Published:Updated:

மேக் அப் மேனே கிடையாது; நாங்க இயல்பா இருக்கோம்! - சக்சஸ் சீக்ரெட்ஸ் பகிரும் நக்கலைட்ஸ் பிரசன்னா

நக்கலைட்ஸ் வீடியோக்களை கூர்ந்து கவனித்தால் அதில் வரும் வசனங்கள் ஆழமானதாக இருக்கும். நம்மை சிரிக்க வைத்தாலும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஒரு பிரச்னையை பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கணும் அதே சமயம் ஹியூமராகவும் ரசிக்கும்படியும் இருக்கணும். இதுதான் நக்கலைட்ஸ் ஃபார்முலா. புதுப்புது கான்செப்ட் எல்லாமே தனிரகம் என யூடியூப்பை அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறது நக்கலைட்ஸ் டீம். சமீபத்தில் இந்த சேனலின் அம்முச்சி சீரிஸ் சூப்பர் டூப்பர் ஹிட். 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள். `அடுத்த எபிஸோட் எப்ப வரும்’ என்று ஹேஷ் டேக் போட்டுக் கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார் அம்முச்சி.

அம்முச்சி வெப் சீரிஸ்
அம்முச்சி வெப் சீரிஸ்

கிராமத்துப் பின்னணியில் கதைக்களம். பாரம்பர்ய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் காட்சிகள், உறவுகளுடனான இணக்கம் என அம்முச்சி வெப் சீரிஸ் மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான ஒரு படைப்பு இந்த `அம்முச்சி.’ நக்கலைட்ஸ் வீடியோக்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் வரும் வசனங்கள் ஆழமானதாக இருக்கும்.

நம்மை சிரிக்க வைத்தாலும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கும். கடைசியாக வெளியான எபிஸோடில் அம்முச்சி வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாக ஒரு காட்சி. அந்த வீட்டின் ஆண்கள் அனைவரும் பயந்து ஓடிவிட, வீட்டுப் பெண்கள் கையில் கொம்பு மற்றும் சாக்குப் பையுடன் பாம்பைப் பிடித்துவிடுவார்கள். இந்த ஒரு காட்சி நக்கலைட்ஸின் கருத்தியலை அழகாகப் பிரதிபலிக்கிறது. நக்கலைட்ஸ் வீடியோக்களின் கதை மற்றும் வசனங்களுக்குச் சொந்தக்காரரான பிரசன்னா பாலசந்திரனை தொடர்புகொண்டு அம்முச்சி வெப் சீரிஸ் பற்றி உரையாடினோம்.

நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் பிரசன்னா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அம்முச்சி’ வெப் சீரிஸ் உருவாக்கம் பற்றிச் சொல்லுங்க?

``பேக் டு ஸ்கூல் வெப் சீரிஸ் முடியுற கட்டத்தில் இருக்குபோது அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சோம். குழுவா அமர்ந்து கலந்துரையாடல் செய்தபோது எப்பவுமே நகர மக்களுக்கான வீடியோஸ்தான் எடுக்குறோம் ஏன் கிராமத்து கதைக்களத்தில் ஒரு தொடர் பண்ணக்கூடாதுன்னு சிந்திக்க ஆரம்பித்தோம். அப்படி உருவானதுதான் இந்த அம்முச்சி வெப் சீரிஸ். கோடாங்கிபாளையம் என்னும் கிராமத்துப் பெயரைத் தேர்வு செய்து, கதை அங்கு நடக்குற மாதிரி உருவாக்கினோம். தனம் அம்மாவின் நட்பு வட்டத்தில் இருந்த சின்னமணி என்பவரை அம்முச்சி கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்தோம். அவரின் பேச்சும் முகமும் அப்படியே பொருந்தியது.

சிறு பிள்ளைகள் தொடங்கி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்றமாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணிணோம். பாரம்பர்ய விளையாட்டுகளை மையமா வச்சு காட்சிகளை உருவாக்கினோம். அம்முச்சி தொடர் பார்த்துட்டு கோவையில் நிறைய பேர் தங்கள் பிள்ளைங்க கண்ணாமூச்சிலாம் விளையாட ஆரம்பிச்சுருக்காங்கனு சொன்னாங்க. இந்தத் தாக்கத்தைதான் நாங்க எதிர்பார்க்குறோம். ஏதோ பொழுதுபோக்குக்காக ஒரு வீடியோ போட்றோம்னு இருக்கக் கூடாது. சமூகத்தைச் சீரழிக்கும், பெண்களை தாழ்த்திப் பேசும், உருவக் கேலி செய்யும் எந்த ஒரு காட்சியும் நக்கலைட்ஸ் வீடியோக்களில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய அடிப்படைக் கொள்கை’’ என்றார் பக்குவமாக.

பொதுவா எப்படி கான்செப்ட் கிடைக்குது?

``நம்மள சுத்தி இருக்கப் பிரச்னைகள்தான் கான்செப்ட். உதாரணத்துக்கு பீரியட்ஸ் அலப்பறைகள்னு பற்றி ஒரு வீடியோ பண்ணினோம். நம்ம சமூகத்தில் பெண்களின் மாதவிடாய் பற்றி `அது ஒரு தீட்டு’ என்னும் பிற்போக்குத்தனமான எண்ணம் இருக்கு. அதை அப்படியே மெசேஜ்ஜா சோல்லாம கொஞ்சம் காமெடி கலந்து சொன்னோம். இந்த மாதிரிதான் ஒவ்வொரு கான்செப்ட்டும் எடுப்போம். குழுவா உட்கார்ந்து பேசுவோம். மெசேஜ் சொல்ற மாதிரி எங்க வீடியோ இருக்காது. அது எங்க குறிக்கோளும் கிடையாது. பொழுதுபோக்கு கூடவே விழிப்புணர்வு இவ்வளவுதான் எங்க ஐடியா.

அம்முச்சி வெப் சீரிஸ் காட்சி
அம்முச்சி வெப் சீரிஸ் காட்சி

நக்கலைட்ஸ் வீடியோக்களில் வரும் பெண்களும் சரி ஆண்களும் சரி மேக்கப் போடாம நடிக்குறாங்களே?

அழகு அப்படிங்குற விஷயமே நாம கட்டமைத்ததுதான். நான்லாம் முகத்துக்கு பவுடர் போட்டே பலவருஷம் ஆச்சு. எங்க நக்கலைட்ஸ் குழுவுக்கு மேக்கப்மேனே கிடையாது. நாங்க இயல்பா இருக்கோம். யாரையும் யாரும் கட்டாயப்படுத்துறதும் இல்ல. எங்க டீமில் இருக்கும் அனைவருமே ஏறக்குறை ஒரே மாதிரியான சிந்தனை உடையவங்க.

அம்முச்சி வெப் சீரிஸ்
அம்முச்சி வெப் சீரிஸ்

அம்முச்சி க்ளைமாக்ஸ் என்ன, உங்களோட அடுத்த பிளான்?

``உறவுகளுக்குள்ள வர சின்னச் சின்ன பிரச்னைய பெருசு பண்ணக் கூடாது. பொசசிவ்னஸ், பொறாமை போன்றவற்றை எப்படிக் கையாள வேண்டும். இந்த விஷயங்களைப் பற்றித்தான் அம்முச்சி சீரிஸ் இருக்கும். அடுத்ததா 90ஸ் கிட்ஸ்காக ஒரு காதல் தொடர் எடுக்க போறோம். நான் ஐந்து படங்களில் நடிச்சிருக்கேன். ரிலீஸுக்காகக் காத்திருக்கேன். நக்கலைட்ஸ் குழு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கோம். ரொம்ப சீரியஸான படமா இல்லாம, அனைவருக்கும் பிடித்த மாதிரி, ரசிக்குற மாதிரியான ஒரு திரைப்படம் எடுக்க திட்டமிட்டிருக்கோம்’’ என்றார் கனிவுடன்.

நக்கலைட்ஸ் பிரசன்னாவின் வசனங்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு