Published:Updated:

நவரசா : திறமையான நடிகர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், அசத்தும் டெக்னீஷியன்கள்… ஆனால், ரசம்?!

நவரசா

கோவிட் சூழலினால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைத்துறையின் தினச்சம்பள ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'நவரசா' திரைப்படத் தொகுப்பை உருவாக்கும் யோசனை இயக்குநர் மணிரத்னத்திற்கு வந்திருக்கிறது. அவருடன் உற்சாகமாக கைகோர்த்திருக்கிறார் அவரது தோழர் ஜெயேந்திரா.

நவரசா : திறமையான நடிகர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், அசத்தும் டெக்னீஷியன்கள்… ஆனால், ரசம்?!

கோவிட் சூழலினால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைத்துறையின் தினச்சம்பள ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'நவரசா' திரைப்படத் தொகுப்பை உருவாக்கும் யோசனை இயக்குநர் மணிரத்னத்திற்கு வந்திருக்கிறது. அவருடன் உற்சாகமாக கைகோர்த்திருக்கிறார் அவரது தோழர் ஜெயேந்திரா.

Published:Updated:
நவரசா

புத்தம் புதிய சினிமாவைப் பார்க்க தியேட்டருக்குத்தான் போகவேண்டும் என்ற நிலையை OTT எனும் நவீன நுட்பம் மொத்தமாக மாற்றத் தொடங்கிவிட்டது. ஓடிடி நேரடி ரிலீஸும், ஆந்தாலாஜி படங்களும் மக்களுக்கு பழக ஆரம்பித்துவிட்டதால் தமிழ் சினிமாவின் திரைக்கதையிலும் அது தன்னிச்சையாக பிரதிபலிக்கத் தொடங்கி விட்டது ஆரோக்கியமான மாற்றம்.

ஒரு வெகுசன சினிமாவை அதன் வழக்கமான வணிக அம்சங்களைத் தாண்டி சுதந்திரமாகவும் மாறுதலாகவும் உருவாக்கலாம் என்கிற உற்சாகமான சிந்தனை இயக்குநர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் கைவிலங்குகள் சற்று தளர்த்தப்பட்டிருக்கின்றன. அப்படியொரு பரிணாம வளர்ச்சியை இணையத் தொழில்நுட்பம் இன்றைக்கு தந்திருக்கிறது. இந்தத் தொடக்கத்தின் பெரிய முயற்சியாக இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியிருக்கும் 'நவரசா' என்கிற Anthology-ஐ சொல்லலாம்.

இந்திய நாட்டியக் கலையானது, மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை ஒன்பது விதங்களில் தொகுத்திருக்கிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவிட் சூழலினால் பாதிக்கப்பட்டிருக்கும் திரைத்துறையின் தினச்சம்பள ஊழியர்களுக்கு உதவுவதற்காக இந்தத் திரைப்படத் தொகுப்பை உருவாக்கும் யோசனை இயக்குநர் மணிரத்னத்திற்கு வந்திருக்கிறது. அவருடன் உற்சாகமாக கைகோர்த்திருக்கிறார் அவரது தோழர் ஜெயேந்திரா. இந்த நல்ல நோக்கத்திற்காக, 'நவரசா'வில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எவரும் சம்பளம் பெற்றுக் கொள்ளாமல் பணிபுரிந்திருக்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.

எப்படியிருக்கிறது 'நவரசா'?

எபிஸோட்கள் அமைந்திருக்கும் இயல்பான வரிசையில் அல்லாமல் ரசனையின் அடிப்படையில் ஒன்பது ரசங்களையும் இங்கே ஒவ்வொன்றாகக் காணலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. இன்மை (அச்சம்) - இயக்கம் : ஆர். ரத்திந்திரன் பிரசாத்

‘'யாருப்பா.. இந்த டைரக்டர்?’' என்று ஒவ்வொரு பார்வையாளரையும் நினைக்க வைத்திருக்கிறார் ரத்திந்திரன். இவர் இயக்கிய முந்தைய குறும்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் கவனம் பெற்றிருக்கின்றன. 'பூமிகா' என்கிற திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

இன்மை
இன்மை

'வினை விதைப்பவன் வினை அறுப்பான்' என்பதுதான் 'இன்மை' எபிஸோடின் மையக்கரு. வசதியான பின்னணியில் வசிக்கும் ஓர் இஸ்லாமியப் பெண்ணை, பால் வடியும் முகத்துடன் வந்து சந்திக்கிறான் ஓர் இளைஞன். அவன் மெல்ல மெல்ல அந்தப் பெண்ணின் நிழலான பின்னணியைப் பற்றி சொல்ல அவளுக்குள் அச்சம் பெருகுகிறது. 'செய்வினை' என்கிற மூடநம்பிக்கையை விரிவாக சொல்லிக் கொண்டு போனாலும் பின்னர் அதை ஒரு நடைமுறை டிவிஸ்ட்டின் மூலம் போக்கியிருப்பது சிறப்பு.

சித்தார்த்தும் பார்வதியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ‘'நான் என்ன பாவம் செய்தேன்?’' என்று முறையீடாக கேட்கும் ஒரு நீளமான வசனம் கொண்ட க்ளோசப் ஷாட்டில் தான் எப்படிப்பட்ட நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார் பார்வதி. 'ஜின்'னை ஏவி விடும் மந்திரவாதியாக ராஜேஷ் பாலசந்திரனின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படத்தின் கதைக்குத் தொடர்பான calligraphy டைட்டில் முதல் களப் பின்னணிவரை பல இடங்களில் பரவியிருப்பது சிறப்பு. விஷால் பரத்வாஜின் இசை ஓர் இனிய ஆச்சரியம்.

நாம் என்றோ செய்த பாவம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரும் என்கிற 'அச்சத்தை' ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது 'இன்மை'.

பாயாசம்
பாயாசம்

2. பாயாசம் (இளிவரல்) - இயக்கம் : வசந்த் சாய்

'அருவருப்பு' எனும் உணர்வினை தி.ஜானகிராமனின் 'பாயாசம்' என்கிற சிறுகதையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தை நாம் பார்த்து நீண்ட காலமாகி விட்டது. ('சிவரஞ்சனியை எப்போ கண்ல காட்டுவீங்க சார்?!') அந்த ஏக்கத்தை சற்று தணிக்கும் வகையில் உருவாகியிருக்கிறது வசந்த்தின் 'பாயாசம்'.

தமிழ் சிறுகதைகளின் மாஸ்டர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். மனித மனதின் உள்ளே ஒளிந்திருக்கும் அழுக்குகளை, விகாரங்களை, புகைச்சல்களை பதிவு செய்வதில் தி.ஜாவின் எழுத்து மிக மிக நுட்பமாகச் செயல்பட்டிருக்கும் இவரின் 'பாயாசம்' என்கிற சிறுகதை மிகப் பிரபலமானது. பொதுவாக புகழ்பெற்ற ஒரு இலக்கிய எழுத்தை அதன் ரசிகர்களுக்கு பிடித்தமான வகையில் படமாக்குவது என்பது எந்தவொரு இயக்குநருக்கும் சவாலான விஷயம். இதை வெற்றிகரமாக செய்துள்ளார் வசந்த். அவரும் ஒரு நல்ல இலக்கிய வாசகர் என்பது காரணமாக இருக்கலாம்.

பொறாமை கொண்ட பெரியவராக டெல்லி கணேஷ் அசத்தியுள்ளார். இந்த எபிஸோட் சிறப்பாக அமைந்தததற்கு பிரதான காரணம் அவரே. அனுபவமுள்ள சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுத்தியுள்ளார். பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன் உடல்மொழியை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். கல்யாணக்கூடத்தில் அமர்ந்து தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்களை கூர்ந்து கவனிக்கும் அந்த ஒரு காட்சி போதும்… டெல்லி கணேஷின் அசாதாரண நடிப்பிற்கு!

கமலா காமேஷை நினைவுப்படுத்தும் தோற்றத்தில் அதிதி பாலன். சும்மா பேருக்கு அங்கே இங்கே உலவினாலும் கிளைமாக்ஸில் முகத்தில் அருவெறுப்பு பொங்க தன் தந்தையை முகச்சுளிப்புடன் பார்க்கும் காட்சியில் அபாரமாக ஸ்கோர் செய்து விடுகிறார். பெரியவரின் மனசாட்சியாக வரும் ரோகிணியின் நடிப்பும் சிறப்பு. கும்பகோணத்தின் பின்னணியில் ஒரு பிராமணச் சமூகத்தின் திருமண வீட்டை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்திருக்கும் படக்குழுவின் உழைப்பை பாராட்டலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பு.

