Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டோ டிரைவர், எழுத்தாளர், நடிகர்...சிவதாணுவின் வாழ்க்கைப்பயணம்! #RIPSivadhaanu

எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகம்கொண்ட சிவதாணுவை, அறியாத தமிழ்ப் படைப்பாளிகள் இருக்க முடியாது. நட்புக்கும் நம்பிக்கைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த சிவதாணு, மூச்சுத்திணறல் காரணமாக நேற்றிரவு காலமானார்.1990-களில் ஆட்டோ டிரைவராகத்தான் பலருக்கும் இவரைத் தெரியும். இவருடைய ஆட்டோவில் ஏறிச் செல்லும் வாடிக்கையாளர்களோ பிரபலமானவர்கள். இயக்குநர் பாலுமகேந்திராவும் எழுத்தாளர் சுந்தர ராமசாமியும் இவரின் முக்கியமான வாடிக்கையாளர்கள். `கள்ளியங்காட்டு நீலி’ என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பு, வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்ற ஒன்று. 

சிவதாணு

நான் அப்போது இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர். அவர் அலுவலகத்தில்தான் சிவதாணுவை முதன்முறையாகப் பார்த்தேன். துறுதுறுவென இருந்தார். அறிமுகமான சில நிமிடத்திலேயே உரிமையோடு பேசும் சுபாவம். பிரபல பத்திரிகையில்  வெளியான கதை ஒன்றைக் கொண்டுவந்திருந்தார். அப்போது பாலுமகேந்திராவின் `கதை நேரம்’ தொடர், சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. வாரம் ஓர் எழுத்தாளரின் சிறுகதையை குறும்படமாக்கி தொலைக்காட்சியில் வெளியிட்டுக்கொண்டிருந்தார் பாலுமகேந்திரா. சிவதாணு கொண்டுவந்த அந்தக் கதையை நான், சீனுராமசாமி (இயக்குநர்), சுரேஷ் (இயக்குநர்) மூவரும் படித்துப்பார்த்தோம். வெற்றி மாறனிடம் (இயக்குநர்) சொன்னோம். அந்தக் கதை பாலுமகேந்திரா சாருக்கும் பிடித்துவிட்டது. அடுத்த வாரமே அதை `ஏய் ஆட்டோ’ என்கிற குறும்படமாக எடுத்துவிட்டார். அதில் சிவதாணு நடிக்கவும் செய்தார். பல குறும்படங்களில் சிவதாணு நடிக்க வாய்ப்பும் கொடுத்தார் பாலுமகேந்திரா. 

அவருடனான சந்திப்பு தொடர்ந்தது. தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் இலக்கிய வாசிப்பையும் எழுத்தாளர்களுடனான நட்பையும் விடாமல் தொடர்ந்தார். எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, பவா செல்லதுரை, திலகவதி... என எல்லோரையும் தேடிப் போய்ப் பார்த்துப் பேசுவார். 

சிவதாணு

ஒருநாள் அவர் ஆட்டோவில் தேனாம்பேட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தேன். பனகல் பார்க் அருகே வரும்போது சடாரென, இடதுபுறம் வெங்கட்நாராயணா சாலைப் பக்கம் ஆட்டோவைத் திருப்பினார். ``இந்தப் பக்கம் எங்கே போறீங்க சிவதாணு?’’ என்று கேட்டதற்கு, ``அஞ்சே நிமிஷம்... போயிடலாம்'’ என்றார். நடேசன் பார்க் தாண்டி ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோவிலிருந்து இறங்கி ஆகாயத்தைப் பார்த்தார். அது மாலை 6 மணி. வானத்தில் சிறு பிறையாக நிலவு. ``மூணாம் பிறையைப் பார்த்தா நல்லது நடக்கும்... நீயும் பாரேன்’' என்றார். அவருடைய நம்பிக்கை, கடைசிவரை பலிக்கவில்லை என்றே இப்போது தோன்றுகிறது. ஒருகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, முழு நேர நடிகர் ஆக முயற்சிசெய்துகொண்டிருந்தார்.

இடையில் உடல்நலக் குறைவு காரணமாக, அவரால் நடக்க முடியாமல் போய்விட்டது. இது நடந்து பத்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்க சில நண்பர்கள் போயிருந்தார்கள். அங்கே பெட்டில் சிவதாணு இல்லை. சிறிது நேரம் கழித்து அவரே மாடிக்கு ஏறி வந்திருக்கிறார். ஆச்சர்யமாகப் பார்த்த நண்பர்களிடம் இப்படிச் சொல்லியிருக்கிறார்... ``ஒரு கையையும் காலையும் அசைக்க முடியலைதான். ஆனா, `எனக்கு இப்படி நடக்கக் கூடாதே... எனக்கெல்லாம் இப்படி நடக்கலாமா?'னு யோசிச்சேன். அதான் மெள்ள ஒரு நடை போய்ப் பார்த்தேன். இப்போ நடக்க முடியுது’’ என்று சிரித்திருக்கிறார். அதுதான் சிவதாணு. 

சில ஆண்டுகளாக கழுத்தில் ஒரு ருத்ராட்சம் தொங்கும் கயிறு முளைத்திருந்தது. ``பசங்க நல்லா பார்த்துக்குறாங்க. வீட்ல எனக்கு தனி ரூம். நல்லா இருக்கேன்’’ என்று அடிக்கடி சொல்வார். சிவதாணுவுக்குத் தாணு பாலாஜி, கண்ணன், கார்த்தி என மூன்று புதல்வர்கள். மனைவி விஜயா. சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் தெருவில் வசித்துவந்தார். 

``ஒரு நல்ல கதையா எழுதிக் குடுத்தா உங்க `விகடன் தடம்’ல போடுவீங்களா? அடுத்த மாசம் தர்றேன்’’ என்றார். இன்னும் அடுத்த மாதம் வரவில்லை. அதற்குள் அவரை அழைத்துக்கொள்ள இந்தக் காலத்துக்கு என்ன அவசரமோ!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்