`பப்பி லவ் யாருக்குமே கசக்காதுங்க!'' - `காதல் கசக்குதய்யா' இயக்குநர் துவாரக் ராஜா

சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்துக்குப் பிறகு, எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் 'காதல் கசக்குதய்யா'. அறிமுக இயக்குநர் துவாரக் ராஜா 'மாலை நேரம்' என்ற தனது குறும்படத்தைத் தற்போது படமாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து சில ஆண்டுகள் ஆன நிலையில், அதை முழுநீளப் படமாக இயக்க என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள படத்தின் இயக்குநர் துவாரக் ராஜாவை தொடர்புகொண்டோம்.

kadhal kasakuthaiya

''என்னுடைய 'மாலை நேரம்' குறும்படத்துக்கு நல்ல ரீச் இருந்தது. அதனால்தான் அதே கதையை என்னுடைய  முதல் படமாகவும் எடுத்தேன். அதுமட்டுமின்றி அந்தக் குறும்படத்தின் முடிவு கொஞ்சம் இன்கம்ப்ளீட்டாக இருந்த மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. அதையெல்லாம் சரி செய்யவும், பப்பி லவ் யாருக்குமே  கசக்காது என்பதாலும் என் குறும்படத்தை முழுநீளப் படமாக எடுத்தேன்.

என்னுடைய குறும்படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் இருவரும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். 'மாலை நேரம்' குறும்படத்தில் ஹீரோயினாக நடித்த அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது.  அதனால்தான் படத்தில் 'துருவா' வெண்பாவை நடிக்க வைத்தேன். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் நடிகை கல்பனா நடித்திருப்பாங்க. அவர் நடித்த கடைசி திரைப்படம் இதுதான். படத்தில் அவர்களுக்காகவே 'அம்மா செல்லம்' என்ற பாடலே வைத்திருக்கிறேன். 

காதல் கசகுதய்யா

'சேதுபதி', 'அதே கண்கள்' படத்தில் நடித்த லிங்கா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கார். இந்தப் படத்தை பற்றி பலர் கமென்ட் பண்ணும்போது, ஸ்கூல் பொண்ணு லவ் பண்ற மாதிரி ஏன் படம் எடுக்குறீங்கனு கோபப்படுறாங்க. முருகதாஸ் சார்கூட சமீபத்தில் ஒரு இடத்தில் பேசும் போது,’ஸ்கூல் பொண்ணுங்க எல்லாம் லவ் பண்ற மாதிரி படம் எடுக்குறதைத் தவிர்க்க வேண்டும்’னு சொல்லியிருந்தார். நான் அதை ஒப்புக்கொள்கிறேன். சினிமாவைப் பார்த்துவிட்டு யாரும் கெட்டுப்போகப் போவதில்லை. ஏனென்றால், 'இந்தியன்' படம் பார்த்துவிட்டு பலபேர் லஞ்சம் வாங்காமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லையே. சினிமாவால் கண்டிப்பாக சின்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், பெரிய மாற்றங்கள் ஏற்படாது. அதற்காக என் படத்தை பார்த்துவிட்டு ஸ்கூல் பொண்ணுங்க லவ் பண்ணுங்கன்னு நான் சொல்லவில்லை. ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஒரு 18 வயசு பொண்ணுக்கும் 25 வயசு பையனுக்கும் காதல். இத நானா ஒன்னும் உருவாக்கல. கண்டிப்பா நீங்களே உங்க வாழ்க்கையில அப்படி ஒரு  காதல் ஜோடியை கிராஸ் பண்ணியிருப்பீங்க. இவங்களுக்கு யார் அந்த துணிச்சல் கொடுத்தது? எப்படி அந்த காதல் வந்துச்சுன்னு ஒரு நடைமுறை முரணை தாண்டி பேசுற படம். அதனால தான் நான் இத ஒரு யானை படம்னுகூட சொல்லுவேன்.  ஏன் சொல்றேன்னா காட்ல யானையோட வேலை, முள்ளு புதரு மரம்னு அது வழில வரும் போது இடிச்சு தகர்த்துட்டு முன்னேறும். அதுவே ஒரு புது வழியா மாற்றிறும். மத்த மிருகங்களும் அதை ஃபாலோ பண்ணும். அப்படிதான் இந்த ஸ்கூல் பசங்க காதலும்! பதின் பருவத்து வேட்கைன்னாலும், இவங்களுக்கு ரூட் போட்டு கொடுத்த  யானை எதுன்னு நம்ம இப்பவாச்சும் தெரிஞ்சிக்கணும். அதை இந்த படத்துல சொல்லிருக்கேன். உங்க கண்ணுக்கே தெரியாம ஒரு பெரிய ப்ராஷஸ் நம்ம வாழ்க்கைய சுத்தி நடக்குது. அத வெளிச்சம் போட்டு காட்டிருக்கோம். அந்த யானைய பாக்க தயாரா இருங்க'' என்று சுவாரஸ்யமாக முடித்தார் அறிமுக இயக்குநர் துவாரக் ராஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!