பிராஜக்ட் அக்னி
பிராஜக்ட் அக்னி


3. பிராஜக்ட் அக்னி (மருட்கை) இயக்கம் : கார்த்திக் நரேன்

ஹாலிவுட் படங்களை அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு இதில் பெரிய ஆச்சரியம் இருக்க சாத்தியம் இல்லாவிட்டாலும் ஒரு கச்சிதமான சயின்ஸ் பிக்ஷன் கதையை தமிழில் வாசித்த… மன்னிக்கவும் ஆங்கிலத்தில் வாசித்த அனுபவத்தைத் தருகிறது இந்த எபிஸோட்.

நனவுலகம், கனவுலகம், டைம் டிராவல் என்று பல 'கிறிஸ்டோபர் நோலன்' சமாச்சாரங்களை உரையாடலில் வைத்து குழப்பியடித்து பிரமிப்பூட்ட முயன்றிருக்கிறார் கார்த்திக் நரேன். மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அந்நிய சக்திகளால் வடிவமைக்கப்பட்டது, மனித வாழ்க்கை என்பது ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம், ஆழ்மனதின் மூலம் காலத்தை தாண்டி பயணம் செய்ய முடியும் என்று பல புரியாத 'இலுமினாட்டி' விஷயங்களை கலந்தடித்திருக்கிறார்கள். பத்து வாட்ஸ்அப் செய்திகளை ஒரே சமயத்தில் வாசித்த சோர்வு இதனால் ஏற்படுகிறது.

விஷ்ணு என்கிற பெயர் கொண்ட திறமையான விஞ்ஞானி, கிருஷ்ணா என்கிற, இஸ்ரோவில் பணிபுரிகிற நண்பனை அவசரமாக அழைத்து தன் கண்டுபிடிப்பை விளக்குகிறார். 'கேக்கறவன் கேனையனா இருந்தா' என்கிற பழமொழிக்கேற்ப அந்த விளக்கம் இருந்தாலும் இறுதியில் நடக்கும் டிவிஸ்ட் மட்டும் சற்று சுவாரசியம். விஷ்ணு, கிருஷ்ணா என்கிற கதாபாத்திர பெயர்கள் புராண வாசனையை சுவாரசியமாக இணைக்கின்றன. அரவிந்த்சாமி, பிரசன்னா என்று இரு திறமையான நடிகர்களின் பங்களிப்பு காரணத்தினால் இந்தக் குறும்படம் ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது.

'கதை புரியாத பச்சை சட்டைக்காரன் ரத்தம் கக்கிச் சாவான்' என்பது போல் இயக்குநர் மிரட்டியிருந்தாலும் இந்தக் குறும்படம் தரும் ஆச்சரியத்திற்காக சகித்துக் கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4) எதிரி (கருணை ) - இயக்கம் : பிஜோய் நம்பியார்

விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி என்று சிறந்த நடிகர்கள் இருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அவர்களை இயக்குநர் இன்னமும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதன் கதையை எழுதியிருப்பவர் மணிரத்னம்.

எதிரி
எதிரி

குற்றம், தண்டனை, குற்றவுணர்ச்சி போன்ற உணர்வுகளால் 'தஸ்தாயேவ்ஸ்கி'யின் பாத்திரங்கள் போல் இதில் அலைகிறார்கள். வசனம் அதிகமில்லாமல் காட்சிகளின் வழியாகவே பாத்திரங்களின் உணர்வுகளை நமக்கு கடத்தியிருப்பது சிறப்பான விஷயம். அனுபவமுள்ள சீனியர் நடிகை என்பதை சில துல்லியமான முகபாவங்களின் மூலம் தந்து அசரடிக்கிறார் ரேவதி. ஒரே முகபாவத்தில் நின்று சலிப்பூட்டுகிறார் விஜய்சேதுபதி. பிரகாஷ்ராஜ் இன்னமும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்கிற பழைய பாடலைப் பாடி விஜய் சேதுபதியின் மன சாட்சியுடன் கபடி ஆடிவிட்டு மறைந்து விடுகிறார் பிரகாஷ்ராஜ்.

மிகச்சிறப்பாக வந்திருக்க வேண்டிய குறும்படத்தை 'ஃபிலிம் பெஸ்டிவல்' ரேஞ்சிற்கு சொல்கிறோம் என்று அநாவசியமாக நிறைய யோசித்து வீணடித்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

துணிந்த பின்
துணிந்த பின்

5) துணிந்த பின் (வீரம் ) - இயக்கம் : சர்ஜுன் கே.எம்.

ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை அழுத்தமாக நினைவுப்படுத்துகிறது 'துணிந்த பின்'. இந்தச் சிறுகதையைத்தான் சூரி- விஜய்சேதுபதி நடிக்க இயக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன். தன் கணவனை மீட்பதற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் அஞ்சலி வரும் பகுதிகள் 'ரோஜா' திரைப்படத்தை மெலிதாக நினைவுப்படுத்துகின்றன. இதன் திரைக்கதையை மணிரத்னம் எழுதியிருப்பதாக டைட்டில் கார்ட் சொல்கிறது.

தன்னால் குண்டடிப்பட்டு வீழும் ஒரு நக்சலைட்டை பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பு அனுபவமில்லாத ஒரு ராணுவ வீரருக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் பதைபதைப்பை நமக்கு மிகச்சரியாக கடத்தியிருக்கிறார்கள். அனுபவமின்மையும் ஆர்வமும் கொண்ட ஓர் இளம் ராணுவ வீரரின் பாத்திரத்தை அதர்வா சிறப்பாக கையாண்டுள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் அசத்தியிருக்கும் கிஷோரின் நடிப்பையும் பாராட்டலாம். "என்னா செஞ்சது உங்க அரசாங்கம். மக்களுக்கு உதவுச்சா?" என்று கிஷோர் கேட்கும் கேள்விகளில் அரசியல் வெப்பம் ஒளிந்துள்ளது. 'குருதிப்புனல்' திரைப்படத்தில் கமலுக்கும் நாசருக்கும் இடையில் நிகழும் அந்த அற்புதமான உரையாடல் நினைவுக்கு வருகிறது.

இளம் வீரன் அடையும் நம்பிக்கை உணர்வுடன் படத்தை முடித்திருப்பது சிறப்பு.

கிட்டார் கம்பி மேலே நின்று
கிட்டார் கம்பி மேலே நின்று

6. கிட்டார் கம்பி மேலே நின்று (சிருங்காரம் ) - இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன்

'Love at First Sight' என்பதில் இயக்குநர் கெளதமுக்கு அபாரமான நம்பிக்கையுண்டு. அவர் இயக்கிய பல திரைப்படங்களில் இதைக் கவனிக்கலாம். இதிலும் அதேதான். 'இங்க ஒண்ணும் வேலைக்கு ஆவறதில்லை. லண்டனுக்கு போலாம்' என்று தன் கனவை நோக்கி புறப்படுகிற ஓர் இசைக்கலைஞன், தன் ஸ்டூடியோவிற்குள் நுழையும் அந்தப் பாடகியை பார்த்த முதல் கணத்திலேயே சலனத்திற்கு ஆட்படுகிறான். அது மட்டுமல்லாமல், தன் தாய் சொல்கிற அதே வார்த்தைகளை அவளும் சொல்ல ஆச்சரியத்திற்கு உள்ளாகிறான். இருவரின் அலைவரிசையும் ஒரே மாதிரியாக இயங்குவதை பரவசத்துடன் உணர்கிறான். வேறென்ன..?! காதல் தீ பெட்ரோல் விலையின் வேகத்தில் உடனே அதிகரிக்கிறது.

‘'இவருக்கு வயசே ஆகாதா?" என்று சூர்யாவைப் பார்க்க அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது. பியர் வழியும் விழிகளால் போதையேற்றுகிறார் பிரயாகா ரோஸ் மார்ட்டின்.

பீத்தோவனையும் இளையராஜாவையும் வெவ்வேறு தருணங்களில் ஓர் ஆச்சரியமான கலவையில் இசையாக்கியிருக்கும் கார்த்திக்கின் பங்களிப்பு சுவாரசியம். ஆனால், இயக்குநராக கெளதம் மேனன் தன் பங்களிப்பை சரியாகச் செய்திருந்தால் இந்தக் கதை இன்னும் கவனம் பெற்றிருக்கும்.

ரெளத்ரம்
ரெளத்ரம்

7) ரெளத்ரம் (கோபம் ) - இயக்கம் : அரவிந்த் சாமி

மணிரத்னத்தின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான அரவிந்த் சாமி, இந்தக் குறும்படத்தின் மூலம் இயக்குநராக ப்ரமோட் ஆகியிருக்கிறார். சந்தோஷ் சிவனின் வண்ணமிகு ஃபிரேம்களைப் பார்க்கவே அத்தனை உற்சாகமாக இருக்கிறது.

‘’ 'பசங்க' படத்தில் ஜீவாவாக நடித்த சிறுவனா இது?’’ என்கிற ஆச்சரியத்தைத் தருகிறார் ஸ்ரீராம். அத்தனை சிறப்பான வளர்ச்சி. கீதா கைலாசம், அபிநயஸ்ரீ, அழகம்பெருமாள் போன்ற நடிகர்கள் தங்களின் சிறப்பாக பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். போலீஸ் என்பதால் விறைப்பாக நடித்திருக்கிறார் ரித்விகா.

கண்மூடித்தனமான ஆத்திரம் என்கிற உணர்ச்சி எவ்வாறு உறவுகளில் பிரிவையும் வலியையும் கொண்டு வந்து விடும் என்பது உணர்த்தப்பட்டிருந்தாலும் அம்மாவின் தியாகத்தை வளர்ந்த பின்னரும் பிள்ளைகளால் புரிந்து கொள்ள முடியவில்லையா என்கிற லாஜிக் இடிக்கிறது.

PEACE
PEACE

8) PEACE (அமைதி ) - இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்

ஈழத்தின் பின்னணியில் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்பராஜ், இந்த முறையும் அந்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். No Man's Land எனப்படும் பகுதியை கண்காணிப்பதற்காக இலங்கை ராணுவமும், போராளிகளின் குழுவும் ஒவ்வொரு மூலையில் பதுங்கியிருக்கின்றன.

எதிரிகளின் ஆபத்து நிறைந்திருக்கும் எதிர்ப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 'என் தம்பியை விட்டு விட்டு வந்திருக்கிறேன்' என்று ஒரு சிறுவன் சொல்லும் வார்த்தையை நம்பி அவனை மீட்பதற்காக புறப்படுகிறார் பாபி சிம்ஹா. பிறகு என்னவாயிற்று என்பதுதான் கதை.

ஒரு சிறுவனின் வார்த்தையை தீர விசாரிக்காமல் உயிரைப் பணயம் வைக்கும் அளவிற்கு செல்ல போராளிகள் அத்தனை அசடர்களா? இந்த லட்சணத்தில் தென்னை மரத்திலுள்ள இளநீரைப் பறிப்பதற்கு தோட்டாக்களை வீணடிக்கும் காமெடியும் நடக்கிறது. இந்த நகைச்சுவையின் உச்சமாக தன் தலையை நீட்டி எதிரிகளுக்கு நன்றி சொல்கிறாராம் பாபி சிம்ஹா.

என்னதான் கடுமையான போரில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் எதிரிகளின் மனதிலும் சற்று ஈரம் மிச்சமிருக்கும் என்கிற நேர்மறையான விஷயத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்த உணர்வோடு படத்தை அப்படியே முடித்திருக்கலாம். நேர்மறைத்தன்மையாவது மிஞ்சியிருக்கும். ஆனால் க்ளைமேக்ஸ் முடிந்ததும், டைட்டில் கார்டில் PEACE என்பதின் பக்கத்தில் கேள்விக்குறியைப் போட்டிருப்பதில் வெறும் அசட்டுத்தனம்தான் தெரிகிறது.

சம்மர் ஆஃப்' 92
சம்மர் ஆஃப்' 92

9) Summer of '92 ( சிரிப்பு ) - இயக்கம் : பிரியதர்ஷன்

‘இந்த எபிஸோடின் இயக்குநர் பிரியதர்ஷன்தானா?’ என்பதை ஒன்றுக்கு பலமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மலையாளத்தில் எத்தனை சிறப்பான, இயல்பான நகைச்சுவை திரைப்படங்களைத் தந்தவர்?! இந்த ஆந்தலாஜியின் மிக மிக மோசமான படைப்பு என்று இதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. நெடுமுடி வேணு போன்ற திறமையான நடிகர்கள் மிக அலட்சியமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தப்பிறகு சிரிப்பு வரவில்லை என்கிற வேதனை ஒருபுறம் இருக்க, உருவகேலி, சாதியம் சார்ந்த ஆட்சேபகரமான உள்ளடக்கம், மலக்குட்டை போன்ற வில்லங்கமான குறியீடுகள் போன்ற ஆபத்தான விஷயங்கள் திகைப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. உருவகேலி வசனங்களை இன்னமும் எத்தனை நாளைக்கு யோகிபாபுவின் மீது சுமத்துவார்கள் என்று தெரியவில்லை.

என்னதான் நடிகர் இன்னசென்ட்டின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் என்று சொன்னாலும் 'நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...' என்கிற வில்லங்கமான பழமொழியை பழமைவாத நெடியோடு படம் உறுதிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

நவரசம்தான். ஆனால் சூடும் சுவையும் குறைவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வீணடித்திருக்கிறது ‘நவரசா’.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism