Published:Updated:

தலித், சகாவு, காம்ரேட் : ‘நாயாட்டு’ மட்டுமல்ல… பொதுவாகவே மலையாள சினிமா பேசும் அரசியல்தான் என்ன?!

'நயாட்டு' - ஜோஜு ஜார்ஜ், நிமிஷா
News
'நயாட்டு' - ஜோஜு ஜார்ஜ், நிமிஷா

எண்ணற்ற மம்முட்டி, மோகன்லால் படங்களில் சாதியை சொல்லி வேண்டுமென்றே மட்டம் தட்டும் வசனங்கள் உண்டு. அதாவது, மலையாளத்தில் எல்லா படங்களுமே அற்புதமான படங்கள் அல்ல!

மலையாளப்படங்களை சிலாகிப்பதும், சீராட்டுவதும்தான் சமீபத்திய டிரெண்ட். கிட்டத்தட்ட எந்த மலையாளப் படம் வந்தாலும் தமிழக மக்கள் ஏன் கிளர்ந்தெழுந்து அந்தப் படங்களைப் பாராட்டித் தள்ளுகிறார்கள், ஏதோ இந்தியாவிலேயே மலையாளப் படங்கள் மட்டும்தான் உலகப் படங்கள் அளவுக்குத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றனவா என்றெல்லாம் கேள்விகள் எழும்பும். ஆனால் சமீபத்தில் வந்த ‘நாயாட்டு’ படத்தை முதன்முதலில் அனைவரும் சேர்ந்தே விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விமர்சனத்துக்குக் காரணம் அதில் தலித்களைப் பற்றிய சித்தரிப்பு தவறானது என்பதே.

முதலில் ‘நாயாட்டு’ பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, பின்னர் மலையாளப் படங்களில் என்னவெல்லாம் கதை மூலமாகக் காட்டப்படுகின்றன என்று பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘நாயாட்டு’ படத்தின்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் தலித்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு அரசையே மாற்றிவிடுவோம் என்று சவால் விடுவதும், அப்படிப்பட்ட தலித்கள் ரவுடிகளாகக் காட்டப்படுவதும் தவறு என்கிற விமர்சனங்கள் மிக முக்கியமானது.

தமிழ்ப் படங்களை மட்டும் கவனித்தால், இது தவறுதான். காரணம் தமிழ்ப்படங்கள்தான் பலகாலமாக தலித்களை ரவுடிகளாகவே சித்தரித்துக்கொண்டிருந்தன. குப்பம், ஹவுசிங் போர்ட் என்று எது வந்தாலும் அங்கிருப்பவர்கள் வில்லன்கள், அடியாட்கள் என்றே பல படங்கள் காட்டிக்கொண்டிருந்தன. அவை பா.இரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சினிமாவுக்குள் வந்தபிறகு மாறத்தொடங்கியிருக்கிறது. எல்லா வகுப்பினரையும் போலவே தலித்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு; அதில் அனைத்து உணர்வுகளும் நிரம்பியே இருக்கும் என்பதை ‘அட்டக்கத்தி’ படம் காட்டியது. அதன்பின் பல படங்கள் வந்து, இப்போது தலித்களைப் பற்றிய தமிழ் சினிமா விரோத மனப்பான்மை ஓரளவுக்கு மாறியிருக்கிறது.

நாயாட்டு
நாயாட்டு

எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த தமிழ்ப் படங்கள், தலித்களை வேண்டுமென்றே கீழ்த்தரமாக காட்சிப்படுத்தியிருக்கின்றன. தலித் வாழ்வியல் என்னவென்றே தெரியாமல் சினிமா எடுக்க வந்த இயக்குநர்களின் ஆதிக்க சாதி மனப்பான்மையே இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தவகையில் ‘நாயாட்டு’ படத்தைப்பற்றிய குற்றச்சாட்டுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மலையாளப் படங்கள் பற்றித் தெரியாமலேயே, ‘நாயாட்டு’ தவறு செய்துவிட்டது என்று சொல்பவர்களிடம் இருந்து வேறுபட வேண்டியிருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், தமிழ்ப்படங்கள் இதுவரை செய்யவே செய்யாத பல விஷயங்களை மலையாளப்படங்கள் அநாயாசமாக செய்துள்ளன. அவற்றையெல்லாம் தமிழில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. வெளிப்படையாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதன்மீது விமர்சனம் வைப்பது என்பதை மலையாளப் படங்களே மிக அதிக அளவில் செய்துகாட்டியுள்ளன. மலையாளத்தில் அரசியல்வாதிகளின் பெயர் வெளிப்படையாக வரும். வி.எஸ். அச்சுதானந்தனின் பெயரை, ஒரு சாதாரண மனிதன், குடித்துக்கொண்டிருக்கும்போது உச்சரித்து, உடனேயே VSOP மதுவையும் சேர்த்துச் சொல்லுகிறான். இது ‘சார்லி’ படத்தில் இடம்பெற்ற காட்சி. இதுபோல் பல படங்கள் அங்கே உண்டு. இப்படித் தமிழில் ஒரு அரசியல்வாதியின் பெயரை ஜாலியாக உச்சரித்துவிட முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலையாளத்தில் போகிற போக்கில் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகளின் மீது வெளிப்படையான விமர்சனங்கள் திரைப்படங்களில் வைக்கப்படும். எத்தனையோ விஷயங்களின் மீது மலையாளப்படங்கள் தயங்காமல் விமர்சனம் வைக்கும் தன்மை உடையன.

1989-ல் வெளியான ஷாஜி என் கருணின் முதல் படமான ‘பிறவி’யை எடுத்துக்கொள்வோம். எமர்ஜென்சி காலகட்டத்தில் இரக்கமே இல்லாமல் சிறைப்படுத்தப்பட்டு இறந்தவர்கள் அநேகம். அவர்களில் ஒருவனாக ஒரு இளைஞன் இருந்தால் என்ன ஆகும் என்பதே ‘பிறவி’. தேசிய விருது வாங்கிய படம். வெளிநாடுகள் எங்கும் சுற்றிய படம். அரசின் அடக்குமுறையை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்த படம். ஷாஜி என் கருண் இதன்பின் பல அற்புதமான படங்களை எடுத்தார்.

நாயாட்டு
நாயாட்டு

1994-ல் டி.வி.சந்திரன் இயக்கிய ‘பொந்தன் மாடா’வை எடுத்துக்கொண்டால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொந்தன் மாடாவுக்கும் அவனது பண்ணையார் ஆண்டை முதலாளி தம்புரானுக்கும் இடையே ஆன உறவு பேசப்படுகிறது. இதுவும் தேசிய விருது வாங்கிய படமே.

இந்தப்படத்தில், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே ஒரு அற்புதமான, கவித்துவமான நட்பு காட்டப்படுகிறது. ஆனால், என்னதான் முதலாளி எல்லாவற்றையும் ஒரு நண்பன் போல் பொந்தனிடம் சொன்னாலும், அதைக் கேட்க, ஒரு மரத்தின் மீது ஏறி, முதலாளியின் ஜன்னலின் அருகே போய்தான் முதலாளியைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. வீட்டினுள் இயல்பாகச் சென்று முதலாளியைச் சந்தித்துவிடமுடிவதில்லை. ஏன் என்றால் அவன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வித்தியாசத்தை ‘பொந்தன் மாடா’ நன்றாகவே காட்டியிருக்கிறது.

கூடவே இருவருக்கும் இடையே இருக்கும் நட்பிலுமே வேறுபாடுகள் உண்டு. முதலாளியிடம் ஒரு விசுவாசம் கலந்த நட்பு பொந்தனுக்கு உண்டு. ஆனால், முதலாளிக்கு அப்படி இல்லை. முதலாளி நினைக்கும்போது பொந்தன் வரவேண்டும். இதுபோன்ற நுணுக்கமான விமர்சனங்களும் படத்தில் உண்டு.

இந்த இடத்தில், 1993-ல் வெளியான இந்திப் படமான ‘ருடாலி’யை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒடுக்கும், ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நடக்கும் இன்னொரு உருக்கமான கதை இது.

இது ஒரு பக்கம் என்றால், முற்றிலும் இந்துத்துவம் பேசிய படங்களுமே மலையாளத்தில் உண்டு. ’தேசாடனம்’ (1996) மற்றும் ‘அக்னிசாட்சி’ (1998) படங்களைப் பார்த்தால் இது தெரியும். இவற்றையெல்லாம் விட எண்ணற்ற மம்முட்டி, மோகன்லால் படங்களில் சாதியை சொல்லி வேண்டுமென்றே மட்டம் தட்டும் வசனங்களும் உண்டு. அதாவது, மலையாளத்தில் எல்லா படங்களுமே அற்புதமான படங்கள் அல்ல. அங்குமே க்ரிஞ்ச் படங்கள் உண்டு. அங்குமே பல சராசரிப் படங்களும் உண்டு. நாம் பார்ப்பதெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு சில படங்களையே. இதையும் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாயாட்டு
நாயாட்டு

இதையெல்லாம் வைத்து யோசித்தால் மட்டுமே, ‘நாயாட்டு’ படத்தில் வேண்டுமென்றே தலித் விரோத காட்சிகளை அவர்கள் வைக்கவில்லை என்பது புரியும். தமிழ்ப்படங்கள் போல மலையாளப்படங்கள் மேலோட்டமாக எதையும் காட்டுவதில்லை என்றும் தெரியும்.

இங்கே குறிப்பிட்ட படங்கள் போல் ஏராளமான படங்கள் மலையாளத்தில் உண்டு. இவைகளுக்கு இணையாக, வெளிப்படையாக சாதி, மத, பாகுபாட்டு அரசியலை விமர்சிக்கும் படம் ஒன்றுகூட தமிழில் இல்லை. அப்படியே எடுக்கப்பட்டிருந்தாலும் பூடகமாக, மூடுமந்திரமாக, பொட்டில் அடித்ததுபோல் இல்லாமல் பல வசனங்கள் மறைக்கப்பட்டு, மாற்றப்பட்டே இங்கு படங்கள் வெளியாகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வெளியாகாமல், பெரும்பாலும் வணிகப்படங்கள் என்ற சட்டகத்துக்குள்ளேயே நாம் இயங்குவதால், நமக்கு இந்த வெளிப்படையான மலையாளப் படங்கள் போன்ற தமிழ்ப்படங்களைப் பார்த்துப் பழக்கமில்லை.

பாலு மகேந்திராவின் ‘வீடு’ படத்தை நாம்தானே புறக்கணித்தோம். அவரது ‘சந்தியா ராகம்’ என்னவானது? ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படம் தேசிய விருது வாங்கியது. ஆனால் அந்தப்படத்தை பாரதிராஜாவே கேலி செய்திருக்கிறார். ஜூன் 2017-ல் ஆனந்த விகடன் இதழில் வெளியான ஒரு பேட்டியில், '' '16 வயதினிலே'வுக்கு நீங்க விருது கொடுக்கல. 'அக்ரஹாரத்தில் கழுதை' என்ற கழுதைப்படத்துக்குக் கொடுத்தீங்க. ஏன்னா இன்ஃப்ளுயன்ஸ். இன்னைக்கு எல்லாரும் '16 வயதினிலே' பத்திதான் பேசுறாங்க. ‘அக்ரஹாரத்தில் கழுதை’யைப்பத்தி எவனாவது பேசுறானா’ என்று சொல்லியிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் ஜான் ஆப்ரஹாமின் ‘அக்ரஹாரத்தில் கழுதை’ உருவாக்கிய பாதிப்பு இன்றுவரை தீவிர சினிமாவில் தொடர்ந்தே வந்திருக்கிறது. இப்போதுகூட, ஜான் ஆப்ரஹாமின் புகைப்படத்தை வண்டியில் ஒட்டிக்கொண்டு, அவரைப்போலவே பணம் வசூலித்து, படங்கள் எடுக்கும் இயக்கம் கேரளத்தில் உண்டு. இயக்குநர் சணல் குமார் சசிதரன் பற்றியும், ‘காழ்ச்சா’ திரை இயக்கம் பற்றியும் தேடிப்பார்க்கலாம்.

அக்ரகாரத்தில் கழுதை
அக்ரகாரத்தில் கழுதை

‘பதினாறு வயதினிலே’ ஒரு சிறந்த படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதை இயக்கிய ஒரு இயக்குநரால் எப்படி இதுபோல் சுலபமாக இன்னொரு சிறந்த படத்தை நிராகரிக்க முடிகிறது? தமிழில் இப்படிப்பட்ட முயற்சிகளை பாரதிராஜா போன்ற சிறந்த இயக்குநர்களே புரிந்துகொள்ளாமல் பேசும் இடம் இது. எனவே நமக்கு மலையாளப் படங்களின் அரசியல் புரிய வாய்ப்புகள் குறைவு.

மலையாள சினிமாவில் தன்னைச்சுற்றி இருக்கும் அனைத்தையுமே எடுத்துக்கொண்டு விமர்சனம் வைப்பதற்கான வெளி அங்கே இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நமது படங்களில் அதை நாம் அறவே செய்வதில்லை; வணிகப்படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறோம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

கொலை செய்யாத போலீஸ்காரர்கள், அரசியல் அழுத்தத்தால் தலைமறைவு ஆகி ஓட, அவர்களை அரசு இயந்திரம் துரத்துகிறது. எந்த அதிகாரத்துக்காக ஜோஜு ஜார்ஜ் ஒரு கேஸை ஜோடித்தாரோ, அதே அதிகாரம், தனக்கு உதவி செய்தவன் என்ற இம்மி அளவு இரக்கம் கூட இல்லாமல் அவரைத் துரத்துகிறது. இதுதான் ‘நாயாட்டு’வின் கதை.

நாயாட்டு
நாயாட்டு

இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய ஷாஹி கபீர், ஒரு பேட்டியில், ’’ ‘நாயாட்டு’ என்பது அடையாளத்தை முன்நிறுத்தும் கதை அல்ல; மாறாக, அது மனிதர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையே பேசுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் அவர் ’’படத்தில் ஒருசில தவறுகள் உண்டு; குறிப்பாக, ஐம்பதாயிரம் தலித் வாக்காளர்கள் இருக்கும் தொகுதி என்பதை நாங்கள் தவிர்த்திருக்கவேண்டும்; அது ஒரு ஐந்தாயிரமாக இருந்திருக்கலாம்; ஆனால் மற்றபடி இதில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் அனைத்துமே அரசியல் சம்மந்தப்பட்டதே. அரசியல் அதிகாரம் எப்படி அதன் அங்கத்தினர்களை அலைக்கழிக்கிறது என்பதைப் பற்றிய கதையே இது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’’ என்கிறார்.


‘நாயாட்டு’ திரைப்படம் மட்டுமல்ல, பொதுவில் மலையாளப் படங்கள் பேசும் அரசியல் நுணுக்கமானது. கேரள மண்ணையும், மக்களையும், அதன் வாழ்வியல் முறையையும் முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே மலையாள சினிமாவை மனம்திறந்து பாராட்டவும், கடுமையாக விமர்சிக்கவும் முடியும்! இல்லையென்றால் மேலோட்டமான, யாருக்கும் பயனற்ற பார்வையாகவே அது இருக்கும்!