Published:Updated:

"நக்கலைட்ஸ் ஃபார்முலாதான் ஜி.வி.பிரகாஷுக்கும்!" 'அம்மா அலப்பறைகள்' தனம்

இணையத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும், நக்கலைட்ஸ் தனம் அம்மாவின் பேட்டி...

நக்கலைட்ஸ் தனம் அம்மா, பல இளைஞர்களுக்கும் பல தாய்மார்களுக்கும் ரொம்பவே ஃபேவரைட்டான ஆள். இவர் நடிக்கும் அலப்பறை வீடியோக்கள், டிரெண்டாகத் தவறியதில்லை. இதுவரை மொபைல் திரையில் மட்டுமே நம்மை சிரிக்கவைத்தவர். தற்போது, வெள்ளித்திரைக்கும் வந்திருக்கிறார். இந்தப் பயணம்குறித்து அவரிடம் பேசினேன்.

’அரசியல் நையாண்டி’ வீடியோக்கள் பண்ணிட்டு, ’அம்மா அலப்பறைகள்’ பண்ணும்போது, இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சீங்களா?

Dhanam in Sivappu Manjal Pachai Movie
Dhanam in Sivappu Manjal Pachai Movie

’’மக்களுக்கு எப்போ எது பிடிக்கும்னு புரிஞ்சுக்கவே முடியலை. அம்மா சென்டிமென்ட் என்னைக்கும் அழியாதுனு இதை வெச்சு புரிஞ்சுக்கிட்டேன். இந்த அலப்பறைகள் எபிசோடு பண்ண ஆரம்பிக்கும்போதே தோழர் பிரசன்னாகிட்ட, ‘நமக்கு ஏன் இந்த அலப்பறைகள். நம்மளோட எண்ணம் சமூக கருத்துகளை மக்கள்கிட்ட சொல்றது தானே’ன்னு சொன்னேன். அதுக்கு அவர்,’இந்த மாதிரி வீடியோக்கள் பண்ணி மக்கள் மனசுல ஒரு இடத்தைப் பிடிச்சிட்டு, அப்பறம் நம்ம அரசியல் நையாண்டி பண்ணலாம்’னு சொன்னார். ஆனால், அடுத்தடுத்த அலப்பறை வீடியோக்களிலே நாங்க ஏதாவது ஒரு கருத்தை, காமெடியா சொல்ல முயற்சி செஞ்சோம். உதாரணத்துக்கு, ’கல்யாண வயசு அலப்பறைகள்’, ’பீரியட்ஸ் அலப்பறைகள்’, ’புரட்டாசி அலப்பறைகள்’ வீடியோக்களில் பல விஷயங்களை உடைத்துப் பேசியிருந்தோம். இதனால்தான், அலப்பறை வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குனு நினைக்குறேன். அப்பறம் முக்கியமா, எங்களோட கொங்கு தமிழ். அதை ரசிக்கத்தான் பல பேர் எங்க வீடியோக்களைப் பார்க்கிறாங்க. நாங்க எந்த வீடியோவுக்கும் ஸ்கிரிப்ட்டுனு பெருசா எழுதுனது இல்லை. ’இதுதான் சீன், நீங்களே பேசுங்க’ன்னு சொல்லிடுவோம். அப்படி நாங்களே எங்க வட்டார வழக்குல பேசும்போது, அது க்ளிக் ஆகிடுது. எல்லாப் புகழும் கொங்கு தமிழுக்கே.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த வட்டார வழக்கிற்காக ஏதாவது மெனக்கெடுறீங்களா?

Dhanam with her Husband Chandran
Dhanam with her Husband Chandran

’’நான் ஸ்கூல் படிக்கிற வரைக்கும் வட்டார வழக்கு பேசிட்டு இருந்த ஆள்தான். ஆனா, காலேஜ் படிக்கிறதுக்காக வெளியூர் போனபிறகு, வட்டார வழக்கு பேசுறது குறைஞ்சிடுச்சு. படிப்பு முடிச்சிட்டு, கல்யாணம் பண்ணிட்டு, என் கணவர் சந்திரனோடு பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குப் போனதுனு பல வருஷங்கள் நார்மலாகத்தான் பேசிட்டு இருந்தேன். எப்போ நக்கலைட்ஸ்ல நடிக்க ஆரம்பிச்சேனோ, அதுக்குப்பிறகுதான் கோவைத் தமிழ் பேச ஆரம்பிச்சேன். இப்போதும் எனக்கு கொங்கு தமிழ் முழுமையா தெரியாது. ஏன்னா, என்னோட ஊர் ஒட்டன்சத்திரம். அங்க எப்படி பேசுவோமோ அப்படித்தான் எனக்கு பேச வரும். நக்கலைட்ஸோட இயக்குநர் ராஜேஷ்வர்கிட்டதான் சில வார்த்தைகள் கேட்டு தெரிஞ்சுப்பேன்.''

'நக்கலைட்ஸ்'ல எப்படி அறிமுகமானிங்க?

prasanna
prasanna

''நக்கலைட்ஸ் நிறுவனர் பிரசன்னா மூலமாதான் நான் நடிக்க வந்தேன். அதிக புத்தகம் படிக்கிற ஆள். நக்கலைட்ஸ்ல நடிக்கிறதுக்காக வர்ற ஆள்கள்கிட்ட நல்ல புத்தகங்களைக் கொடுத்து, அவங்களுக்குள்ள அரசியல் அறிவை விதைப்பவர். நிறைய பேர், ‘நாங்க இங்க வரும்போது இருந்ததுக்கும் இப்போ இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’னு சொல்லியிருக்காங்க. அதுக்கு பிரசன்னாதான் காரணம். ஏன்னா, அரசியல் நையாண்டி பண்ணும்போது, வெறும் எழுதிக்கொடுத்த வசனத்தை மட்டும் பேசி நடிக்கிறது முக்கியம் இல்லை. அந்த அரசியலைப் பற்றி அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். அதை மிகப் பொறுப்போடு செய்யக்கூடிய ஆள், பிரசன்னா.''

இணையத்திரையில் இருந்து இப்போ வெள்ளித்திரைக்கு வந்துருக்கீங்க; இந்த அனுபவம் எப்படி இருக்கு?

’’டைரக்டர் சசி சார் நக்கலைட்ஸ் வீடியோ பார்த்துட்டுத்தான் என்னை ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்கு நடிக்கக் கூப்பிட்டார். நான் அவர்கிட்ட, ‘சார் எனக்கு நடிக்கத் தெரியாது. நக்கலைட்ஸ்ல ஏதோ நாங்க வீட்டுக்குள்ள சும்மா வீடியோ எடுத்துட்டு இருக்கோம். சினிமால நடிக்கணும்னா எனக்கு பயமா இருக்கு சார். பெரிய பெரிய கேமராலாம் இருக்கும்’னு சொன்னேன். ‘நீங்க எதுவும் பயப்படாதீங்க. அந்த வீடியோவுல நீங்க எப்படி பேசுவீங்களோ அதே மாதிரி இதுலேயும் பண்ணுங்க’ன்னு சொன்னார். ஆனா, சசி சாருக்கு என்ன ஆச்சர்யம்னா, நான் அவர்கிட்ட நார்மலா பேசுறதைப் பார்த்துட்டு, ‘உங்களுக்கு கொங்கு தமிழ் இல்லாம பேச வருமா மா’னு கேட்டார். ஏன்னா, இந்தப் படத்துக்கு நார்மலா பேசுற மாதிரிதான் வேணுமாம். எனக்காக என்னோட கேரக்டரின் சொந்த ஊரை மாத்தலாமானு நினைச்சுட்டு இருந்தாராம். நான் நார்மலா பேசுனதும் சசி சாருக்கு டபுள் ஓகே.’’

’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்த அனுபவம்?

Sivappu Manjal Pachai Movie
Sivappu Manjal Pachai Movie

’’நான் ரெகுலரா எங்க சேனலுக்கு நடிக்கிற மாதிரிதான் நடிச்சேன். இந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷுக்கு அத்தையா நடிச்சிருக்கேன். சேனல்ல சசியை எப்படி என் அண்ணன் பையனா நினைச்சு நடிச்சேனோ, அப்படித்தான் ஜீ.வி.பிரகாஷையும் என் அண்ணன் பையனா நினைச்சு நடிச்சேன். இந்தப் படத்தோட சில வசனங்களும் நான் என் அண்ணன் பையன்கிட்ட பேசுற மாதிரியே இருந்துச்சு. இதை நான் ஜீ.வி.கிட்டேயும் சொன்னேன். பல முறை டைரக்டர் சார் கட் சொல்லியும் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருந்தோம். வழக்கம் போல ஒரு ஜாலியான அனுபவமா இருந்துச்சு.’’

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துச்சா?

‘’ஒரு மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கேன். அந்தப் படத்தோட தயாரிப்பாளர், அம்மா கேரக்டரில் நான்தான் நடிக்கணும்னு இயக்குநர்கிட்ட சொல்லியிருக்கார். அவரும் நக்கலைட்ஸ் ஃபேன். தமிழில் சில படங்கள் பேசிட்டு இருக்காங்க. இன்னும் உறுதியாகலை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு