கோயம்பேடுக்கு என் நண்பன் வரலைனா என்னவாகி இருப்பேன்..?''- 'மாநகரம்' போற்றும் `மாநகரம்' இயக்குநர் லோகேஷ்!

தமிழகத்தின் தலைநகரான சென்னை பிறந்த நாள் இன்று. இந்த நாளுக்காக சென்னையில் இருக்கும் பூர்வீக சென்னை வாசிகளைவிட, வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, வேலைபார்த்துக்கொண்டிருக்கும் பலரும் சமூக வலைதளங்களில் சென்னைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது முதல் படத்தின் மூலமாக சென்னை பற்றிய பிம்பத்தை அழகாக வெளிப்படுத்திய 'மாநகரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைத் தொடர்புகொண்டோம்.

maanagaram

''என்னுடைய முதல் படத்தின் பெயரே 'மாநகரம்'. எனக்கு சென்னை மிகவும் பிடிக்கும். அதனால்தான் மாநகரம் போன்று ஒரு படத்தைக் கொடுத்தேன். நான், சென்னை பையன் இல்லை. கோவைதான் என்னுடைய ஊர். எம்.பி.ஏ பண்ணுவதற்காகத்தான் முதலில் சென்னைக்கு வந்தேன். இந்த ஊருக்கு வந்தவுடன் எனக்கு பயம் தெரியவில்லை. ஆனால், ஒரு பரபரப்பு தெரிந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன் என் நண்பனை போனில் அழைத்தேன். அவன் இல்லையென்றால் என்ன செய்திருப்பேன் சென்னையில் என்று தெரியவில்லை.

 என் முதல் படத்துக்கான அடையாளமே இந்த ஊரில்தான் கிடைத்தது. இதுதான் படத்துக்கான பெயர் என்று தெரிந்தவுடனே, இந்த ஊரை பற்றிக் காட்டிவிட வேண்டும் என்று எண்ணினேன்.  யாரெல்லாம் தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ அதையெல்லாம் பொய் என்று காட்டுவதற்காகத்தான் சில சீன்ஸ் படத்தில் வைத்தேன். 

இந்த ஊரில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள்கூட சென்னையிலேயே இருந்துகொண்டு சென்னையைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அதேபோல்தான் படத்தில் இடம்பெற்றிருக்கும் டாக்ஸி சீன் போன்று என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. வழி தெரியாமல் நானும் டாக்ஸி டிரைவரும் தேடி அலைந்திருக்கிறோம். அதையெல்லாம்தான் படத்தில் சொன்னேன். பேர் தெரியாத நட்பு இந்த ஊரில் நிறைய இருக்கும். 

நிறைய மனிதர்கள் இந்த ஊரில் இருக்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி இந்த ஊரில் உள்ளது. எனக்கு சென்னை எப்போதும் பிடிக்கும். இப்போது மிகவும் பிடித்துள்ளது. எப்போதும் சென்னையைக் காதலித்துக்கொண்டிருப்பேன்'' என்று கூறிமுடித்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!