Published:Updated:

"பிக் பாஸ்ல தன் தவறுகளை உணர்ந்த ஆரத்தி, இப்ப புது மனுஷி!’’ - நெகிழும் கணேஷ்கர் #BiggBossTamil

கு.ஆனந்தராஜ்
"பிக் பாஸ்ல தன் தவறுகளை உணர்ந்த ஆரத்தி, இப்ப புது மனுஷி!’’ - நெகிழும் கணேஷ்கர் #BiggBossTamil
"பிக் பாஸ்ல தன் தவறுகளை உணர்ந்த ஆரத்தி, இப்ப புது மனுஷி!’’ - நெகிழும் கணேஷ்கர் #BiggBossTamil

" ‘கேன்சர் நோயாளிகளுக்கு உதவணும்ங்கிற எண்ணத்தை நிறைவேற்ற, ஆரத்தி தன் முடியை தானமாக கொடுத்திருக்காங்க. அதுவும், 'எனக்கு தலைக்கனம் இருக்கிறதா பலரும் சொல்றாங்க. அது உண்மையோ... பொய்யோ, இனி நான் அப்படி இருக்க மாட்டேன் என்பதை வெளிப்படுத்திட்டேன்'னு ஆரத்தி மொட்டை போட்டப்பின்பு எங்கிட்ட சொன்னப்போ அதிர்ச்சியாகிட்டேன்" - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் 'பிக் பாஸ்' ஆரத்தியின் கணவரும், நடிகருமான கணேஷ்கர். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தன் மனைவியிடம் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகிறார்.

"வெற்றி பெறணும்ங்கிற எண்ணம் நிறைவேறலையேன்னு, 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து கலங்கியபடியேதான் ஆரத்தி வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டு நாள் முழுக்கவே, அவங்க ரூமுக்குள்ள அடைபட்டுக்கிடந்தாங்க. அந்த ரெண்டு நாள்களும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சார்ந்த எல்லா வீடியோக்களைப் பார்த்தாங்க. அப்புறம் புது ஆரத்தியா அவங்க ரூம்ல இருந்து வெளிய வந்தாங்க. குறிப்பா, 'அந்நிகழ்ச்சியில நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். அதை இப்போதான் உணர்ந்தேன்'னு எங்கிட்டச் சொன்னாங்க. 'நீ சரியாதான் பேசின. ஆனா, சொன்ன விதம்தான் தப்பா போயிடுச்சு. அது மத்தவங்களை காயப்படுத்திடுச்சு. அதுவே நீ சொன்ன விஷயத்தை, அன்பான முறையில சொல்லியிருந்தா அது எல்லோருக்குமே பிடிச்சிருந்துக்கும்'னு நான் சொன்னேன். 'அதையெல்லாம் இப்போ உணர்ந்துட்டேன். இனி யார் மனசையும் புண்படுத்தாம இருப்பேன்'னு வாக்குறுதி கொடுத்தாங்க. தொடர்ந்து தனக்குப் பிடிச்ச விஷயங்களை செய்துட்டிருந்தாங்க. ரெண்டு சினிமா படங்கள்ல நடிக்கும் வேலையில கவனம் செலுத்தினாங்க" என்பவர் ஆரத்தி தன் முடியை தானம் செய்துவிட்டு வந்த அந்தத் தருணத்தை ஆச்சர்யத்துடனே சொல்கிறார்.

"கல்யாணத்துக்கு முன்பிலிருந்து ஆரத்தி, ரத்த தானம் உள்ளிட்ட பல மருத்துவ உதவிகளை செய்துகிட்டு இருந்தாங்க. எங்கக் கல்யாணத்துக்குப் பிறகு என்னையும் பல மருத்துவ உதவிகளை செய்ய உத்வேகப்படுத்தினாங்க. மேலும், அடிக்கடி அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போய், அங்கிருக்கிற நோயாளிகளைப் பார்த்து ஆறுதல் சொல்லுவாங்க. அப்படி, கேன்சர் பாதித்த பெண்களுக்கு ஏதாச்சும் உதவி செய்யணும்னு சொல்லிட்டே இருப்பாங்க. இந்நிலையில, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, திடீர்னு ஒருநாள் மொட்டையடிச்சுகிட்டு வந்து என்முன்னால நின்னாங்க. எனக்குப் பயங்கர அதிர்ச்சி. 'இப்போ எதுக்கு மொட்டையடிச்சுகிட்டு வந்தே; ஒருவார்த்தை என்கிட்டக்கூடச் சொல்லாமலேயே இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கியே'னு கேட்டேன். 'எனக்கு நிறைய தலைக்கனம் இருக்குன்னு பலரும் சொல்றாங்க. உண்மையில் என்னோட குணம் அதில்லைனு உங்களுக்கும், அப்பாவுக்கும் தெரியும். ஆனா, மத்தவங்களுக்கு தெரியாது இல்லையா!. அதை எல்லோருக்கும் தெரிய வைக்கத்தான் இப்படி செய்தேன்'னு சொன்னாங்க. தவிர, 'கேன்சர் நோய் பாதிப்புள்ள பெண்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டும். அப்போ அவங்க மனநிலை ரொம்பவே கஷ்டமானதா இருக்கும். அதனால அவங்களுக்கு என்னாலான சின்ன உதவியை செய்யணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுக்கு இதுதான் சரியான தருணம்னு முடிவெடுத்து, என் முடியை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுத்துட்டேன். என்னைப் பார்த்து இன்னும் ரெண்டு பேர் முடியை தானம் செய்ய முன்வந்தா, நல்ல மாற்றமா இருக்கும்'னு அவங்க சொல்ல, 'நிச்சயம் அது நடக்கும். உன்னை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு'னு அவங்களுக்கு வாழ்த்துச் சொன்னேன்.

