Published:Updated:

நயன்தாரா - விக்னேஷ் சிவன்... அங்கப் போயிட்டு வந்துட்டா அடுத்து கல்யாணம்தான்... எங்கே, ஏன்?!

 நயன்தாரா
நயன்தாரா

கரியர்ல அடையப் போற உச்சத்தை அந்த ஜோதிடர் முன்கூட்டியே சரியா சொன்னதுல இருந்து அவரை முழுசாவே நம்ப ஆரம்பிச்சிட்டார் நயன்தாரா.

தொடரும் கொரோனா லாக்டௌன்கள் போலவே எப்போது முடியும் என்று ஒரு டெட்லைன் இல்லாமலேயே போய்க்கொண்டிருக்கிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம். கடந்த சில ஆண்டுகளாகவே லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இந்த கோலிவுட் கப்பிள்ஸின் திருமணம் 2020-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதிலும் ஒரு சின்ன சிக்கல் என்கிறார்கள். அப்படி என்னதான் பிரச்னை?!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஆண்டில் இருந்தே தொடர்ந்து ஆன்மிகப் பயணத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த படங்கள் வெளியாகின.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக நடிப்பதால்தான் கோயில் பயணம் என்றார்கள். ''முதல்முறையாக அம்மனாக நடிப்பதால், சைவத்துக்கு மாறி விரதமிருந்தும் நடித்தார். அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் பகவதி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வந்தார்'’ எனக் காரணம் சொன்னார்கள்.

தொடர்ந்து விக்கியும் நயனும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார்கள். அடுத்தடுத்து மேலும் சில ஆலயங்களுக்குச் சென்று வழிபட இருந்ததாகவும் அதற்குள் கொரோனா வந்துவிட்டதாகவும் நயனுக்கு மிகவும் நெருக்கமானவர் தகவல் சொல்ல, தொடர் ஆலய தரிசனங்களுக்கு என்ன காரணம் என விசாரித்தோம்.

‘’கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவரானாலும் இந்து வழக்கப்படி, ஜாதக, ஜோதிடத்தின் மீது ரொம்பவே நம்பிக்கை வெச்சிருக்கார் நயன். அந்த நம்பிக்கையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தன்னுடைய ஜாதகத்தை சினிமாத்துறையினர் அறிந்த ஒரு ஜோதிடரிடம் கொடுத்துப் பார்த்திருக்கிறார். கரியர்ல அடையப் போற உச்சத்தை அந்த ஜோதிடர் முன்கூட்டியே சரியா சொன்னதுலயிருந்தே அவரை முழுசா நம்ப ஆரம்பிச்சிருக்கிறார்.

அந்த ஜோதிடர்தான் திருமண தோஷம் இருக்கறதாகச் சொல்லி காளஹஸ்தி போய் வழிபடச் சொல்லியிருக்கார். உடனே விக்னேஷ் சிவனோடு அங்கே போய் கடவுளை வணங்கிவிட்டு வந்தார். தொடர்ந்து சில ஆலயங்களுக்குச் சென்று வரச் சொன்னதும் அந்த ஜோதிடர்தான்’’ என்கிறார்கள் நயனின் இந்த ஆன்மிக ஈடுபாட்டை நெருக்கமாக இருந்து கவனித்து வரும் சிலர்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

காளஹஸ்தி, பகவதி அம்மன், திருச்செந்தூர் வரிசையில் அடுத்து நயன் - விக்னேஷ் ஜோடியை கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று வரச் சொல்லியிருந்தாராம் அந்த ஜோதிடர்.

ராகு பகவான் திருத்தலமான இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் இருக்கிறது. 'ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்திக்கும் இந்தக் கோயிலுக்குப் போய் வந்ததும் உங்க திருமணத்தடை முற்றிலும் விலகிடும். அதனால அங்க போயிட்டு வந்ததும் திருமணத்தை வெச்சிக்கோங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர்.

ஜோதிடரின் அறிவுரைப்படி நயன் - விக்னேஷ் ஜோடி திருநாகேஸ்வரம் கிளம்ப ஆயத்தமான நேரத்தில்தான் கொரோனா வந்து லாக் டௌன் அறிவிக்கப்பட்டுவிட, பயணத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

தற்போது ஊரடங்கு படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து மற்றும் ஆலய வழிபாடு தொடர்பாக அரசின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார்களாம்.

இ-பாஸ் நடைமுறைகள் மற்றும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் முறைகளில் நிச்சயம் தளர்வுகள் கிடைக்கும் என நம்புகிற இந்த ஜோடி திருநாகேஸ்வரப் பயணத்துக்குக் கிட்டத்தட்ட திட்டமிட்டுவிட்டதாகவே தெரிகிறது.

நயன்தாரா
நயன்தாரா
instagram
``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9

''கூட்டமா கோயிலுக்கு வரக்கூடாது என உத்தரவு வந்தாக்கூட, அதுவே நமக்குச் சாதகமானதுதான்; யார் கண்ணுலயும் படாம ஃப்ரீயா போய் சாமி கும்பிட்டுட்டு வரலாம்'' எனப் பேசியிருக்கிறார்கள்.

எப்படியோ அடுத்த சில தினங்களில் இந்த ஜோடியின் அடுத்த ஆன்மிகப் பயணம் இருக்குமெனத் தெரிகிறது. மணக்கோலத்தில் வீற்றிருக்கும் ராகுபகவானைத் தரிசித்துவிட்டு வந்ததும் மணமேடை ஏறப்போகிறார்களா அல்லது திருநாகேஸ்வரர் ஆலயத்திலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளப் போகிறார்களா என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

வாழ்த்துகள் விக்கி - நயன்!

அடுத்த கட்டுரைக்கு