Published:Updated:

மாஸ்டர் பிரெய்ன் வில்லன் Vs சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ = தனி ஒருவன்! #2YearsOfThaniOruvan

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்
மாஸ்டர் பிரெய்ன் வில்லன் Vs சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ = தனி ஒருவன்! #2YearsOfThaniOruvan
மாஸ்டர் பிரெய்ன் வில்லன் Vs சூப்பர் ஸ்மார்ட் ஹீரோ = தனி ஒருவன்! #2YearsOfThaniOruvan

பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் ‘அற்புதமான திரைப்படம்' எனப் பெயர் வாங்கிய திரைப்படங்கள் வணிகரீதியாக வெற்றியடைவது இல்லை. அப்படியே வணிக ரீதியில் அந்தப் படங்கள் வெற்றி பெற்றாலும், படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அந்தப் படம் பிடித்தமான படமாக அமையும் எனச் சொல்ல முடியாது.

 

படம் பார்த்துவிட்டு முழு நிறைவோடு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் மனதுக்கு நெருக்கமாக இருந்த பல படங்களில் ‘தனி ஒருவன்’ திரைப்படமும் ஒன்று. தமிழ் சினிமாவில் நீண்ட நாள்களுக்குப் பிறகு அனைவருக்கும் பிடித்தமான படமாக அமைந்தது மட்டுமல்லாமல், வணிகரீதியாகவும் வெற்றி அடைந்தவன் இந்தத் ‘தனி ஒருவன்’. படம் வெளியாகி, இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

‘ஜெயம் ராஜா’வாக அறியப்பட்ட இயக்குநர் ராஜா, அன்று முதல் (28-8-2015)  `தனி ஒருவன்' ராஜாவாக ஒளிரத் தொடங்கினார். தெலுங்குப் படங்களை மறு ஆக்கம் செய்துகொண்டிருந்த இயக்குநர் ராஜாவுக்கு, தனக்கென ஓர் அடையாளம் தேவைப்பட்டது. அந்த அடையாளத்தை, `தனி ஒருவன்' திரைப்படம் மிக அழுத்தமாகவே கொடுத்தது. மற்ற மொழிப் படங்களை மறு ஆக்கம் செய்தவரிடம் தன் திரைப்படத்தின் மறு ஆக்க உரிமையை வாங்க, பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர். சுரேந்தர் ரெட்டி தெலுங்கில் இயக்கிய `கிக்' படத்தை ராஜா தமிழில் `தில்லாங்கடி' என்ற பெயரில் இயக்கினார். அதே சுரேந்தர் ரெட்டிதான் `தனி ஒருவன்' படத்தை தெலுங்கில் `துருவா' என்ற பெயரில் மறு ஆக்கம் செய்தார். வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!! ஒரு மனிதனின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கான வெற்றி இதுவே. வாழ்த்துகள் சகோ!

‘பேராண்மை’, ‘நிமிர்ந்து நில்’ என, பல திரைப்படங்களில் ஜெயம் ரவியின் முதிர்ச்சியான நடிப்பைப் பார்த்த நமக்கு, மேலும் ஆச்சர்யத்தை அளித்தது `மித்ரன் IPS' கதாபாத்திரம். ``செய்தித்தாளில் ஆறாவது பக்கத்துக்கும் எட்டாவது பக்கத்துக்கும் இருக்கும் தொடர்பு, பிறகுதான் தெரிஞ்சுது'' என வசனம் பேசுவதிலும் சரி, நயன்தாராவின் காதலை மறுக்கும் இடங்களிலும் சரி, அலட்டிக்கொள்ளாத நடிப்பால் அனைவரையும் வசீகரித்தார் மித்ரன்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகள் கதாநாயகனை துரத்தித் துரத்திக் காதலிக்கும் கதாபாத்திரங்களைப் பார்த்திருந்தாலும், ‘தனி ஒருவனி'ல் நயன்தாராவின் கதாபாத்திரம் மிகக் கண்ணியமாகக் கையாளப்பட்டவிதம் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதிலும் அந்த love proposal காட்சியில் இருவரின் நடிப்பும் செம! அப்படி ஒரு காதல் காட்சி... ரொம்ப புதுசு பாஸ்!

“Come-Back மூவி-ன்னா இப்படிக் கொடுக்கணும்” என, பல சீனியர் நடிகர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்தது அர்விந்த் சுவாமியின் ஸாரி... ஸாரி... சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரம். பொதுவாகவே இடைவேளைக் காட்சிகளில் ஹீரோ வில்லனை எதிர்த்து சவால்விடுவது போன்ற காட்சிகள்தான் பெரும்பாலான போலீஸ் வகை திரைப்படங்களில் இருக்கும். ஆனால், வில்லன் தன் முயற்சியில் வெற்றிபெறுவது மாதிரியான காட்சியில் அர்விந்த் சுவாமி கெத்துகாட்டியிருப்பார். நீங்க ஹீரோவா நடிச்சாலும் பிடிக்குது, வில்லனா நடிச்சாலும் பிடிக்குது, அது எப்படி சார்?

சீரியஸான முழுப் படத்திலும் நம்மைச் சிரிக்கவைத்த பெருமை தம்பி ராமைய்யாவுக்குத்தான். அதுவும் “அவன் பாஸ்போர்டை முடக்கி, அவனை டெல்லிக்குப் போகவிடாம பண்ணிடுறேன். அவன் வீட்டுக்கு தண்ணி கனெக்‌ஷனையும் கரன்ட் கனெக்‌ஷனையும் கட் பண்ணிடுறேன்” என்று சீரியஸாக வசனம் பேசியே நம்மைச் சிரிக்கவைத்தார். அதுவும் ‘அந்தக் கொசு செத்திருக்கணுமே!’ வசனம், அநியாயம்.

தீமைதான் வெல்லும் என மிரட்டியதிலும் சரி, ‘கண்ணால கண்ணால...’ பாட்டில் காதல் பேசியதிலும் சரி, ஹிப்ஹாப் தமிழா நம் கவனம் ஈர்த்தார். ‘காதல் கிரிக்கெட்...’ பாடல் அழகாவே இருந்தாலும், ராம்ஜியின் கேமராவில் பார்க்கும்போது கூடுதல் அழகு. ஆக, சிறப்பான அனைத்தும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை மேலும் சிறப்பாக்கியிருந்தன.

‘ஒரு படம் வந்து இத்தனை வருடங்கள் கழித்தும் அதைப் பற்றி எழுதிக் கொண்டாடவேண்டுமா?' எனப் பலரும் கேட்கலாம். ஆனால், தரமான திரைப்படங்களை நாம் கொண்டாடத் தவறியதால்தான் தரமான திரைப்படங்களின் வரத்தும் பெரிதும் குறைந்தது. ‘தனி ஒருவனை’க் கொண்டாடுவதன் மூலம், நாம் பல ‘தனி ஒருவன்க’ளை வரவேற்கக்கூடும்.

எட்.விஸ்வநாத் பிரதாப் சிங்