Published:Updated:

“ ‘பிக் பாஸ்’ காஜலை மறந்துவிட்டேன்!” - டான்ஸ் மாஸ்டர் சாண்டி #BiggBossTamil

பிர்தோஸ் . அ
“ ‘பிக் பாஸ்’ காஜலை மறந்துவிட்டேன்!” -  டான்ஸ் மாஸ்டர் சாண்டி #BiggBossTamil
“ ‘பிக் பாஸ்’ காஜலை மறந்துவிட்டேன்!” - டான்ஸ் மாஸ்டர் சாண்டி #BiggBossTamil

சாண்டி, `மானாட மயிலாட' ரியாலிட்டி ஷோவில் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர். தற்போது `காலா’ படத்தில் ரஜினிக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். சாண்டிக்கு கடந்த வாரம் திருமணம். இப்படி `டபுள் டிலைட்' உற்சாகத்தில் இருக்கும் சாண்டியைச் சந்தித்தேன்.

“சென்னைதான் சொந்த ஊர். படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சின்ன வயதிலிருந்தே டான்ஸ் பிடிக்கும். எங்க ஏரியா கோயில் திருவிழாக்கள்தான் எனக்கான மேடை. எந்த ஊர் கோயில் திருவிழா என்றாலும் அங்கே என் டான்ஸ் நிச்சயமா இருக்கும். அப்படி ஊர் ஊரா தெருக்களில் எல்லாம் ஆடினவன் நான். பிறகு, கொஞ்சம்கொஞ்சமா முன்னேறி கலா மாஸ்டர், ஜெயந்தி மாஸ்டர் டான்ஸ் குரூப்பில் சேர்ந்தேன். 40 பேர்கொண்ட டான்ஸ் குரூப்பில், ஒரு ஆளா ஆடினவன்; பிறகு முகம் தெரியுற அளவுக்கு நான்கைந்து பேர் மட்டுமே ஆடும் குரூப்புக்குள் ஆடும் அளவுக்கு வளர்ந்தேன். 

அப்பதான் கலா மாஸ்டர், ‘நல்லா ஆடுற மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவுக்கு கோரியோகிராஃப் பண்ணு’னு சொன்னாங்க. ஆரம்பத்தில் பயம். ‘பண்ண மாட்டேன்'னு சொல்லிட்டேன். பிறகு, ‘டேய்... உன்னால் முடியும். நீ தைரியமா பண்ணு’னு ஊக்கம்கொடுத்து களத்துல இறக்கிவிட்டாங்க. அப்படித்தான் `மானாட மயிலாட' பண்ணினேன். முதல் சீஸனில் நான் கோரியோகிராஃப் பண்ணின ஜோடிதான் டைட்டில் வின் பண்ணினாங்க. பிறகு, எட்டு சீஸன் வரை `மானாட மயிலாட' டீமில் இருந்தேன். பிறகுதான் சினிமாவில் மாஸ்டர் ஆனேன். 

இதற்கிடையில் பிருந்தா மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்டா வேலைபார்த்தேன். அப்பதான் ரோபோ ஷங்கர் என்னை `ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு `கெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்' பண்ணுவதற்குக் கூட்டிட்டுப் போனார். விஜய் டிவி-க்கு என்  பெர்ஃபாமன்ஸ் பிடித்துவிட, `ஜோடி நம்பர் ஒன்'னில் கொஞ்சநாள் வொர்க் பண்ணினேன். `நாம கூட்டிட்டு வந்த பையன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிக்குப் போயிட்டானே'னு கலா மாஸ்டருக்கு என்மேல வருத்தம். ஆனால், பழைய கோபம் எதையும் மனசுல வெச்சுக்காம என் கல்யாணத்துக்கு வந்திருந்து வாழ்த்திட்டுப் போனாங்க” என்றவர் தன் காதல் மனைவி சில்வியா தனக்கு அறிமுகமானது பற்றிப் பேசுகிறார். 

“சில்வியாவின் தங்கச்சிக்கு என் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதனால சில்வியாவோட அம்மா தன் சின்னப்பொண்ணு பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என்னை கெஸ்ட்டா அவங்க வீட்டுக்கு அழைச்சிருந்தாங்க. அந்த முதல் சந்திப்பிலேயே அவங்க ஃபேமிலிகூட நல்லா பழகிட்டேன். சில்வியாவைப் பார்த்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸாகிட்டோம். ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தாலும் ப்ரபோஸ் பண்ணிக்கலை. 

ஒருநாள் சில்வியா அம்மாகிட்ட பேசினேன். ‘உங்க குடும்பத்தை எனக்குப் பிடிச்சிருக்கு. உங்க பெரிய பெண்ணை நான் விரும்புறேன். எங்களுக்கு கல்யாணம் செய்துவைக்க முடியுமா?’னு டக்குனு கேட்டுட்டேன். ஷாக் ஆனவங்க, ‘முடியாது’னு சொன்னாங்க. பிறகு, சில்வியாகிட்ட பேசிப்பார்த்துட்டு நாங்க உறுதியா இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு, ஆறு மாசம் கழிச்சு எங்க காதலுக்கு ‘ஓகே’ சொன்னாங்க. எங்க கல்யாண நிச்சயதார்த்தம் முடிஞ்சது. என் மனைவி சில்வியா, செம படிப்பாளி. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, போஸ்ட் கிராஜுவேஷன் ஃபைனல் இயர் படிக்கிறாங்க. 

என் நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடன் ரஜினி சாரைப் பார்த்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினோம். ரஜினி சார் என்னைப் பற்றி சில்வியாகிட்ட ரொம்பப் பெருமையா பேசினார். அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு” என்பவர் ‘காலா’ படத்தில் ரஜினியுடன் வேலைசெய்த அனுபவத்தைச் சொல்கிறார்.

“சூப்பர் ஸ்டாரைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி, லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி சொல்லிக்கிறேன். டான்ஸர்ஸ் அசோஷியேஷனில் நான் கார்டு எடுக்க உதவியதும், சினிமாவில் என்னை டான்ஸ் மாஸ்டராக்கியதும் சிம்புதான். அவர்தான் ‘வாலு’ படத்தில் வொர்க் பண்ண வாய்ப்பு கொடுத்தார். 

தொடர்ந்து வாய்ப்பு தேடிட்டிருந்தேன். இயக்குநர் பா.இரஞ்சித் அண்ணா எனக்கு ரொம்ப நாளா பழக்கம். என் மீது உண்மையான அக்கறை உள்ளவர். அவர்கிட்ட ‘கபாலி’ படம் முடிஞ்சதும் அடுத்த படத்துல சான்ஸ் கேட்டேன். ‘நிச்சயமா பண்ணலாம் தம்பி'னு சொன்னவர், கரெக்ட்டா ‘காலா’வுக்காக என்னை அழைச்சார். ‘காலா’ ஷூட்ல ரஜினி சாரை முதன்முதல்ல பார்த்தப்ப, அவ்வளவு ஆச்சர்யம். `நாம ஆச்சர்யமா பார்த்து ரசிச்ச ஒரு மனிதருக்கு ஒன், டூ, த்ரினு ஸ்டெப்ஸ் சொல்லிக்கொடுக்கப்போறோம்'னு நினைச்சாலே கனவு மாதிரி இருந்துச்சு. அவர் பந்தா இல்லாம இருந்தது ஒரு ஆச்சர்யம்னா, என் டான்ஸ் ஸ்டெப்ஸுக்கு செமயா மூவ்மென்ட் கொடுத்தது அதைவிட பெரிய ஆச்சர்யம். ஆமாம், `காலா' படத்தின் டைட்டில் பாடலுக்கு நான்தான் கோரியோகிராஃப். அதில் ரஜினி சார் டான்ஸ்ல பின்னியிருக்கார். க்ளைமாக்ஸ் பாட்டுக்கும் நான்தான் கோரியோகிராஃப்.

`காலா' படத்தில் ரஜினி சார் பயன்படுத்தும் ஜீப் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என் சம்பளத்துல அதே மாடல் ஜீப்பை வாங்கிட்டேன். அதை ரஜினி சார்கிட்ட காட்டணும்னு ப்ளான் பண்ணியிருக்கேன். `உங்களால்தான் இந்த ஜீப் வாங்கினேன்’னு அவர்கிட்ட சொல்லணும்னு ஆசை” என்பவர், தன் திருமணம் பற்றிச் சொல்கிறார்.

“என் திருமணம் நாள் அன்று `காலா' பட ஷூட்டிங். அதனால ரஜினி சார், பா.இரஞ்சித் அண்ணா உள்பட படக்குழுவுல உள்ளவங்களால கலந்துக்க முடியலை. ஆனால், என்னுடன் டிராவல் ஆன பலரும் வந்திருந்து வாழ்த்தினதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.”

சாண்டியும் `பிக் பாஸ்’ காஜலும் திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்டார்கள். சாண்டியிடம் `பிக் பாஸி'ல் காஜல் கலந்துகொண்டிருப்பது குறித்துக் கேட்டேன், “என் கடந்த காலத்தில் நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். அதனால் அதை மறக்க நினைக்கிறேன். காஜல் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. அவங்களை மறந்துட்டேன். ப்ளீஸ்!'' என்று பதிலைச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..