத்தில் வெளியான அப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் ஹிட் அடித்தது. இசை வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடந்தது. `சிங்கப்பெண்ணே', `வெறித்தனம்' பாடல்கள் விஜய் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன. இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பரபரப்பைக் கூட்டியது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் படத்தின் கதை என்னுடையது என செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பிகில் போஸ்டர்
பிகில் போஸ்டர்

இது விஜய் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்தது. அட்லி தரப்போ செல்வா தங்களிடம் பணம் பெறும் நோக்கத்துடன் இவ்வாறு கூறுவதாக தெரிவித்தனர். `மெர்சல்' படம் வெளியானபோதே அரசியல் ரீதியிலான சில பிரச்னைகளை சந்தித்தது, இருந்தாலும் சொன்ன தேதியில் படம் வெளியானது.

இந்த நிலையில்தான், பிகில் திரைப்படம் எந்தச் சிக்கலும் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

`பிகில்' பெரிய வெற்றிபெறணும்! -  நாகை விஜய் ரசிகர்கள் `மண்சோறு' வேண்டுதல்

அந்த வழிபாட்டில் பிகில் திரைப்படம் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வெற்றி பெற வேண்டுமென அர்ச்சனை செய்தனர். இதையடுத்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் கோயில் வளாகத்தில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.