சினிமா
தொடர்கள்
Published:Updated:

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

முதல் விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிச்சதும் உடனே அவருக்கு போன் பண்ணி வாழ்த்தினேன். ‘கிடைச்சிடுச்சா’ன்னு சந்தோஷப்பட்டார்.

68-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை பத்து தேசிய விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றிருப்பது வியக்க வைத்திருக்கிறது. ‘சூரரைப்போற்று' சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றெடுத்திருக்கிறது. வஸந்த் சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' தமிழில் ‘சிறந்த படம்’ என விருது வென்றதுடன், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த துணை நடிகை விருதுகளையும் அள்ளியிருக்கிறது. சிறந்த வசனத்திற்காக 'மண்டேலா' இயக்குநர் மடோன் அஸ்வின் விருது பெற்றதோடு, சிறந்த அறிமுக இயக்குநராகவும் சிறப்பு பெறுகிறார். இவர்கள் எல்லோரிடமும் விகடனின் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு, வெற்றித் தருணங்களை அவர்களிடம் கேட்டு அறிந்தோம்.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

நடிகர் சூர்யா

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி. பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த நேரத்தில் ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என்மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வஸந்த் சாயையும், தயாரிப்பாளரான இயக்குநர் மணிரத்னத்தையும் நன்றியுடன் நினைக்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், இந்தப் படத்தில் நடிக்கவும் தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

இயக்குநர் சுதா கொங்கரா

‘சூரரைப் போற்று’ படம் பண்றப்ப அதை சரியா எடுக்கணும், வெற்றி பெறணும்னு நினைச்சேன். அப்புறம், படம் முடிஞ்சதும் சூர்யாவோட உழைப்பைப் பார்க்கிறபோது அவருக்கு விருது கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். ரெண்டுமே நடந்திருக்கு. அதைப் போல ஜி.வி.யோட ‘கையில ஆகாசம்’ பாடலைக் காட்சியோட பார்க்கறப்ப இப்பவும் அழுதுடுவேன். அவருக்கும் விருது கிடைக்கணும்னு விரும்பினேன். இப்ப அஞ்சு அவார்டுகள் கிடைச்சிருக்கு.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

முதல் விருது ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிச்சதும் உடனே அவருக்கு போன் பண்ணி வாழ்த்தினேன். ‘கிடைச்சிடுச்சா’ன்னு சந்தோஷப்பட்டார். என் குரு மணி சார்கிட்ட உதவியாளரா இருந்தபோது அவருக்கு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’க்காக விருது கிடைச்சது. இப்ப எனக்குக் கிடைச்சதும், என் குருவே ‘பெருமைப்படுறேன்’னு வாழ்த்தினார். அதைப் போல பாரதிராஜா சாரும் வாழ்த்தினார். சக இயக்குநர் நண்பர்களும் வாழ்த்தினாங்க. நிறைவா இருக்கேன்.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்

இதற்கு முன்னாடி ‘வெயில்' படத்தின் போது தேசிய விருதை எதிர்பார்த்தேன். இல்லைன்னு தெரிஞ்சதும் அமைதியாகிட்டேன். எனக்கும், சூர்யா சாருக்கும் இந்த விருது சுதா மூலமாக வரணும்னு இருந்திருக்கு. சுதா எனக்கு 16 வருஷமாகப் பழக்கம். அவங்க மணிரத்னத்தின் உதவியாளராக வந்ததும், நான் ரஹ்மானின் உதவியாளனாக இருந்ததும் ஞாபகத்திற்கு வருது. என்னோட 70-வது படத்திற்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. இந்த விருதைத் தலையில் ஏத்திக்கிட்டு இருக்காமல் மனதில் ஒரு நல்ல நினைவாக வச்சுக்கணும். நடித்து 15 படங்கள் தான் வந்திருக்கு. பாலாவின் ‘நாச்சியார்' படத்திற்கே எனக்கு சிறந்த நடிகர் விருது வந்திருக்க வேண்டியது. ஃபைனல் வரைக்கும் போய் மிஸ் ஆகிவிட்டது. இந்தச் சமயம் எனக்கு வழிகாட்டிய அப்பா வெங்கடேஷுக்கு என் அன்பைச் சொல்லணும். சின்ன வயதில் அம்மா ரெஹானாவும் என்னை மியூசிக் கிளாசுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அதை ஒரு நல்ல ஆரம்பமாக நினைப்பேன். இசையிலும், நடிப்பிலும் என் தேடல் தொடரணும். அந்த விதத்தில் இந்த விருது எனக்கான வெளிச்சம்னு சொல்லணும்.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

நடிகை அபர்ணா பாலமுரளி

தேசிய விருதுப் பட்டியலில் என்னுடைய பெயரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாருமே வாழ்த்தினாங்க. இயக்குநர் சுதா கொங்கராவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். எனக்கு வாய்ப்பளித்து, எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர் அவர். மொத்தப் பெருமையும் அவரைத்தான் சேரணும். சூர்யா, ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா என இவர்கள் எல்லோருக்கும் தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

நடிகை லட்சுமிப்ரியா - சிறந்த துணை நடிகை

நான் ஒரு ஸ்போர்ட்ஸ் வுமன். சினிமாவிற்கு ஆசைப்பட்டுத்தான் வந்தேன். ஒவ்வொருத்தருக்கும் சினிமாவில் தேசிய விருது என்பது ஒரு கனவுதான். ஆனால் அது நமக்குக் கிடைக்குமா, அந்த இடத்திற்கு நாம் போக முடியுமான்னு ஒரு விஷயம் இருக்கு இல்லையா? ஆனால் வஸந்த் சார் இதை சாத்தியப் படுத்தியிருக்கிறார். என்னோட ஸ்போர்ட்ஸ், கதாபாத்திரம் இரண்டையும் ஒன்றாக்கினார். ஷூட்டிங் நடக்கும்போதே இந்த கேரக்டரின் சிறப்பு பற்றி எல்லோரும் பேசினார்கள். கதாபாத்திரங்களை அழுத்தமாக, அதே நேரத்தில் பூரணமாகக் கொண்டு வந்தார் இயக்குநர். ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் தேசிய விருது என்பது ஒரு நல்ல அங்கீகாரம். உழைப்பிற்கான வெகுமதி. அந்த விருது அந்த வருஷத்தின் சிறந்த நடிப்புக்கே தவிர, மொத்த வாழ்க்கைக்கான விஷயம் கிடையாது. அதனால் இதை ஒரு நல்ல விஷயமாக எடுத்துக்கொண்டு, இன்னும் நடிப்பிலும், நல்ல கேரக்டர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!
உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ - இயக்குநர் வஸந்த் சாய்

பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த சினிமாவிற்கு மூன்று விருதுகள் கிடைத் திருப்பது மனதுக்கு நிறைவா இருக்கு. என் குருநாதர் கே.பாலசந்தர், அசோக மித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய நாலு பேருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் படித்த கதைகளை, மறுபடியும் இந்தப் படத்துக்காக யோசிச்சேன். இப்படி ஒரு ஆந்தாலஜியில பெண்கள்னு ஒரு தீம் கனெக்ட் பண்ணினேன். அதுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தப் படத்துக்கு இருபதுக்கும் மேலான சர்வதேச அங்கீகாரங்களும் கிடைச்சது கூடுதல் சந்தோஷம்.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்

இந்த தேசிய விருது வந்த நாளைக்கூட இனிய நாளாகப் பார்க்கலாம். இது எனக்கு ஒன்பதாவது தேசிய விருது. இதை ‘ஒரு மைல் கல்'னு எடுத்துக்கிட்டு அடுத்த ஒரு நல்ல சினிமாவிற்கான வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். டைரக்டர் வஸந்த் சார் மூன்று தமிழ் நாவலாசிரியர்களின் கதைகளைக் கொண்டு வந்தார். அதைத் தரமான படைப்பாக எந்த சமரசமும் இல்லாமல் குருவிற்கான சிறந்த சமர்ப் பணமாகச் செய்ய விரும்பினார். அதற்கு நான் உதவினேன். கிட்டத்தட்ட 600 படங்கள் போல எடிட்டிங் செய்தி ருப்பேன். இந்த எண்ணைத் தாண்டி, என் படங்களில் எத்தனை படங்களை மக்கள் தங்கள் ஞாபகத்தில் நிறுத்து கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஒரு படைப்பு காலத்தை மீறி நிற்பது தான் பெரிய விஷயமாகப்படுகிறது. அந்த விதத்தில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' எனக்கு முக்கியமான படம் தான். இந்த வாய்ப்பைத் தந்த வஸந்திற்கு என் அன்பு.

உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!
உயரப் பறக்கும் கோலிவுட் கொடி!

‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின்

மகிழ்வா இருக்கு. ‘மண்டேலா’ படத்தை தியேட்டருக் காகத்தான் எடுத்தோம். கொரோனா லாக்டௌனால் ஓ.டி.டி-யில் வெளியாச்சு. அப்படியும் படம் நல்ல பெயர் எடுத்தது. தியேட்டர்ல ரிலீஸ் ஆகலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன வருத்தம் இருந்துச்சு. இப்ப எங்க படத்துக்கு ரெண்டு விருதுகள் கிடைச்சதும் அந்த வருத்தம் போயிடுச்சு. 2012-ல் ‘தர்மன்’னு நான் இயக்கின குறும்படத்துக்கு தேசிய விருது கிடைச்சது. ‘மண்டேலா’ படப்பிடிப்பு சமயத்தில் யோகிபாபு எனக்கு நிச்சயம் விருது கிடைக்கும்னு சொல்லிட்டி ருப்பார். அவருக்கும் நன்றி. ‘மண்டேலா’வுக்கு வசனத்திற்குச் சிறந்த விருதுன்னு அறிவிச்ச அடுத்த விநாடியே சிவகார்த்திகேயன் சார் வீடியோ கால்ல வந்து வாழ்த்தினார். அப்புறம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும் அறிவிச்சது அடுத்தடுத்த சந்தோஷம்.