வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (29/08/2017)

கடைசி தொடர்பு:15:35 (29/08/2017)

“என் கதையை சுட்டுதான் விவேகம் படம் எடுத்திருக்காங்க!” - பகீர் கிளப்பும் ‘சுட்ட கதை’ தயாரிப்பாளர்

சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்திருக்கும் திரைப்படம் 'விவேகம்'. படம் ஆகஸ்ட் 24-ம் தேதியன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்காக நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டிருந்தாலும், அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், 'விவேகம்' படத்தின் 60 சதவிகித கதை என்னுடையது’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார், ‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

rahul raveendar

''வீரம் படம் முடிந்தவுடனே என்னுடைய கதையை அஜித்தின் உதவியாளர் ஒருவரிடம் கூறி, அஜித்தைப் பார்த்து கதை சொல்ல அப்பாயின்மென்ட் கேட்டிருந்தேன். சில நாள்களுக்குப் பிறகு அந்த உதவியாளர், ‘அஜித் புது இயக்குநர்கள் கதையில் நடிப்பதில்லை’ என்று சொன்னார். 

தற்போது 'விவேகம்' படத்தைப் பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாகயிருந்தது. என்னுடைய கதைக்கு 'ஐநா' என்று பெயரிட்டிருந்தேன். 'விவேகம்' படத்தில் இந்தப் படம் கற்பனைக் கதை என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், என் கதையை உண்மையில் பார்த்த சம்பவத்தை வைத்துதான் ரெடி பண்ணியிருந்தேன். அதை என்னுடைய முதல் படமாக இயக்கவிருந்தேன். ஸ்க்ரிப்ட் எழுதிய பிறகுதான், இந்தக் கதையை அஜித் உதவியாளரிடம் சொன்னேன். என்னுடைய முழு கதையும் 'விவேகம்' படத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனா, கதையில் இருக்கும் டிராவல், டெக்னாலஜி, இன்டலிஜன்ட், சீக்வென்ஸ் இதையெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால், கதையை எடுத்தால் அப்படியே தெரியும் என்பதால் அதை மட்டும் விட்டுவிட்டார்கள். 'விவேகம்' படத்தைப் பார்த்தவர்கள் நிறைய குறைகள் சொல்வதற்கு காரணமும் அதுதான். படத்தின் கதையை விட்டுவிட்டார்கள். 

என்னுடைய கதைக்காக நிறைய ஆராய்ச்சி எல்லாம் செய்திருக்கிறேன். அதற்காக உதாரணத்துடன் என்னால் நிரூபிக்க முடியும். நான் 'ஐநா'வில் வேலை பார்த்தவன். அங்க நடந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ஒரிஜினல் கதையாக ரெடி பண்ணியிருந்தேன். அந்தக் கதையை என்னிடம் கேட்டு லீகலாக எடுத்திருந்தாலே படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைச்சிருக்கும். என்னுடைய வருத்தமே அதுதான். கதையைச் சாகடித்து விட்டார்கள். என்னுடைய கதையில் அக்‌ஷரா ஹாசன் நடித்த நட்டாஷா கதாபாத்திரம்தான் மெயின் கேரக்டர். அதை ஒரு ஆண் கேரக்டராக வைத்திருந்தேன். 

கண்டிப்பாக என்னுடைய கதை 'ஐநா' வை பண்ணுவேன். இந்தக் கதை ரியல் ஸ்டோரி.  இந்தக் கதைக்கு பெரிய ஹீரோ நடித்தால் நன்றாகயிருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். இனி இந்தக் கதையை பெரிய ஹீரோ யாரிடமாவது சொன்னால், 'விவேகம்' படத்தின் காப்பி என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், என் கதையைத்தான் 'விவேகம்' படத்தில் காப்பி செய்திருக்கிறார்கள் என்று சொல்லத்தான் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன்'' என்று வருத்தத்துடன் கூறினார் ரவீந்தர் சந்திரசேகரன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க