Published:Updated:

`அசுரன்' தெலுங்கு வெர்ஷனின்  கதையே இதுதான்; மாற்றத்துடன் களமிறங்கும் `நாரப்பா'!

அசுரன் - நாரப்பா
அசுரன் - நாரப்பா ( தனுஷ் - வெங்கடேஷ் )

தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் நடிக்கிறார் கென் கருணாஸ். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சென்ற ஆண்டு வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படம், `அசுரன்'. தனுஷின் அட்டகாச நடிப்பும் வெற்றிமாறனின் அசத்தலான இயக்கமும் ரசிகர்களால் பேரளவில் கொண்டாடப்பட்டன. பஞ்சமி நிலம், சாதியத் தீண்டாமைகள் குறித்த விவாதங்களை எழுப்பிய இப்படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.

நாரப்பா
நாரப்பா
வெங்கடேஷ்

இப்போது இந்தப் படம், தெலுங்கில் ரீமேக் செய்யபட உள்ளது. வெங்கடேஷ் மற்றும் பிரியாமணி நடிப்பில் `நாரப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தை, ஶ்ரீகாந்த் அட்டாலா இயக்குகிறார். தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் நடிக்கிறார் கென் கருணாஸ். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமீபத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களின் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

`அசுரன்' படத்தின் முதற்பாதி கதை, மூத்த எழுத்தாளர் பூமணி எழுதிய `வெக்கை' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. நாவலில், சிதம்பரத்தைச் சுற்றிதான் கதை நகரும். அதைத் திரைப்படத்திற்காக, சிவசாமியை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார் வெற்றிமாறன்.

தாழ்த்தபட்ட மக்கள் செருப்பு அணிந்திருப்பதற்கு பின்னான சுயமரியாதைக் கதை, கீழ்வெண்மணியில் நிகழ்ந்த கொடூரங்கள் என சிவசாமியின் கதையை விரித்திருப்பார். இப்போது இப்படத்தின் தெலுங்கு ரிமேக்கில், 1985-ஆம் ஆண்டு ஆந்திராவின் கரம்சேடு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையில் மாற்றம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆந்திராவில் 60'களில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட உயர் சாதியின் கட்டுப்பாட்டில்தான் எல்லா தொழிற்துறைகளும் இயங்கி வந்தன. என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த பின்னர், அங்கும் அந்தச் சாதியின் கைகளே ஓங்கியிருந்தது. உயர் சாதியினர் அனைவரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக இருந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தனர். இது இவர்களுக்கு மத்தியில் பகையை வளர்த்தது.

தனுஷ்
தனுஷ்

இந்நிலையில் கரம்சேடு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் உயர் சாதியை சேர்ந்த இரண்டு பேர் தங்கள் மாடுகளைக் கழுவுவதற்கு பயன்படுத்தினர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரு சிறுவனையும், அவனுக்கு ஆதரவாக நின்ற ஒரு பெண்ணையும் தாக்கவும் செய்தனர். தற்காப்புக்காகக் கையில் இருந்த வாளியை அவர்களை நோக்கி வீசினாள் அந்த பெண். இதைக் காரணம் காட்டி அந்தச் சமூகத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட உயர்சாதியை சேர்ந்த 160 பேருக்கு தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் ஆந்திராவில் மிகப் பெரிய அளவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் `நாரப்பா' படத்தில் நடிக்கும் வெங்கடேஷ் அதே உயர் சாதியைச் சேர்ந்தவர்.

நாரப்பா
நாரப்பா

ஆகையால், இந்த படமும் `அசுரனை'ப் போலவே ஆந்திராவிலும் சாதிய வன்கொடுமைகளை குறித்தான விவாதங்களை எழுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு