Published:Updated:

வாழ்க்கை என்பது… #MyVikatan

நீர்க்குமிழி

கசப்பும் உறைப்பும் புளிப்பும் துவர்ப்பும் என்று அத்தனை ருசிகளையும் ஒரே விருந்தில் இடம்பெறச் செய்வதைப்போல், இந்த உலகமும் அத்தனை விதமான மனிதர்களையும் பூமித் தோட்டத்தில் உலவ விட்டிருக்கிறது.

வாழ்க்கை என்பது… #MyVikatan

கசப்பும் உறைப்பும் புளிப்பும் துவர்ப்பும் என்று அத்தனை ருசிகளையும் ஒரே விருந்தில் இடம்பெறச் செய்வதைப்போல், இந்த உலகமும் அத்தனை விதமான மனிதர்களையும் பூமித் தோட்டத்தில் உலவ விட்டிருக்கிறது.

Published:Updated:
நீர்க்குமிழி
’நீர்க்குமிழி’ போன்றதுதான் இந்தப் பிறவி... எப்படி அது எப்போது உடையுமென்று எவருக்கும் தெரியாதோ, அதைப்போலவே ஒருவர் வாழ்வுக்கு எப்போது முடிவு வருமென்பதும் யாருக்கும் தெரியாது.

மனித வாழ்க்கை மகத்தானது என்று எத்தனை முறை எவரெவர் சொன்னாலும், எல்லோருக்கும் அது அப்படி அமைந்து விடுவதில்லை என்பதே நிதர்சனம். வாழ்க்கை என்பது, ’பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சிறுகாலம்’ என்று வேதாந்தம் பேசுபவர்களும் உண்டு; இந்த உலகந்தான் எவ்வளவு அருமையும் அற்புதங்களும் நிறைந்தது. மலைகள், கடல்கள், காடுகள், ஆறுகள் என்று எவ்வளவு அழகு. நீல வானமும், நிலவும், சூரியனும் அழகுக்கு அழகு சேர்க்கும் ஆயுதங்கள் அல்லவா! அதனை அங்குலம் அங்குலமாக ரசித்துச் சுவைத்து வாழ வேண்டாமா?’என்று கேள்வி கேட்பவர்களும் உண்டு. இங்கு மனிதர்கள் என்று எல்லோரையும் ஒரே தட்டில் வைத்தாலும், அந்தக் காலத் தஞ்சாவூர் திருமண விருந்தில் இடம் பெறும் 5, 7, 11 என்று ஆரம்பித்து 21 ஐட்டங்கள் வரை இருந்ததைப்போல, இனிப்பும் கசப்பும் உறைப்பும் புளிப்பும் துவர்ப்பும் என்று அத்தனை ருசிகளையும் ஒரே விருந்தில் இடம்பெறச் செய்வதைப்போல், இந்த உலகமும் அத்தனை விதமான மனிதர்களையும் பூமித் தோட்டத்தில் உலவ விட்டிருக்கிறது.

அதோடு, அண்டத்தில் ஆயிரக்கணக்கான விலங்கினங்களும் அன்றாடம் உலவத்தான் செய்கின்றன. அந்த அனைத்து மிருகங்களின் குணத்தைக் கொண்டே மனிதர்களும் உலாவருகிறார்கள். இங்கு மனிதர்களுக்கு எதிரி, மனிதர்கள்தாம். சாதியை உருவாக்கியதும், சமயங்களைப் பரப்பியதும், நாடுகளைப் பிரித்ததும் நாம்தானே! இவ்வுலகை வாழ வைப்பவர்களும் மனிதர்கள்தான்! நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பதுதானே தெய்வப் புலவரின் வாக்கு. இரவும், பகலும் இணைந்ததே நாள் என்பதுபோல், நல்லவர், அல்லாதார் ஆகியோரைக் கொண்டதே வீடும், நாடும்! பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல், அல்லவர் கழிதலும், நல்லவர் புகுதலும் நாட்டில் நடந்தால், வளம், மடை திறந்த வெள்ளமாக வழிந்தோடி மிகும். ஆனாலும் பெரு வளம், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே அமையும், ரஷ்யாவின் பெரு வளம் உக்ரைனுக்கு ஆபத்தாக அமைந்துள்ளதைப்போல. அப்பாவி மக்களை அலைக்கழிக்கும் அரசியல் தலைவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. காக்கை, குருவி எங்கள் ஜாதி என்ற வம்சத்தில் வந்த நம்மால், இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

’நீர்க்குமிழி’ போன்றதுதான் இந்தப் பிறவி... எப்படி அது எப்போது உடையுமென்று எவருக்கும் தெரியாதோ, அதைப்போலவே ஒருவர் வாழ்வுக்கு எப்போது முடிவு வருமென்பதும் யாருக்கும் தெரியாது என்பதே உலக நியதி. நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதுதானே நிலையாமையின் அடையாளம்.

அதற்குள்தான் எத்தனையெத்தனை ஆட்டங்கள்; எவ்வளவு பழிவாங்கல்கள்; நாடு பிடிக்கும் ஆசைகள்; நயவஞ்சக எண்ணங்கள்; நம்பிக்கைத் துரோகங்கள். ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் ஒரு நாள் முடிவு வந்துதானே ஆகும்?

நீர்க்குமிழி
நீர்க்குமிழி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேன்சர் என்றழைக்கப்படும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சேது, நம்ம நாகேஷ்தாங்க, தன் வாழ் நாள் எண்ணப்படுகின்றது என்பதை அறிந்தும், காதலர்களைச் சேர்த்து வைக்க முயல்வது, நம் தமிழ் மண்ணின் பண்பாடு. ஒரு நர்சிங் ஹோமின் ஏழாம் நம்பர் வார்டையும், அங்கு சிகிச்சை பெறும் மூன்று உள் நோயாளிகளையும், அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் இரண்டு டாக்டர்களையும், ஒரு நர்சையும், இவர்களுக்கு அறிமுகமான சிலரையும் மட்டுமே கதாபாத்திரங்களாக்கி, நம்மை சுமார் இரண்டே கால் மணி நேரத்திற்கு உட்கார வைத்து அழகு பார்க்கும் நுண்கலை, பாலச் சந்தர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரம்.

பள்ளி ஆசிரியராய் வாழ்வைத் தொடங்கி, நாடக இயக்குனராக உருமாறி, வசனகர்த்தாவாக வளர்ந்து, ’நீர்க்குமிழி’என்ற படத்தின் மூலம் இயக்குனரான கே. பி. எவரிடமும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இல்லை என்பது, தனிப்பெரும் சிறப்பு. தன் முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்டை வீழ்த்திய பௌலராகவும், அது போல, தன் முதல் ஆட்டத்திலேயே செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேனாகவும் விளங்கியதால்தான், சிகரமென அவர் உயர்ந்தார். அனுபவம் மிகுந்த டாக்டர், நோயாளியின் அசைவுகளைக் கொண்டே நோயின் தன்மையை அறிவது போல, ரசிகர்களின் பல்ஸை, மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவரால் வெற்றிகளைக் குவிக்க முடிந்தது.

நீர்க்குமிழி கதை இதுதான். புற்று நோயாளியான நாகேஷ், புகை பிடித்தபடி செய்யும் சேஷ்டைகளால் அனைவரையும் கவர்ந்தாலும், அவரின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டே வருவதை, நம் மனங்கள் அறிந்து வாடும். மிடுக்கான மேஜர் சுந்தர ராஜன் தலைமை மருத்துவராக மிளிர, இளைய மருத்துவரான தன் மகள் சௌகாரை, அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கவைத்து, ஃபாரின் ரிடர்ன் டாக்டராக உயர்த்த முயல, அவரோ, தங்களிடம் சிகிச்சை பெறும் கால் பந்தாட்ட வீரரான கோபால கிருஷ்ணனைக் காதலிப்பார். நர்ஸ் ஜெயந்தியுடன் டூயட் பாடும் நாகேஷ், சௌகார்-கோபால கிருஷ்ணன் காதலுக்கும் உதவுவார். இறுதியில், எல்லாமே நீர்க் குமிழியாகிப் போவதுதான் கதை.

K.BALACHANDER
K.BALACHANDER

’நான் இப்படித்தான்’ என்று சிலர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் பாதையில் முன்னேறிப் போய்க்கொண்டே இருப்பார்கள். எதனோடும், எதற்காகவும், எப்பொழுதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டார்கள். கே. பி. , யும் அந்த ரகந்தான். ஆனால், ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ரகம். நிஜ வாழ்வில் நடக்கும் எதார்த்தங்களையே தன் படங்களில் அவர் பிரதிபலித்தார். எனவேதான் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு விதத்தில் அவர் ஒரு புரட்சியாளர். இன்றைக்குச் சாதாரணமானவர்களும், சாமானியர்களுங்கூட திரையில் பிரகாசிக்கிறார்கள் என்றால் அதற்கு அவரே மூல காரணம். புதியவர்களை அறிமுகப்படுத்துவதில் அவர் தயக்கம் காட்டியதில்லை. தனது வசனங்கள், காட்சி அமைப்புகள், கதையைச் சொல்லிச் செல்லும் விதம் ஆகியவற்றில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே, புதியவர்களை அறிமுகப்படுத்தத் தூண்டுகோலாக அமைந்திருக்க வேண்டும். அவருடைய கதா நாயகர்கள் யாரும் 50 பேரை அடித்துப் போடும் வல்லமை படைத்தவர்களல்லர். மது, மாதுவை நினைக்காத மகத்தானவர்களில்லை. காந்திய வழியில், கண்ணியம் மிகக் கொண்டு கடமையாற்றும் கட்டுப்பாடு உள்ளவர்கள் அல்லர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பழத்தை உறிக்கையில் உள்ளிருக்கும் வெற்றிடத்தைக்காட்டி ‘இதுபோல்தான் என் உடலும்’ என்று நாகேஷ் விளையாட்டாகக் கூறினாலும், நம்முள்ளே ஒரு சோகம் மின்னலடிக்கும்.

அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். ஆசாபாசங்களுக்கு அடிமையானவர்கள். எனவேதான் நம்மால் அந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் போக முடிகிறது. ஐம்பது, அறுபது ஆண்டுகள் கடந்த பின்னாலும் அவர்களைப் பற்றிப் பேசவும், எழுதவும் தூண்டப்படுகிறோம். நாகேஷ் என்னும் மாபெரும் கலைஞனின் விஸ்தாரத்தை அறிந்து, அவருக்காகவே கே. பி. , யால் உருவாக்கப்பட்ட கதைதான் இது என்ற கூற்றும் உண்டு. அந்த ஒல்லி உடம்பில்தான் எத்தனை லாவண்யங்கள். முகத்தில் அஷ்ட கோணலைக் காட்டுவதிலாகட்டும்;அங்கங்களை வளைத்து ஆடும் நடனத்திலாகட்டும்;அழும் போதும், சிரிக்கையிலும் அடுத்தவர் மனதில் ஒட்டிக்கொள்ளும் லாவகத்திலாகட்டும், எல்லாவற்றிலும் அவருக்கு இணை அவரேதான். மேஜருக்கு இயற்கை அளித்த வரம், கம்பீர உடலும், கணீரென்ற குரலும். கோபாலகிருஷ்ணனும் சௌகாரும் பல களம் கண்ட வெற்றிப் போராளிகள். ’அச்சா’ (இரு கோடுகள்) ஜெயந்தி சாதாரணமானவரல்லவே. பழத்தை உறிக்கையில் உள்ளிருக்கும் வெற்றிடத்தைக்காட்டி ‘இதுபோல்தான் என் உடலும்’ என்று நாகேஷ் விளையாட்டாகக் கூறினாலும், நம்முள்ளே ஒரு சோகம் மின்னலடிக்கும். தன்னைத்தேடி வரும் கடன்கார சேட்டிடம் முடிவு நெருங்கி விட்டதையறிந்து பணத்தைக் கொடுத்து விட்டு நாகேஷ் சொல்வார்: ’எங்கிட்ட அப்பவும் பணம் இருந்திச்சு. பார்வையாளர்கள் நேரத்ல, அனாதையான என்னை யாரும் பார்க்க வர மாட்டாங்க. பணத்துக்காகவாவது நீ வந்ததில எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்’என்று. அப்போது நம் கண்கள் கலங்குவதை நம்மால் தடுக்க முடியாது.

பாடல்கள் இல்லாத படங்களும் வந்ததுண்டு. பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. இந்தப் படத்தில் முக்கண்களைப்போல் மூன்றே பாடல்கள். காதலுக்குக்’கன்னி நதியோரம்’என்ற டூயட் பாடல்-நாகேஷின் சாம்ராஜ்யத்தில். ’நீரில் நீந்திடும்’ பாடலுக்கு, தண்ணீர் மேலே சௌகார் ஜானகி. மூன்றாவது பாடலான ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, என்றைக்கும் நிலைத்து நிற்கும் பாட்டு. மனித சமுதாயம் உள்ளவரை இதற்கு அழிவில்லை. பல்லாயிரம் பாடல்களை எழுதுவோர்க்கும், அதே போல ஆயிரக்கணக்கில் பாடுவோருக்கும் கிடைக்கின்ற புகழைக் காட்டிலும் பெரும் புகழை, ஒரு சில பாடல்களை எழுதுவோரும், அவ்வாறே சில பாடல்களைப் பாடுவோரும் எய்தி விடுவதுண்டு. உவமைக் கவிஞர் சுரதா பல பாடல்களை இயற்றியவர் என்றாலும், திரைப்படங்களில் அவர் பாடல்கள் அதிகமாக இடம் பெற்றதில்லை. ஆனாலும், இந்த ஒரே பாடலில் எல்லாப் புகழையும் தனதாக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

நீர்க்குமிழி
நீர்க்குமிழி

‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா…ஆறடி நிலமே சொந்தமடா…என்பது எவ்வளவு உண்மையானது. ஒவ்வொரு வரியுமே உயிருள்ளது என்றாலும், ’கண் மூடினால் காலில்லா கட்டிலடா’ என்ற உவமையை, எனக்குத் தெரிந்து வேறு யாரும் உபயோகப் படுத்தியதாகத் தெரியவில்லை. சவத்தை, அதாவது பிணத்தை வைத்துத் தூக்கும் படுக்கையைப் ‘பாடை’என்பார்கள். அந்தப் பாடையைக் காலில்லா கட்டில் என்கிறார் கவிஞர் சுரதா. எவ்வளவு அருமையான ஒப்பீடு-‘நதியில் விளையாடிக் கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே’என்று கண்ணதாசன் தென்றலை வரையறுப்பது போல. இந்தப் பாடலை சீர்காழியைக் கொண்டுதான் பாட வைக்க வேண்டுமென்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தாராம். ஏனெனில், சில வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பாடுவதில் அவர் வல்லவர் என்பதால்.

கோவிந்த ராஜன் எவ்வளவோ பாடல்கள் பாடியிருந்தாலும், ’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா‘ என்ற ‘கர்ணன்’ படப்பாடலும், இந்த ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலும் இரு முத்துக்கள்தானே. இந்தப்பாடல் சோகப்பாடலா, தத்துவப் பாடலா, இரண்டும் சேர்ந்ததா என்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருந்தாலும், காலத்தால் அழிக்க முடியாத கற்பூரப்பாடல் இது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏ. கே. வேலனின் திருமலை பிக்சர்சாரின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். நடன நடிகர் பிரபு தேவாவின் தந்தை மாஸ்டர் சுந்தரம்தான் நடன இயக்குனர்.

புற்று நோயால் தாக்கப்பட்டு, வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த சேதுவே காதலர்களுக்கு உதவ முன்வந்தபோது, நம்மால் நாலு நல்லதைச் சிலருக்காவது செய்ய முடியாதா என்ன?
நீர்க்குமிழி
நீர்க்குமிழி

திரைப்பட விமர்சனம் என்பது ‘அறுவைசிகிச்சை’ என்பது போலல்ல. அது ‘போஸ்ட் மார்ட்டம்’ போன்றது. உயிர் போன உடலைப் போஸ்ட் மார்ட்டம் செய்வதால், போன உயிர் மீண்டும் வராது. அது போலவே வெளிவந்த அந்தப் படத்தில் பெரு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால், அதனைத் தொடர்ந்து வருகின்ற படங்களில் நிச்சயமாக மாற்றங்களை ஏற்படுத்த அது வழி கோலும். அந்த அடிப்படையில் மாற்றங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்த்தால், பெரிய மாற்றங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. குடும்பப் படங்களும், பழி வாங்காமல் விட்டுக் கொடுக்கும் கதைகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிறதே தவிர, பெருவாரியான படங்கள் பழி வாங்குதலிலேயே முடிவதாகத்தான் வருகின்றன.

சினிமா, எளிதாக மக்களைச் சென்றடையும் ஓர் அற்புத ஊடகம். அதில் பழி வாங்குதலைக் காட்டுவது பெரும் அபத்தமல்லவா? அபத்தங்கள் அரங்கேறுவதைத் தடுக்க முன்வருவார்களா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்! ஆடி அடங்கி, சப்த நாடிகளும் அடங்கிப் போகும் முன்னால், நாலு பேருக்கு நல்லது செய்வதென்று முடிவெடுப்போம். அதை உறுதியுடன் செயல்படுத்துவோம். புற்று நோயால் தாக்கப்பட்டு, வாழ் நாளை எண்ணிக் கொண்டிருந்த சேதுவே காதலர்களுக்கு உதவ முன்வந்தபோது, நம்மால் நாலு நல்லதைச் சிலருக்காவது செய்ய முடியாதா என்ன?

-ரெ. ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism