Published:Updated:

`விக்னேஷ் சிவன் பெயரில் அர்ச்சனை; 30 நிமிடப் பிரார்த்தனை!' - திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகை நயன்தாராவைக் காண பக்தர்கள் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் கதை இயக்கத்தில் உருவாகவுள்ளது `மூக்குத்தி அம்மன்' திரைப்படம். இந்த அம்மன் படத்திற்கான படக்குழுவினர் அனைவரும் சைவத்திற்கு மாறி உள்ளதாகவும், இதற்காக நடிகை நயன்தாரா விரதம் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் நடிகை நயன்தாரா பகவதி அம்மன் வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவுடன் செல்பி எடுத்த பக்தர்
நயன்தாராவுடன் செல்பி எடுத்த பக்தர்

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தின் பூஜையிலும், படப்பிடிப்பிலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்காவில் அவர் கொண்டாடிய `தேங்ஸ் கிவிங் டே’ கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. `மூக்குத்தி அம்மன் படத்திற்காக விரதம் இருக்கீங்கன்னு சொன்னாங்க’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, அவர்கள் இருவரும் ஒரே காரில் திருச்செந்தூர் வந்தனர். தேவர்குடில் வரை காரில் வந்த அவர்கள், அங்கிருந்து பேட்டரி காரில் கோயில் வாசலுக்கு வந்தனர்.

பேட்டரி காரில் வந்த  நயன்தாரா
பேட்டரி காரில் வந்த நயன்தாரா

கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்ததால், இருவரும் ஒரு மணி நேரம் வரை காரில் அமர்ந்திருந்தனர். பின்னர், அபிஷேகத்திற்குப் பிறகு, இருவரும் கோயிலுக்குள் சென்று மூலவர் சுப்பிரமணியசுவாமி மற்றும் சண்முகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.

``விக்னேஷ் சிவன், நயன்தாரா” என இருவரது பெயர், நட்சத்திரத்தை நயன்தாராவே அர்ச்சகரிடம் சொல்லி அர்ச்சணை செய்யச் சொன்னாராம். இரண்டு சந்நிதியிலும் கண்களை இறுக்கமூடி 30 நிமிடங்களுக்கும் மேல் பிராத்தனை செய்தாராம் நயன்தாரா. அப்போது அவர்களைப் பார்ப்பதற்கு பக்தர்கள் முண்டியடித்ததால் கோயிலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

கோயிலுக்கு வெளியிலும் நயன்தாராவைக் காண பக்தர்கள் திரண்டனர். ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு காரில் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். ரசிகர்களின் கூட்டத்தால் கோயிலில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு