Published:Updated:

சாம்பல் மேடுகளும்... புகை மண்டலங்களும்... `நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு' ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

Namma Oorukku Ennadhan Achu  movie
Namma Oorukku Ennadhan Achu movie

கொலைக்கான காரணங்களை சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் செய்கிறேன் என க்ளைமேக்ஸ் வரை இழுத்தது ஓவர்டோஸ்.

ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறியும் கதைதான் 'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு'.

ஊர்த் திருவிழாவுக்கு நல்ல நாள் பார்த்து தேதி குறிக்க, திருவிழா அன்று ஒரு நபர் இறந்துவிடுகிறார். ஆனால், அதற்கடுத்து தொடர்ந்து அமானுஷ்யங்கள் அந்த ஊரில் நடக்க ஆரம்பிக்கிறது. சிறுமிகள் காணாமல் போகிறார்கள், தற்கொலைகள் தொடர்கதையாகின்றன. ஊரைக் காலி செய்வது தான் ஒரே வழி என மலையாள மாந்தரீக நம்பூதிரி வரை தெரிவித்துவிட்டு அலறியடித்து ஓடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், ஊரில் வெட்டியாய் சுற்றும் ஹீரோ இதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் மீதிக் கதை.

ஹீரோவாக மாஸ்டர் மகேந்திரன். அருண் விஜய், சாந்தனு, விஜய் சேதுபதி இந்த மூன்று ஹீரோக்களும் நடித்த கிராமத்துப் படங்களின் மேனரிஸங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் குட்டி பவானி. நடிப்பு, டான்ஸ் எல்லாம் ஓகே என்றாலும், பிற நடிகர்களின் சாயல்களை குறைத்துக்கொள்ளலாம். படத்தில் நிறைய நடிகர்கள் பரிச்சயமான முகங்கள் தான் என்றாலும், எந்த விதத்திலும் ஈர்க்காமல் கதையில் வந்து போகிறார்கள்.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

ஏற்கெனவே கேட்டது போல் இருந்தாலும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஜித்தின் பாடியிருக்கும் 'நெஞ்சழுத்தக்காரி' தமிழக டவுன் பஸ்களில் ஒரு ரவுண்டு வரும். படமே தேமே என நகரும் இடங்களிலும், பின்னணி இசையின் மூலம் பீதியைக் கிளப்புகிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஏன் பாஸ் இப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன் வெளியாகி உலக அளவில் பலரின் பாராட்டைப் பெற்ற 'பக்காரூ' திரைப்படம் முதல், இந்த வாரம் வெளியாகியிருக்கும் 'தேன்' வரை இதே ஒன் லைன் தான். ஊர் மக்களைக் காலி செய்ய, அதிகார வர்க்கமும், அயல்நாட்டு வணிகமும் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதுதான் 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' படத்தின் ஒன்லைனும். ஆனால், அதற்காக நாம் என்ன மாதிரியான கதைக்களம் உருவாக்குகிறோம் என்பதில் தான் அது ஒரு படம் நல்ல படமாக மாறுகிறதா இல்லை வெறுமனே கடந்து போகிறதா என்பது தெரியும். 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' அதில் இரண்டாவது வகை.

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

கொலைக்கான காரணங்களை சஸ்பென்ஸ் மெய்ன்டெய்ன் செய்கிறேன் என க்ளைமேக்ஸ் வரை இழுத்தது ஓவர்டோஸ். அதே போல், ஊருக்குள் நடக்கும் எல்லா விஷயத்தையும் ஒருவரே ஒன் மேன் ஆர்மியாக உருட்டுவது வேற லெவல் காமெடி.

தியேட்டரில் சிகரெட் விழிப்புணர்வுக்காக வந்த விளம்பரமான 'நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு' என்பதையே டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். 70-களில் வெளியாகும் படங்கள் போல, இந்த தலைப்பையே படத்திலும் வசனமாக நான்கு பேர் பேசிவிடுகிறார்கள். ஆனாலும், படத்திலும் சிறப்பாக இருக்க வேண்டியது கதை தானே தவிர, தலைப்பு அல்ல என்பதை இயக்குநர் புரிந்துகொள்வது அவசியம்.

காமெடி என்கிற பெயரில் ஒரு டஜன் இரட்டை அர்த்த வசனங்களை இறக்கியிருக்கிறார்கள். அவை பாதிக்கு மேல் சென்சாரில் ம்யூட்டுமாகிவிட்டது. அவற்றில் எந்தக் காமெடியும் இல்லை என்பதை மீறி எரிச்சல் தான் மிச்சம்.

ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும் என்கிற இயக்குநர் நல் செந்தில்குமாரின் நோக்கம் சரிதான். ஆனால், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட கதையும், காமெடிகளும், தமிழ் சினிமாவுக்கு என்ன தான் ஆச்சு' என நம்மையே சொல்ல வைத்துவிடுகிறது.

அடுத்த கட்டுரைக்கு