Published:Updated:

“ ‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க!” ‘நீலி’ நிரஞ்சனி

கு.ஆனந்தராஜ்
“ ‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க!” ‘நீலி’ நிரஞ்சனி
“ ‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க!” ‘நீலி’ நிரஞ்சனி

“ஏர்ஹோஸ்டஸ், பியூட்டீஷியன், காஸ்டியூம் டிசைனர்னு பல துறைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், எனக்கு ரொம்பப் பிடிச்சது ஆக்டிங். அதில், இப்போது முழு கவனம் செலுத்திட்டிருக்கேன். அடுத்து, டைரக்‌ஷனையும் ஒரு கை பார்த்துடணும்" என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நிரஞ்சனி. சன் டிவி 'வாணி ராணி' மற்றும் விஜய் டிவி 'நீலி' சீரியல்களில் நடித்துவருபவர். 

மீடியா பயணம் தொடங்கியது எப்படி?” 

“சின்ன வயசிலிருந்தே டான்ஸ், ஆக்டிங்ல ரொம்ப ஆர்வம். பிளஸ் டூ படிச்சுட்டிருந்தப்போ ஸ்கூல் கல்ச்சுரல் புரோகிராமில் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ணினேன். அந்த நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டா வந்தது, நாசர் சார். என்னைப் பாராட்டியவர், அப்பாகிட்ட 'உங்க பொண்ணுக்கு சினிமாவில் நடிக்க எல்லாத் திறமைகளும் இருக்கு. இப்பவே கவனம் செலுத்தி ஊக்கப்படுத்துங்க'னு சொன்னார். பிறகு, சன் டிவியின் ‘அழகி’ சீரியலுக்கு நடந்த ஆடிஷனில் கலந்துகிட்டேன். ஐந்தாயிரம் பேர் கலந்துகிட்ட அதில், செலக்டான ஆறு பேரில் நானும் ஒருத்தி. தொடர்ந்து, அந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சேன்." 

“நடிப்புக்காக காலேஜ் கோர்ஸையே மாத்திக்கிட்டீங்களாமே?” 

“ஆமாம். ‘அழகி’ சீரியல் சமயத்தில், கல்லூரியில் டிசைனிங் கோர்ஸில் சேர்ந்தேன். மாடலிங், ஆக்டிங்னு நிறைய வாய்ப்புகள் வரவே, ஆக்டிங்தான் என் எதிர்காலம்னு முடிவெடுத்தேன். அதனால், ஒரு செமஸ்டர்கூட வீணாக வேணாம்னு, அதே காலேஜில் பி.எஸ்ஸி., விஸ்காம் கோர்ஸில் சேர்ந்துட்டேன்.”

“அசிஸ்டென்ட் டைரக்டராக வொர்க் பண்ணின அனுபவம்...” 

“காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறப்போ, தென்னிந்திய அழகிப் போட்டியில், செமி ஃபைனலில் தமிழ்நாடு ஸ்டேட் வின்னரா வந்தேன். எக்ஸாம் இருந்ததால், ஃபைனல் போட்டியில் கலந்துக்க முடியலை. அப்போ, பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு தெலுங்குப் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டரா இன்டர்ன்ஷிஃப்பில் வொர்க் பண்ணினேன். எனக்கு டைரக்டராகணும்னு ரொம்பவே ஆசை. அந்தப் படம், அதுக்கு நல்ல அனுபவம் கொடுத்துச்சு. அப்புறம், சந்தானம் சாரின் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து, ஜெயா டி.வி ‘அக்கா’ சீரியலில் நடிச்சேன்.'' 

“ஏர்ஹோஸ்டஸ், பியூட்டீஷியன்னு பல துறைகள்ளில் கவனம் செலுத்தறீங்களே எப்படி?” 

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு துறைமீது ஆர்வம் வரும். இறங்கி வொர்க் பண்ண ஆரம்பிச்சிருவேன். யாரையும் நம்பி இருக்காமல், சுயமாக இருக்கணும் என்பது என் எண்ணம். காலேஜ் முடிச்சதும் ஏர்ஹோஸ்டஸ் கோர்ஸ் முடிச்சுட்டு, பெங்களூரில் சில மாசம் இருந்தேன். அப்போ, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. அவங்க பக்கத்திலிருந்து கவனிச்சுக்கிறதுக்காக வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். அதேமாதிரி பியூட்டீஷியன், காஸ்டியூம் டிசைனிங்னு பலவற்றை கத்துக்கிட்டேன்.'' 

“ ‘பிரியமானவள்’ கவிதா ரோல் அனுபவம் எப்படி இருக்கு?” 

"அம்மாவை கவனிச்சுக்க சென்னைக்கு வந்த சமயத்தில்தான், சன் டிவி 'பிரியமானவள்' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அம்மாவுக்கும் உடம்பு சரியாகிடுச்சு. அந்த சீரியல்ல ஆர்வமா நடிக்க ஆரம்பிச்சேன். 'அநியாயத்துக்கு அன்பான மருமகளா இருக்கியேமா'ன்னு பலரும் பாராட்டுற அளவுக்கு அந்த கேரக்டருக்கு எக்கச்சக்க லைக்ஸ். ‘உன்னை மாதிரி ஒரு மருமகள் எங்களுக்குக் கிடைக்கணும்’னு பாசத்தைக் கொட்டுற அளவுக்கு ரீச் கிடைச்சுது. தொடர்ந்து, கலைஞர் டி.வி ‘கண்ணம்மா’ சீரியலிலும் நடிச்சேன்.'' 

“டைரக்டர் கனவு எந்த அளவில் இருக்குது?” 

“நிறைய மூவி ரோல்ஸ் வந்தாலும், நல்ல பெயர் கிடைக்கிற மாதிரியான ரோலில் நடிக்கணும்னு உறுதியா இருக்கேன். டைரக்டர் கனவை நோக்கியும் பயணிச்சுட்டிருக்கேன். இப்போதைக்கு, சன் டிவி 'வாணி ராணி' சீரியலில் செல்வி மற்றும் விஜய் டிவி 'நீலி' சீரியலில் திவ்யா ரோல்கள் சிறப்பாக போயிட்டிருக்கு. 'ரெடி... ஆக்‌ஷன்!' சொல்லும் நாள் சீக்கிரம் வரும்னு நம்பறேன்” எனப் புன்னகைக்கிறார் நிரஞ்சனி. 

கு.ஆனந்தராஜ்