சினிமா
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

அஜித்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித்

பெண்ணுடல் பொருளாக்கப்படுதல், பெண்களுக்கான விதிமுறைகள், ஒழுக்கத்திற்கான வரைமுறைகள் எனத் தமிழ் சினிமாவின் வழி ஆணாதிக்கச் சிந்தனைகள் சிந்திக் கொண்டிருக்கும் கறைகளை, அக்கறையோடு அடித்துத் துவைக்கிறது `நேர்கொண்ட பார்வை.’

நடனக்குழுவில் பணிபுரியும் மீரா, ஐடி நிறுவன ஊழியர் ஃபமீதா மற்றும் அழகு நிலையத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா மூவரும் தோழிகள். இவர்களின் ஆண் நண்பர்களில் ஒருவன் மீராமீது `கொலை முயற்சி’, `ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது’ மற்றும் `விபசாரத்திற்கு அழைத்தது’ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கிறார். ``அந்த ஆண் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தான். அதனால், தற்காப்புக்காகவே தாக்கினேன்” என, குற்றச்சாட்டை மறுக்கிறார் மீரா. `நியாயம் யார் பக்கம்’ என நிதானமாய் நகர்கிறது திரைக்கதை.

 சினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

நீதிக்கான பயணத்தில், நம் சமூகத்தில் பெண்களுக்கெதிராய் நடக்கும் அத்தனை அநியாயங்களின் அடிப்படையையும் தோலுரித்துக் காட்டுகிறது ‘நேர்கொண்ட பார்வை.’ ஒரு பெண் அணியும் உடைகளைக் கொண்டு, அவளின் வேலையைக் கொண்டு, அவள் வீடு திரும்பும் நேரத்தைக் கொண்டு, அவளின் ஊரைக் கொண்டு, அவளின் கடந்தகாலத்தைக் கொண்டு, உருவத்தைக் கொண்டு `ஒழுக்கம்’ எனும் அளவுகோலில் அவளை வகைப்படுத்துவது, அதைக்கொண்டே அவள் கையாளப்படுவது போன்ற அநீதியையும், பெண்களை சகமனுஷியாக மதிக்கத்தெரியாமல், வெறும் போகப்பொருளாய்க் கையாளும் ஆணாதிக்க மனோபாவத்தையும் காலரைப் பிடித்துக் கேள்வி கேட்கிறது. 19 வயதிலேயே கன்னித்தன்மையை இழந்திருந்தாலும், ஒருவருக்கு மேற்பட்டோருடன் உடலுறவு வைத்திருந்தாலும், பாலியல் தொழிலாளராக இருந்தாலும், மனைவியே ஆனாலும் அவருக்குச் சம்மதமில்லாமல் அவரைப் பாலியல் உறவுக்கு அணுகுவது குற்றம்தான் என்கிறது படம்.

`நேர்கொண்ட பார்வை’யில் வழக்கறிஞர் பரத் சுப்ரமணியமாக நிமிர்ந்த நன்னடை போட்டிருக்கிறார் அஜித். இதுபோன்ற கதையம்சம் உள்ள படத்தில், பெரும் ரசிகர் பட்டாளத்தைக்கொண்ட (குறிப்பாக இளம் ஆண் ரசிகர் பட்டாளம்) ஒரு நடிகர் நடித்திருப்பது வரவேற்புக்குரியது. தன் சமூகப்பொறுப்பை உணர்ந்து தனது `மாஸ் நாயகன்’ பிம்பத்துக்கு சமரசம் செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. கண்களை நிலைக்குத்திப் படபடப்பை உண்டுபண்ணுவதாகட்டும், ஆர்ப்பாட்டமில்லாமல் வாதாடி உண்மையைப் போட்டு வாங்கும் சாமர்த்தியமாகட்டும், கண் சிமிட்டாமலே நடித்து நம்மையும் கண் சிமிட்டாமல் பார்க்கவைத்திருக்கிறார்.

மீராவாக ஷ்ரதா ஸ்ரீநாத். பலவித உணர்ச்சிகளையும்கொண்ட கதாபாத்திரம். ஃபமிதாவாக அபிராமி வெங்கடாச்சலம். படம் முழுக்க அவரின் கண்கள், கலங்கிய நிலையில்தான் இருக்கின்றன. ஆண்ட்ரியா எனும் வடகிழக்குப் பெண் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா டரியாங். மூவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பாராட்டுகள்!

எதிர்த்தரப்பு வக்கீலாக ரங்கராஜ் பாண்டே. முதல்படம் என்கிற பதற்றமே இல்லை. அஜித்துடன் வாதாடும் காட்சிகள், சபாஷ் சரியான போட்டி! இவர்கள் தவிர்த்து, ஆண் நண்பராக நடித்திருக்கும் அர்ஜுன் சிதம்பரம் கவனிக்க வைக்கிறார். அஸ்வின் ராவ், ஆதிக் ரவிச்சந்திரன், சுஜித் ஷங்கர் நால்வரும் இக்கால ஆணாதிக்க இளைஞர்களின் அசல் வார்ப்பு. நீதிபதி ராமச்சந்திரன், ஹவுஸ் ஓனர் கோதண்டராமன் (எ) மேக், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் எனச் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்தவர்கள்கூடச் சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். சில நிமிடமே வந்தாலும், கண்களை விட்டு அகல மறுக்கிறார் வித்யாபாலன். நல்வரவு!

 சினிமா விமர்சனம்: நேர்கொண்ட பார்வை

`பிங்க்’ திரைப்படத்தை ரீமேக் செய்ததற்கும், அஜித் போன்ற ஹீரோவுக்கான மாஸையும், படம் சொல்ல வரும் கருத்தையும் மிகச்சரியாக பேலன்ஸ் செய்ததற்கும் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு டபுள் சைஸ் பூங்கொத்து!

இந்தி வசனங்களை உள்ளடக்கம் மாறாமல் கூர்மையோடு தமிழ்ப்படுத்தியிருக்கும் விஷ்ணுவர்தன் பாராட்டுக்குரியவர். இரண்டாம் பாதி பெரும்பாலும் கோர்ட்டுக்குள் மட்டும்தான். கொஞ்சம்கூட அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை நீரவ்ஷாவின் கேமரா. உணர்வுகளை இசை அதிர்வுகளாகக் கடத்தியிருக்கிறார் யுவன்.

இன்டர்வெல் சண்டைக்காட்சியும் அதன் பின்னான சில மாஸ் மொமன்ட்களும் மொத்தப் படத்தையும் மீண்டும் `மாஸ் ஹீரோ படம்’ எனும் வட்டத்துக்குள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இந்த மசாலா அம்சத்தைக் குறைத்திருக்கலாம்.

“நோ மீன்ஸ் நோ” - இந்த ஒற்றை வசனத்திற்காகவே, `நேர்கொண்ட பார்வை’யை உச்சிமுகரலாம். இப்படம் இச்சமூகத்திற்கு அவசியம். இதுபோன்ற படங்கள் இன்னும் ‘நிறைய நிறைய நிறைய நிறைய’ வரவேண்டும்!