Published:Updated:

கொரோனாவால் ட்ரெண்டாகும் கே.எஸ்.ரவிகுமார் படங்கள்! என்னங்க நடக்குது?

K.S.Ravikumar Movies
K.S.Ravikumar Movies

கொரோனா வைரஸ் தொற்றால் மீண்டும் வைரலாகும் கே.எஸ்.ரவிகுமார் படங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பல தனியார் நிறுவனங்கள், ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க உத்தரவிட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள், தீம் பார்க்குகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

K.S.Ravikumar
K.S.Ravikumar

பொழுதுபோக்குகள் பாதியாகக் குறைந்துள்ள இந்த நிலையில், மீம்ஸ்கள்தான் பொழுதுபோக்காக அமைந்துள்ளன. குறிப்பாக, `வொர்க் ஃபரம் ஹோம்' மீம்ஸும் 'கொரோனா வைரஸ்' பற்றிய மீம்ஸும் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன. அதில் கே.எஸ்.ரவிகுமாரின் படங்கள் பற்றிய மீம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.

மின்சார கண்ணா - பாரசைட்
ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த பாரசைட் படம் கே.எஸ்.ரவிகுமாரின் மின்சார கண்ணா படத்தின் காப்பியா?!

இதுதான் கடந்த மாதத்தில் வெளியான சினிமா செய்திகளில், ஹாட் டாபிக். விஜய் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான `மின்சார கண்ணா' படத்தின் கதைதான் ஆஸ்கர் விருதுகளை வென்ற பாரசைட் படத்தின் கதை என நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டுத் தள்ளினர். இதன் விளைவாக `மின்சார கண்ணா' படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் சர்வதேச நீதிமன்றத்தில் கதை திருட்டு வழக்கு தொடுக்கப்போவதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

`கொரோனா பீர் வைரஸ்' - பீருக்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்? - ஒரு திடுக் அலசல் #GoogleTrends

கடந்த மாதம் மீம்ஸ்களில் இடம்பிடித்தது `மின்சார கண்ணா' என்றால் இந்த மாதம் `படையப்பா' மற்றும் `நாட்டாமை' படங்கள் மீம்களில் இடம்பெற்று வருகின்றன. இந்த 3 படங்களும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியானவை.

மின்சார கண்ணா
மின்சார கண்ணா

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இரண்டு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஒன்று `சோஷியல் டிஸ்டன்ஸிங்'. அதாவது, கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் பொது சமூகத்திலிருந்து விலகி வாழ்வது. இரண்டாவது Self Quarantine. அதாவது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது. இந்த இரண்டையும் கே.எஸ்.ரவிகுமார் படங்களின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களைக் கொண்டு மீம்ஸாக மாற்றி நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

யாரும் அந்தக் குடும்பத்தோட அன்னம் தண்ணி பொழங்கக் கூடாது. அவங்களை இந்த ஊரவிட்டுத் தள்ளி வைக்கிறேன். இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு.
- `நாட்டாமை' விஜயகுமார்

மேற்கண்ட வசனத்தை `நாட்டாமை' படத்தில் விஜயகுமார் பேசியிருப்பார். இந்த வசனம்தான் சோஷியல் டிஸ்டன்ஸிங்குக்கு முன்னுதாரணம் என்று அந்த மீம்ஸில் சொல்லப்பட்டுள்ளது.

நீலாம்பரி
`படையப்பா' படத்தில் 18 ஆண்டுகளாக ஒரே அறையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு நீலாம்பரியாக வாழ்ந்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்!

சுய தனிமைப்படுத்துதலுக்கு, கே.எஸ்.ரவிகுமாரின் படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம்தான் சிறந்த உதாரணம் என்றும் அந்த மீமில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஒற்றை மீம்தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா பரவாமல் தடுக்க மருத்துவர்களால் தற்போது அறிவுறுத்தப்படும் இரண்டு விஷயங்களை கே.எஸ்.ரவிகுமார் எப்போதோ சொல்லிவிட்டதால் அவர் ஒரு லெஜண்ட் என்று சொல்லி அந்த மீமை ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கே.எஸ்.ரவிகுமார், தற்போது எந்தப் படத்தையும் இயக்கவில்லை. ஆனால், எப்போதோ இயக்கிய `மின்சார கண்ணா', `படையப்பா',`நாட்டாமை' ஆகிய படங்களின் மூலமாகக் கடந்த இரண்டு மாதங்களாக லைம் லைட்டில் இருந்து வருகிறார் ரவிக்குமார்.
அடுத்த கட்டுரைக்கு