Published:Updated:

6 கோடி சம்பளம்... நடிப்பில் வித்தியாசம்! - மிரட்டும் `நெற்றிக்கண்' நயன்தாரா!

`அறம்', 'டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்க `நெற்றிக்கண்' படத்தில் நடிக்கிறார் நயன்.

Nayanthara
Nayanthara

ஹீரோயின்களின் சம்பளத்தில் உச்சம் தொட்டிருக்கிறார் நயன்தாரா. லிங்குசாமி தயாரித்து இயக்கிய `பையா' படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. அந்தப் படத்துக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி ரூபாய். கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என அனைத்து ஏரியா முன்னணி நடிகைகளும் நயன்தாராவை அண்ணாந்து பார்த்தார்கள். இப்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோடி ரூபாய் சம்பளத்துக்கு உயர்ந்திருக்கிறார் நயன். `தர்பார்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராவின் சம்பளம் மட்டும் 6 கோடி ரூபாய்.

இந்தநிலையில், ஹீரோக்களின் படங்களே வியாபார ரீதியாகக் கடும்போட்டியை சந்தித்துவரும் சூழலில் சோலோ ஹீரோயினாக பர்ஃபாமென்ஸைக் காட்டி கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.

Netrikann
Netrikann

`அறம்', `டோரா', `கோலமாவு கோகிலா', `ஐரா' `கொலையுதிர் காலம்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், `நெற்றிக்கண்' படத்தில் நடிக்கிறார் நயன். சித்தார்த் - ஆண்ட்ரியா நடித்த `அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ்தான் இந்தப் படத்தின் இயக்குநர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் `நெற்றிக்கண்'.

இப்போது இந்த டைட்டிலில் படம் தயாரிப்பதற்கு, விக்னேஷ் சிவனுக்கு கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி ஒப்புதல் கொடுத்திருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த `நானும் ரவுடிதான்' படத்தில் காதுகேட்காத பெண்ணாக நடித்த நயன், `நெற்றிக்கண்'ணில் பார்வைக் குறைபாடு கொண்டவராக நடிக்கிறார்.