Published:Updated:

``ஆட்டுப்புழுக்கைத் தேர்தலுக்காக ராதாரவி சேலத்துக்கு ஓடியது ஏன்?'' - நாசர்

நாசர்
நாசர்

"நடிகர் சங்கத்தின் அடிப்படை சட்டவிதிகளை மாற்றும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இனிமேல் அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு சங்கத்தில் இடமில்லை என நடிகர் சங்கத்தின் சட்டப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். நிர்வாகப் பொறுப்புகளில் அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள்" - நடிகர் நாசர்

நடிகர் சங்கத் தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. விஷால் தலைமையிலான 'பாண்டவர் அணி'க்கும் பாக்யராஜ் தலைமையிலான 'சுவாமி சங்கரதாஸ் அணி'க்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்த சூழலில், சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் நாசரிடம் பேசியதிலிருந்து...

"நடிகர் சங்கக் கட்டட வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது ஏன், அதற்கு சட்ட சிக்கல் ஏதாவது இருக்கிறதா?"

"தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே நடிகர் சங்கம் இல்லை. இங்குள்ள உறுப்பினர்கள் எல்லோருமே சேர்ந்ததுதானே சங்கம். நம் கட்டட வேலையில் சுணக்கம் ஏற்பட்டால், சுறுசுறுப்பாக நடத்தும் வேலையை எங்களோடு சேர்ந்து நீங்களும் செய்ய வேண்டியதுதானே, அதைவிட்டுவிட்டு குற்றச்சாட்டு சொல்வதில் என்ன அர்த்தம்? நாங்கள்தான் 'நடிகர் சங்கத்தின் கட்டடத்தைக் கட்டினோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நட்சத்திரக் கிரிக்கெட், மலேசியாவில் நடந்த கிரிக்கெட், கலை நிகழ்ச்சிகள் என்று கடும் வெயிலில் நடனமாடிய ஒவ்வொரு நடிகருக்கும் நடிகைக்கும் அதில் பங்கு இருக்கிறது. நாங்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்தோம்; அவ்வளவுதான். எங்கள் சங்கத்தின் மீது சட்ட சிக்கல் வராமல் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனால், நிலப் பத்திரத்தை யாரிடமும் அடமானம் வைக்கவில்லை, கட்டடத்தின் பேரில் வங்கிகளில் பணத்தைக் கடனாகவும் பெறவில்லை."

"நடிகர் சங்கத்தின் நிதி நிலை எப்படி இருக்கிறது?"

"சங்கம் எங்கள் கைகளுக்கு வந்தபோது, 85 லட்சம் ரூபாய் நிதி இருந்தது. தற்போது, சங்கத்தில் உள்ள சக நடிகர்கள் துணையோடு, 1.75 கோடி ரூபாய் நிதி இருக்கிறது. முதியவர்களுக்கு ஒய்வூதியம், மருத்துவ உதவி என்று அனைத்தும் செய்து வருகிறோம்."

கார்த்தி, நாசர், விஷால்
கார்த்தி, நாசர், விஷால்

"நடிகர் சங்கம் உங்கள் கைக்கு வந்த பிறகு, நிகழ்ந்த மாற்றம் என்ன?"

"நாங்கள் பதவிக்கு வருவதற்கு முன்பு நடந்த பொதுக்குழுக்களில் வெளியூரில் இருந்து வரும் நாடக நடிகர்கள், சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் நடிகர்கள், நடிகைகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்று நீங்களே கேட்டுப் பாருங்கள். கடந்த மூன்றரை வருடங்களில் நடந்த ஒவ்வொரு பொதுக்குழுவிலும் ஏதோ கல்யாண வீட்டுக்கு வருவதுபோல் தங்கள் குடும்பம், குழந்தைகளோடு குதூகலமாகக் கலந்துகொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் கெளரவத்தோடு கலந்துகொண்டு, உணவு உண்டு மகிழ்ந்தனர். முதியவர்களுக்கு 2,000 ரூபாயும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாயும் மாதந்தோறும் தருகிறோம். இந்தப் பணம் நிச்சயம் அவர்களின் வறுமையைப் போக்கிவிடாது.

ஆனால், நடிகர் சங்கம் தரும் பணத்தை அவர்கள் கெளரவமாக நினைக்கிறார்கள். இதற்காக ஏ.சி.சண்முகம், ஜேப்பியார் கல்லூரி , ஐசரி சார் உட்பட அனைவருமே உதவி வருகின்றனர். சென்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு சங்க உறுப்பினர்களின் பட்டியலைக் கேட்டோம்; யாரும் தராமல் மறுத்தனர். இப்போது, ஒரு உறுப்பினர் பட்டியலைப் பார்க்க விரும்பினால் 100 ரூபாய் பணம் செலுத்தினால், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் பெயரும் கைக்கு வந்து சேரும். அந்தளவுக்கு எளிமையாக்கியிருக்கிறோம். இரும்புக் கதவு போட்டு மூடிக்கொண்டு செயல்பட்ட சங்கத்தை, திறந்த வாசலாக மாற்றியிருக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளாகத் தேர்தலே நடத்தாமல் பதவிகளைப் பகிர்ந்துகொண்டனர். நாங்கள் வந்த பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வைத்திருக்கிறோமே... இதுவே பெரிய மாற்றம்தானே?"

"நடிகர் சங்கத் தேர்தலை 'ஆட்டுப்புழுக்கைத் தேர்தல்' என்று ராதாரவி சொல்கிறாரே?"

"எங்கள் சங்கத்துக்கு முறையாக நடக்கும் தேர்தலை அவர் கொச்சைப்படுத்துகிறார். ஆட்டுப்புழுக்கைத் தேர்தலுக்கு எதற்காக சேலத்துக்கு ஓடிப்போய் ஓட்டு கேட்கிறார்?"

ராதாரவி
ராதாரவி

"அரசியல் கட்சியில் இருப்பவர்கள், நடிகர் சங்க நிர்வாகிகளாக இருப்பது நியாயமா?"

"முதலில் கருணாஸ் நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு ஜெயித்த பிறகே அரசியலுக்குப் போனதால், சங்கத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. விஷால் அரசியலுக்குச் சென்றபோது சலசலப்பு ஏற்பட்டது உண்மை. நடிகர் சங்கத்தில் உள்ள அடிப்படை சட்ட விதிகளை மாற்றும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இனிமேல் அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு நடிகர் சங்கத்தில் இடமில்லை என்று நடிகர் சங்கத்தின் சட்டப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். அதனால், நிர்வாகப் பொறுப்புகளில் அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள்."

"நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துகொண்டு, விஷால் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்தது முறையா?"

"ஒரே மேடையில் பெரியாரும் ராஜாஜியும் அமர்ந்து புன்முறுவலோடு சிரித்துக்கொண்ட பூமி இது. இங்கே எடுத்ததுக்கெல்லாம் அரசியல் காரணம் பார்த்தால், என்ன செய்வது? தி.மு.க தலைவரை சின்ன வயதில் இருந்தே தெரியும் என்று சொல்கிறார் விஷால். அதையும் தாண்டி, அதற்கு அரசியல் சாயம் பூசினால் என்ன செய்வது, எங்களை எதிர்த்துப் போட்டியிடும் உதயாவும்தான் ஸ்டாலின் சாரை சந்தித்தார். அவரை என்ன செய்யப்போகிறார்கள்!"

MK Stalin
MK Stalin

" 'ஸ்டாலினை சந்தித்த விஷாலை முதல்வரையும் சந்திக்கச் சொன்னேன்; விஷால் கேட்கவில்லை' என்று ஐசரி கணேஷ் சொல்கிறாரே?"

"முதல்வரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம். நிச்சயமாக சந்திப்போம்."

"நடிகர் சங்கத்திலிருந்து 300 உறுப்பினர்களைத் திடீரென்று நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?"

"சென்ற தேர்தலை நடத்துவதற்கு முன்பு அவசரம் அவசமாக நடிகரே அல்லாத 200 உறுப்பினர்களைத் தவறாகச் சேர்த்தவர்களை வெளியேற்றினோம். பிறகு சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டவர்களை நீக்கினோம். தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களை மறுபடியும் சேர்த்துக் கொண்டோம். நடிகர் சங்கத்தைவிட்டு நீக்கப்பட்டவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 'நான் புரொபஷனலிஸ்ட்' என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறோம்."

நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தல்

"தலைவர் பதவிக்கு உங்களை எதிர்த்துப் போட்டியிடும் பாக்யராஜ் குறித்து?"

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வாயாலேயே தன் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் சார் என்னை எதிர்த்துப் போட்டியிடுவது பெருமையாக இருக்கிறது. இன்றைக்கு எனக்கு எதிராக நின்றாலும், எப்போதுமே சிறந்த திரைக்கதைத் திலகம் என்று அவர்மீது நான் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் மாறப்போவது இல்லை."

அடுத்த கட்டுரைக்கு