Published:Updated:

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’:பார்வையற்ற 'ஹீரோ'யின், பாதிக்கப்படும் பெண்கள், பாலியல் சைக்கோ…இது அதுல்ல?

நயன்தாராவின் 'நெற்றிக்கண்'
நயன்தாராவின் 'நெற்றிக்கண்'

நயன்தாரா நடிப்பில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில், 'அவள்' புகழ் மிலிந்த் ராவ் இயக்கத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'நெற்றிக்கண்' எப்படி இருக்கிறது?! படத்தின் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் இங்கே!

கொரிய சினிமாக்களை கோலிவுட்டில் காப்பி அடிக்கிறார்கள் என்கிற புகார்கள் சியோல் வரை பறக்க, கொரியா கோடம்பாக்கத்திலேயே நிரந்தரமாக ஆள் போட்டுவிட்டது. அதனால் இனிமேல் ‘இன்ஸ்பையர்' ஆவது கடினம் என்பதால் கொரிய சினிமாக்களின் உரிமையை விலைக்கு வாங்கி தமிழில் ரீமேக்கும் நல்ல பழக்கம் தொடங்கியிருக்கிறது. அதில் ஒரு படம்தான் ‘நெற்றிக்கண்’. 2011-ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘பிளைண்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரிமேக். ‘’அப்ப அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்கும் இருக்கா?’’ என்கிற அப்பாவி ரசிகர்கள் ‘நெற்றிக்கண்’ படத்தை 10 நிமிடம் பார்த்தால் போதும் ‘இது அதுல்ல' என குரூப்புல டூப்பை கண்டுபிடித்துவிடலாம்.

ஓகே… விமர்சனத்துக்குள் போவோம்!

விபத்து ஒன்றில் தன் கண் பார்வையை இழக்கும் சிபிஐ அதிகாரி துர்கா, ஒரு மழை இரவில், ஒரு பாலியல் சைக்கோவிடம் சிக்குகிறார். பல பெண்களைக் கடத்தி சித்திரவதை செய்யும் அந்த சைக்கோ, துர்காவை என்ன செய்தான், சைக்கோவிடம் இருந்து துர்கா தப்பித்தாரா, மற்ற பெண்களையும் மீட்டாரா என்பதே கதை.

நயன்தாரா
நயன்தாரா

விழித்திறன் சவால் கொண்ட துர்காவாக நயன்தாராதான் படத்தின் பெரும்பலம். தடுமாறும் உடல்மொழி, பதற்றமான முகம், தயக்கம் என சமீபத்தில் பார்வையிழந்த ஒருவரின் அவஸ்தைகளைக் கச்சிதமாகப் பிரதிபலித்திருக்கிறார். ஆனால், பன்ச் வசனங்களின் பேசும்போது மட்டும் அந்தப் பழைய சிபிஐ நயன்தாரா எட்டிப் பார்க்கிறார்.

புதிதாக பணிக்குச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாத்திரத்தில் மணிகண்டன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஆனால், என்னதான் வேலைக்குப் புதிது என்றாலும் சொந்தமாக ஒரு விஷயத்தைக் கூட சிந்திக்காமல் நயன்தாராவிடம் மட்டுமே ஐடியா கேட்கும் ஐடியா இல்லாத மணியாக அவரை சித்தரித்திருப்பது ப்யூர் ‘ஹீரோயினிஸம்'.

'வடசென்னை' புகழ் சரண் சக்திக்கு முக்கிய கதாபாத்திரம். தொடக்கத்தில் விழித்திறன் சவால் கொண்டவர் என்று கூட பார்க்காமல் வார்த்தைகளால் அந்த கேரெக்டர் எல்லைமீறுவது உறுத்தல். அதன் பின்னர், அந்த கதாபாத்திரத்தின் கிராஃப் மாறியிருப்பது சற்றே ஆறுதல்.

நயன்தாரா
நயன்தாரா

வில்லனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் அஜ்மல். சைக்கோ பாத்திரத்தில் பதைபதைப்பை கிளப்பினாலும் பல இடங்களில் அவரின் ஓவர் ஆக்டிங் சலிப்பை ஏற்படுத்துகிறது. அவரின் கதாபாத்திரம் குறித்த புரிதல் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து அவர் பெண்களைச் சித்திரவதைச் செய்வதைக் காட்சிப்படுத்தியிருப்பது தேவையற்றது. பைபோலர், ஸ்கீஸோஃபெர்னியா என எல்லா மன நோய்களும் நம் மக்களுக்கு பழக்கமாகிவிட்டதால் ‘நெற்றிக்கண்’ணில் Biastophilia Disorder எனும் நோயை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வில்லன் அஜ்மல் ஏன் இந்த நோயால் பாதிக்கப்பட்டார் என அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக் கதை பரிதாபத்தை உண்டாக்கவில்லை.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை படத்துக்குப் பெரும்பலம். த்ரில்லர் படத்துக்கான வேலையை சரியாகச் செய்திருக்கிறது.

கொரியன் படத்தின் இரண்டாம் பாதியிலிருந்து சில மாற்றங்கள் செய்து கதையைச் சற்றே இழுத்திருக்கிறார்கள். அதுதான் படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைத்திருக்கிறது. கிளைமேக்ஸ் முடிந்தும் இரண்டாம் பாகம் போல படம் நீள்வது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ‘ஓடிடி-லதானே ரிலீஸ் ஆகுது’ என எடிட்டிங் என்கிற ஒன்றையே மறந்து எடுத்த எல்லா சீனையும் போட்டு நேரத்தை நிரப்பும் பழக்கத்தை இயக்குநர்கள் கைவிடவேண்டும்.

ஒரு திரில்லருக்கான எந்தவித சஸ்பென்ஸும் படத்தில் இல்லை என்பதோடு, அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்களே யூகிக்கும் அளவுக்கு கதை நகர்கிறது. வில்லனுக்கான தண்டனையை நயன்தாராதான் கொடுக்கவேண்டுமா?! படத்தில் லாஜிக் ஓட்டைகளும் எக்கச்சக்கம்!

கோலிவுட்டின் வழக்கமான ‘த்ரில்லர்' படங்களில் ஒன்றாக இதுவும் கடந்து போகிறது!

அடுத்த கட்டுரைக்கு