Published:Updated:

கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன்... ஆணவக்கொலை ஆந்தாலஜி ரெடியா? #Exclusive

சுதா கோங்ரா, விக்னேஷ், கெளதம் மேனன், வெற்றிமாறன்
சுதா கோங்ரா, விக்னேஷ், கெளதம் மேனன், வெற்றிமாறன்

புதிய கதைக்களத்தில் படம் பண்ணலாம் எனப் பேசப்பட்டு ஆணவக்கொலை பற்றிய படம் எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்குமே தனித்தனி பட்ஜெட், தனித்தனி டெக்னிக்கல் குழு என ஒதுக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்துகொண்டே போகும் லாக்டெளன் காலத்தால் ஓடிடி தளங்கள் அசுரவளர்ச்சியைக் கண்டுவருகின்றன. புதிய படங்கள், வெப்சீரிஸ்கள் என மக்களும் இப்போது ஓடிடி தளங்களுக்குப் பழகிவிட்டார்கள். அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5 என ஓடிடி தளங்கள் தமிழ்ப் படங்களை வாங்கி நேரடியாக ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

அமேசான் நிறுவனம் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை நேரடியாக ரிலீஸ் செய்து கணக்கைத் தொடங்கிவைக்க, இப்போது ஜீ5 அடுத்தடுத்த படங்களுடன் களம் இறங்கியிருக்கிறது. இந்த நேரடி ரிலீஸ் படங்களுக்கு இடையே அமைதிகாத்துவரும் நெட்ஃபிளிக்ஸ் தமிழ் ஓடிடி வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய புராஜெக்ட்டுடன் தயாராக இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸின் இந்தப்படம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசி தகவல்கள் சேகரித்திருக்கிறோம். அது அப்படியே இங்கே!

Gautham Menon
Gautham Menon

கடந்த ஆண்டு மத்தியில் கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன் என இந்த நான்கு இயக்குநர்களிடமும் பேசி ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கிக்கொடுக்கக் கேட்டிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். அவர்கள் வேறு ஒரு ஜானரில் கேட்க, நான்கு இயக்குநர்களுக்கும் அந்த ஜானர் செட்டாகாமல் போக நான்கு இயக்குநர்களும் எப்படிப்பட்ட படம் பண்ணலாம் என உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள்.

கெளதம் மேனன் போலீஸ் ஸ்டோரிக்களை படமாக்குபவர். வெற்றிமாறன் நுட்பமான மனித உணர்வுகளைப் படமாக்குபவர். சுதா கோங்ரா பயோகிராஃபிகளில் ஆர்வம் கொண்டவர். விக்னேஷ் சிவன் ஜாலிகேலி படங்கள் எடுப்பவர். இவர்கள் நால்வருக்குள்ளும் சிங்க் ஆகும் விஷயம் எதுவும் இல்லை எனும்போது முற்றிலும் புதிய கதைக்களத்தில் படம் பண்ணலாம் எனப் பேசப்பட்டு ஆணவக்கொலை பற்றியப் படம் எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்குமே தனித்தனி பட்ஜெட், தனித்தனி டெக்னிக்கல் குழு, தனித்தனி இசையமைப்பாளர்கள் என வெவ்வேறு டீம்கள் ஒதுக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளன.

Vetri Maaran
Vetri Maaran

ஒவ்வொருவரின் படமும் 30 நிமிடங்கள்தான். ஆந்தலாஜி படம் என்றாலும் சின்னதாக நான்கு கதைகளுக்குள்ளும் ஒரு கனெக்ட் இருக்கும் என்கிறார்கள். நான்கு படங்களிலும் பிரபல நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். கெளதம் மேனன் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இதில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'மங்காத்தா' படங்களில் நடித்த அஷ்வின் காக்கமன்னு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் கதையில் பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் கதையில் அஞ்சலியும் இந்தி நடிகை கல்கி கோச்சலினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சுதா கோங்ராவின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய ரோலில் தயாரிப்பாளர் தேனப்பன் நடித்திருக்கிறார்.

நான்கு படத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. விக்னேஷ் சிவன் மட்டும் தன்னுடைய புராஜெக்ட்டில் சில டெக்னிக்கல் வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டும். அதுமுடிந்துவிட்டால் தமிழின் முதல் ஓடிடி ஆந்தலாஜி படம் ரெடி.

`` `இந்த ஹீரோ நடிச்சா பணம் பிரச்னை இல்லை'... ஆனா, எனக்கு அவர்?!'' - சுசீந்திரன்

எப்போது ரிலீஸ்?

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் இணைந்து இயக்கியிருக்கும் இந்த ஆந்தாலஜி படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழைப்போலவே இதே கான்செப்ட்டில் தெலுங்கிலும் பிரபல இயக்குநர்களை வைத்து ஆந்தாலஜி படம் இயக்கியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். அந்தப்படமும் இதே நேரத்தில் ரிலீஸாகும் என எதிர்பாக்கப்படுகிறது. விரைவில் இந்தப்படம் தொடர்பாக நெட்ஃபிளிக்ஸிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு