சினிமா
Published:Updated:

நட்சத்திரம் நகர்கிறது - சினிமா விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது
பிரீமியம் ஸ்டோரி
News
நட்சத்திரம் நகர்கிறது

‘ஒழுங்கற்றவையின் ஒழுங்கு’ என ஒரேவரியில் பொருத்தமாய்ச் சொல்லிவிடலாம் செல்வா ஆர்கே-யின் படத்தொகுப்பை.

மரபுகளை உடைத்து, சமூகம் தொடத் தயங்கும் தலைப்புகளை உரக்கப் பொதுவெளியில் முன்வைத்து, உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் ஒலித்து தமிழ்சினிமா இதுவரை வகுத்து வைத்திருக்கும் இலக்கணங்களையெல்லாம் மாற்றியமைக்கிறது இந்த ‘நட்சத்திரம் நகர்கிறது.’

புதுச்சேரியில் இயங்குகிறது ஒரு நாடகக்குழு. கலைமீதான தீராக்காதல் கொண்ட சிலர், சினிமாமீது தணியாத மோகம் கொண்ட சிலர், சரி - தவற்றுக்கு அப்பாற்பட்ட வெளி அது என நம்பும் சிலர், ‘கலை பொழுதுபோக்கல்ல, அது ஓர் அரசியல் வடிவம்’ என நம்பும் சிலர் - இப்படிச் சமூகத்தின் பல குழுக்களைச் சேர்ந்தவர்களும் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். இவர்களின் பின்னணி, அது சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் பார்வைகள், அவர்களுக்குள் நிகழும் உள்முரண்கள், இவர்களின் இந்தக் கூட்டுப்பயணம் வெளிச்சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என ஒழுங்கற்ற, ஆனால் அழகான ஓவியமாய் விரிகிறது இந்தப் படம்.

துஷாரா - ‘நட்சத்திரம் நகர்கிறது’ நமக்குப் பரிசளிக்கும் அனுபவத்தின் ஆன்மா. எக்கச்சக்க பரிமாணங்கள் கொண்ட கனமான கதைகளின் தொகுப்பில் பிரதான கதாபாத்திரமாய் அவ்வளவு முதிர்ச்சியோடு மிளிர்கிறார். உலகத்தை அவர் கண்கள் வழியே பார்க்க ஏங்கி, அவரின் கடந்தகாலத்திற்காகக் கலங்கி, நிகழில் அவர் போதிக்கும் நிஜங்களுக்காகக் காதலில் விழுந்து... காட்சிக்குக் காட்சி நம்மையும் திரைக்குள் இழுத்து அவ்வுலகில் விட்டுவிடும் அசத்தலான நடிப்பாற்றல். அங்கீகாரங்கள் பல காத்திருக்கின்றன.

நட்சத்திரம் நகர்கிறது - சினிமா விமர்சனம்

தேவைக்கேற்ப லட்சியவாதம் பேசும் இளைஞனாகக் காளிதாஸ் ஜெயராம். அதீத கொள்கைப்பிடிப்பும் இல்லாத, அதேசமயம் அறவே அரசியல் புரிதலில்லை எனச் சொல்லிவிடவும் முடியாத ஒரு கதாபாத்திரத்தின் மேல் சமநிலை தவறாது நடந்து ஈர்க்கிறார். திரையரங்கில் அமர்ந்திருக்கும் சராசரிப் பார்வையாளனைத் தூக்கி உள்ளே உலவவிட்டால் அதுதான் கலையரசன் ஏற்று நடித்திருக்கும் ‘அர்ஜுன்.’ மூன்று மணிநேரப் படத்தின் ஏதோவொரு புள்ளியில் பார்ப்பவர்களும் அர்ஜுனின் மனநிலை மாற்றத்திற்கு உட்பட்டாலே அது கலையரசனின் வெற்றி. கலை வழியே மாயங்கள் நிகழ்த்தும் பா.இரஞ்சித்தின் வெற்றி.

தன்பால் ஈர்ப்பாளர்களாகத் தோன்றும் சுமித் போரானா, அர்ஜுன், சுபத்ரா ராபர்ட், திருநங்கை செரின் செலின் மேத்யூ, அவரை இயல்பாய்க் காதலிக்கும் ஜோயல், நடனம் வழியே தாங்கள் நம்புவதைப் பரப்பும் ஸ்டீபன் ராஜ், உதயா சூர்யா, கலைக்கு மொழியில்லை என உரைக்கும் மனிஷா டெய்ட், கலைஞர்களில் பெரியவர் - சின்னவர் இல்லை எனச் சொல்லும் சார்லஸ் வினோத், இசையையும் அரசியலையும் இணைக்கும் புள்ளியாக ஹரிகிருஷ்ணன், விளிம்புநிலை வடசென்னை இளைஞராக ஞானபிரசாத், ‘நாடகம்தான் உலகம்’ என சமூகப்போராளியாய் வாழும் ரெஜின் ரோஸ், அடக்குமுறைக்கு ஆளாகும் ஆதிக்க சாதிப் பெண்ணாக வின்ஷு ரேச்சல், அடிப்படைவாத சக்தியாக வரும் சபீர் என வரும் ஒவ்வொருவருமே சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் பிரதிநிதிகள், குறியீடுகள். தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் உணர்ந்து கதையின் போக்கில் நடித்திருக்கிறார்கள்.

அண்டத்தின் நட்சத்திரக்குவியல் அனைத்தையும் அள்ளிவந்து படம் முழுக்க இறைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரும், கலை இயக்குநர் ஜெயரகுவும். வண்ணங்களாலான இந்த உலகை மேலும் மெருகேற்றி அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது டென்மாவின் இசை. இவர்கள் மூவரின் உழைப்பில் மாபெரும் காட்சியனுபவமாக விரிகிறது படம்.

‘ஒழுங்கற்றவையின் ஒழுங்கு’ என ஒரேவரியில் பொருத்தமாய்ச் சொல்லிவிடலாம் செல்வா ஆர்கே-யின் படத்தொகுப்பை. காட்டாறு போல கிளைகள் விரித்து எதிர்ப்படும் அனைத்தையும் அணைத்து உள்வாங்கிச் செல்லும் கதையை இயக்குநரோடு இணைந்து கோத்திருக்கிறார்.

முன் கூறியது போல ‘கலை ஓர் அரசியல் வடிவம்’ என்பதை மிகத் தீர்க்கமாய் நம்பும் படைப்பாளி பா.இரஞ்சித். அவரின் உச்சபட்ச உணர்ச்சி வெளிப்பாடுதான் இந்தப் படம் என தாராளமாய்ச் சொல்லலாம். தனக்கான வெளியைத் தானே தீர்மானித்து, வெகுஜன சினிமா வரையறைகளுக்குள் அடங்காமல், தன் அரசியல் சார்பை மிக அழுத்தமாய், துணிவோடு பகிர்ந்து, காதலின்பால் ஒடுக்கப்பட்ட அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தி, கதை சொல்லலிலும் துளியும் சமரசம் செய்யாது காட்சிமொழி வழியே பரவசத்திற்குள்ளாக்கி... அவர் உழைப்பின் முத்திரை விரவிக் கிடக்கிறது படம் நெடுக!

குழுவாய் அமர்ந்து அவர்கள் உரையாடும்போது இது ஓர் அரசியல் படம். வயது, இனம், பால், சாதி தாண்டி அம்மனிதர்கள் ஈர்ப்பு கொள்ளும்போது இதுவொரு காதல் சித்திரம். கதவு திறந்து பாயும் சூரியக்கதிரினூடே கைபிடித்து இனியனை ரெனே அழைத்துச்செல்லும்போது இதுவொரு மாயக்கனவு. ‘நாடகக்காதல் என ஒன்றில்லை, காதலை வைத்து நீங்கள் நடத்துவதே நாடகம்’ என ஆதிக்கச் சாதியினரைச் சுட்டி இரண்டாம்பாதியில் விரிவது ஓர் ஆவண அறிக்கை. வசனங்கள் வழியாகவும் நினைத்ததை அலுக்காமல் சொல்லலாம் என நிறுவிய இடத்தில் இது ஒரு மாற்று சினிமா. இப்படி எல்லாமாகவும் இதைக் கட்டமைத்திருக்கிறார் பா.இரஞ்சித். அந்தவகையில் இது தமிழ்சினிமாவில் அரிதாக நிகழும் மாயாஜாலம்.

படைப்பை அதன் தன்மை பொறுத்து, படைப்பாளியை அவர் சார்புநிலை பொறுத்து விமர்சிக்கும் உரிமை பொதுவெளியில் அனைவருக்கும் இருக்கிறது. இது இயக்குநருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் எனும்போது இளையராஜாவை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள்நிலையில் வைப்பது, அவரை விமர்சிக்கும் அனைவருக்குமே சாதிய மனநிலை இருக்கிறது என அவர் படத்தில் கட்டமைத்திருப்பதுதான் பெரும் உறுத்தல். ‘அரசியல் தெளிவு ஒரு நாளில் வராது’ எனப் பாடமெடுக்கும் ரெனேயின் கதாபாத்திர வரைவில் இந்த அடிப்படை தப்பிப்போவதை இயல்பாகக் கடக்க முடியவில்லை.

நட்சத்திரம் நகர்கிறது - சினிமா விமர்சனம்

முதன்முறை அனைவரும் உரையாடும்போது வாதம் - பிரதிவாதம் என சமமாய் நகர்கிறது கதை. ஆனால் போகப் போக இயக்குநரின் விமர்சனங்கள் மொத்தமாய் இனியன் என்ற ஒரே கதாபாத்திரத்தின் மேல் சுமத்தப்பட, அதன் நம்பகத்தன்மையும் அடிபட்டுப்போகிறது. இரண்டாம் வாய்ப்பு வழங்குவது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றாலும், கலையரசனுக்கு வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பு அவரின் குற்றத்தை எளிதாய் ரெனே அணுகுவதைப் போன்ற சாயலையும் உருவாக்குகிறது.

பா.இரஞ்சித் படம் வழியே பேசியிருக்கும் விஷயங்களில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், தமிழ் சினிமாவில் என்றென்றும் மங்காது மின்னும் நட்சத்திரமாய் இந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ இருக்கும்.