முடின்னா பலரும் அழகு சார்ந்த, தன்மானம் சார்ந்த விஷயமா  நினைக்கிறது வழக்கம். ஆண்களே மொட்டைப் போட தயங்குவாங்க. ஆனா, 'பிக் பாஸ்' வீட்டுலேருந்து திரும்பி வந்தபிறகு ஆர்த்திக்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது. நான் ஏதாச்சும் மத்தவங்களுக்கு உதவுற மாதிரி செய்யணும்னு சொல்லிட்டே இருந்தாங்க. அதை இப்படி அழகா செய்வாங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. என் மனைவி ஆரத்தி, முன்னவிட இப்ப கம்பீர அழகுல இருக்கிறதா எனக்குத் தோணுது. ஆனா ஒரு கணவனா கிண்டல் பண்ணாம இருக்க முடியுமா... ஸோ தஞ்சாவூர் பொம்மைனு அவங்களை கிண்டல் செஞ்சேன். 

'தனக்குப் பிறகு தன் பொண்ணு இந்த உலகத்துல எப்படி வாழப்போறான்னு நான் பார்க்கத்தான், ஆர்த்தியை அந்நிகழ்ச்சிக்கு அனுப்பினேன்'னு அவங்க அப்பா ரவீந்திரன் என்கிட்ட சொல்லிட்டே இருப்பார்.  அதே மாதிரி அவங்க வெற்றி பெறணும்னு ஆர்வமா எதிர்பார்த்திட்டிருந்தாரு. ஆனா, ஆரத்தி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினதுல அவருக்கு பெரிய வருத்தம். அப்புறம் சமாதானமாகி, சகஜமாகிட்டார். ஆரத்தி மொட்டைப் போட்ட விஷயத்தை அவர்கிட்ட ரெண்டு பேரும் சொன்னோம். என்னைப் போலவே முதலில் அதிர்ச்சியடைந்தவர், காரணத்தைச் சொன்னதும் நெகிழ்ந்து பாராட்டினார்" என்பவர், ஆரத்தி மீண்டும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள் சென்றிருப்பதைப் பற்றிக் கூறுகிறார்.

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி அவ்வளவா சமைக்க மாட்டாங்க. ஆனா சூப்பரா பீட்ரூட் பிரியாணி செய்வாங்கங்கிறதே அந்த நிகழ்ச்சியைப் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். அங்க இருந்தப்ப நல்லா சமைக்கக் கத்துகிட்டாங்க. வீட்டுக்கு வந்தப் பிறகு பல ஸ்பெஷல் டிஷ் பண்ணிக்கொடுத்தாங்க. தவிர, வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பிச்சாங்க. கோபத்தை கண்ட்ரோல் பண்ணிகிட்டாங்கனு அவங்க நடவடிக்கையைப் பார்த்து கொஞ்சம் மெர்சலாகிட்டேன். ஆனா உள்ளுக்குள்ள அவளோ ரசிச்சேன். உண்மையாகவே, அவங்க நல்ல குணம் கொண்டவங்க. ஆனா, அதை அவங்க டெலிவரி செய்றதில்தான் சில சிக்கல் இருந்துச்சு. இப்போ அதையும் சரிசெய்துகிட்டாங்க. குறிப்பா, நேற்றிலிருந்து மறுபடியும் 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ள ஆரத்தி போயிருக்காங்க. எத்தனை நாள் அந்த வீட்டுக்குள் இருப்பாங்கன்னு எனக்குத் தெரியலை. ஆனா, அந்த வீட்டுக்குள்ள இருக்கும் நாள்கள்ல ஆரத்தியை அன்பானவங்களா பார்க்கலாம். அப்படியான ஆரத்தியைப் பார்க்க, கணவரா, நண்பரா நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்கிறார் புன்னகையுடன்.

கு.ஆனந்தராஜ்