Published:Updated:

‘பதேர் பாஞ்சாலி’ மூலம் வங்கத்திலிருந்து உலகெங்கும் ஒளிபாய்ச்சிய Ray! #PatherPanchali

மூ.இ.சியாம் சுந்தர்வேல்
‘பதேர் பாஞ்சாலி’ மூலம் வங்கத்திலிருந்து உலகெங்கும் ஒளிபாய்ச்சிய Ray! #PatherPanchali
‘பதேர் பாஞ்சாலி’ மூலம் வங்கத்திலிருந்து உலகெங்கும் ஒளிபாய்ச்சிய Ray! #PatherPanchali

விளம்பரப்பட வடிவமைப்பாளர் ஒருவர் வேலை நிமித்தமாக லண்டன் செல்ல நேர்கிறது. அங்கே தங்கியிருந்த ஆறு மாதத்தில் 100க்கும் மேற்பட்ட படங்கள் பார்க்கிறார், அந்த நபர். அதில் சில முக்கியப் படங்களாக ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ போன்றவை அடங்கும். அந்த மனிதர் இந்தியா திரும்புகையில், இந்திய சினிமாவை புரட்டிப்போடப் போகும் படைப்பு ஒன்றை படமாக்க தீர்மானித்துவிட்டிருந்தார்.

அந்த மனிதர், சத்யஜித் ரே. படத்தின் பெயர்- பதேர் பாஞ்சாலி (Pather Panchali).

நியோ-ரியலிச அலையின் தாக்கத்தில் இருந்த ரே, அதேபோல மக்களை கதைமாந்தர்களாக வைத்து யதார்த்த வாழ்வைப் பேசிட நினைத்தார். அவ்வழியில் வந்த 'பதேர் பாஞ்சாலி'யே பராலெல் சினிமா (Parallel Cinema) வின் தொடக்கமாகவும் அமைந்தது. ‘அப்பு ட்ரையாலஜி’ (Apu Triology) யில் முதல் படம் ஆகும்.

பிபுடிபூசன் பானர்ஜி எழுதிய 'பதேர் பாஞ்சாலி' என்னும் நாவலைத் தழுவி, சத்யஜித் ரே இயக்கத்தில் எடுக்கப்பட்ட பதேர் பாஞ்சாலி, 1955-ஆம் அண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி(இதே நாளில்) வெளியானது.

கருணா பானர்ஜி, கனு பானர்ஜி, சுனிபாலா தேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திட, மேற்கு வங்காள அரசு தயாரிப்பில் வெளிவந்த பதேர் பாஞ்சாலி, சத்யஜித் ரே இயக்கிய முதல் படம்.

மேற்குவங்க மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமம்தான் கதையின் களம். நல்லதொரு வேலையின்றி கவிஞராகவும், நாடக ஆசிரியராகவும் வாய்ப்புத் தேடிக்கொண்டிருப்பவர், ஹரிஹார் ராய். அவரின் மனைவி சர்பஜயா கணவரின் சொற்ப வருமானத்தில் குழந்தைகள் (துர்கா மற்றும் அப்பு) இருவரையும் வளர்க்கிறாள். ஒருக்கட்டத்தில் குடியிருக்கும் வீட்டை சரி செய்ய வேலைக்காக வெளியூர் செல்கிறார், ஹரிஹார். வெகுநாள்களாகியும் வீடு திரும்பாதக் கணவனுக்காகவும் தந்தைக்காகவும் காத்திருந்து வறுமையில் காலம் தள்ளும் மூவரின் அகவுணர்வு, அக்கா-தம்பி உறவு, மகளின் இழப்பு, இறுதியில் குடிப்பெயர்வது என கதைமுடிகிறது.

இந்திய சினிமாவை, எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களின் அகவெளியையும் நோக்கிக் கூட்டி சென்றது பதேர் பாஞ்சாலி.

வங்க மொழியில் எடுக்கப்பட்டு, பிராந்தியப் படமாக இனங்காணப்பட்ட இந்தப் படம், தேசிய நடையிலானத் திரைப்படங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

சத்யஜித் ரேயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராதான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார். அதுவரையில், ஸ்டூடியோக்குள் அடைந்துக் கிடந்த இந்திய சினிமாவை பதேர் பாஞ்சாலி வழியாக கிராமங்களின் வாழ்வை சித்தரிப்பதில் வெளித்தேடி இழுத்து சென்றவர்.

ரவி ஷங்கர் இசைக்கும் ‘சித்தார்’ படத்தின் பின்னணியில் உயிராகவே இழையோடுகிறது. கருப்பு-வெள்ளை காலத்தில், காட்சியமைபின் இலக்கணங்களில் விசாரணை நடத்தியதில் ரேவின் படங்களே எடுத்துக்காட்டுகள்.

குறிப்பாக பதேர் பாஞ்சாலியில் வரும் ரயில் காட்சி மிக முக்கியமானக் காட்சியாக விமர்சகர்கள் பலரும் கூறுவர். இருந்தும், அதனை இரண்டாம் தரமானக் காட்சியாகவே ரே குறிப்பிடுவார். முதலில் படமாக்க அக்காட்சி 'அழகியலின் உச்சம்' என்று சொல்லும் படி அமைத்தது. ஆனால், பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் இல்லை என்று கருத்து எழவே, இரண்டாவது முறைப் படமெடுத்து அதனை படத்தில் இணைத்தார்.

சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவையும் அதன் நவீனத்திய தேவை நோக்கிய தேடலையும் அந்நிலையில் சாமானியனின் வாழ்வையும் சத்யஜித் ரே அளவுக்கு அவதானிதவர்கள், திரைத்துறையில் சொற்பமே.

அவ்வகையில், ரே விட்டுச் சென்ற மைல் கல்லாகவே நிற்கிறது பதேர் பாஞ்சாலி!

‘பதேர் பாஞ்சலி’ குறித்து இயக்குநர் லிண்ட்சே ஆண்டர்ஸன், “முழந்தாளிட்டுப் புழுதியில் தவாழ்ந்தபடி இந்தியாவின் யதார்த்ததிற்குள், மனித வாழ்வின் மெய்மைக்குள் வெகு ஆழமாகப் பயணமாகும் அனுபவம் அது." என்று கூறியுள்ளார்.

மூ.இ.சியாம் சுந்தர்வேல்