Published:Updated:

'காலா' ஷூட்டிங்... ஜீப் ஏறியதில் அருள்தாஸ் காலில் காயம்!

எம்.குணா
'காலா' ஷூட்டிங்... ஜீப் ஏறியதில் அருள்தாஸ் காலில் காயம்!
'காலா' ஷூட்டிங்... ஜீப் ஏறியதில் அருள்தாஸ் காலில் காயம்!

தமிழ் சினிமா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'காலா'. மும்பை தாராவியில் நடக்கும் சம்பவங்கள்தான்  ‘காலா’ கதையின் முக்கியமான உயிர்நாடி. அங்கே படப்பிடிப்பு நடந்தபோது கூட்டம் அலை மோதியதால், ரஜினி நடிக்கும் காட்சிகளைப் படமாக்க இயக்குநர் ரஞ்சித் சிரமப்பட்டார். அதனால்மும்பை தாராவியைப் போலவே சென்னை பூந்தமல்லி அருகில் இருக்கும் ஈ.வி.பி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏராளமான ஃபெப்சி தொழிலாளர்களும், ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் பணியாற்றி வருகின்றனர்.

ரஜினியுடன்  நானே படேகர், சமுத்திரக்கனி, சாயாஜி ஷிண்டே, சம்பத், திலீபன், அருள்தாஸ்... இப்படி ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. இவர்களில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான அருள்தாஸ், 'நான் மகான் அல்ல', 'பாபநாசம்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். இவருக்கு 'காலா' படத்தில் ‘தாதா’ ரஜினிக்கு பக்கபலமாக இருக்கும் வெயிட்டான கேரக்டர்.

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பின் போது அருள்தாஸின் காலில் ஜீப் ஏறியதில் அவருக்கு பலத்த அடிபட்டு இருக்கிறது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அருள்தாஸ் தற்போது தொடர்ந்து சிகிச்சையில்தான் உள்ளார். அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அவரிடம் பேசினேன்.

''கடந்த 13-ம்தேதி இரவு நடந்த 'காலா' பட ஷூட்டிங்கில்  பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் ரஜினி சார் ஜீப்பில் வருவது போலவும், அந்த ஜீப்புக்கு முன்பாக நாங்கள் டான்ஸ் ஆடுவது போலவும் அமைந்த காட்சியை இயக்குநரும் டான்ஸ் மாஸ்டரும் படமாக்கிக் கொண்டு இருந்தனர். நடனம் ஆடும்போது  திடீரென எனது கால் இடறி, கீழே விழுந்துவிட்டேன். இருட்டு நேரம் என்பதால் நான் விழுந்ததை கவனிக்காத டிரைவர், என்இடதுகாலில் ஜீப்பின் டயரை ஏற்றிவிட்டார்.  கால் விரல்களின் மேல் டயர்  ஏறியதால் வலியால் துடித்தேன். உடனடியாக யூனிட் ஆட்கள் என்னை ஸ்டுடியோ அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைபெற வைத்தனர். இடது காலின் மூன்று விரல்களில் காயம் ஏற்பட்டது. ஒரு விரலில் மட்டும் ஃப்ராக்ஸர்.  அதனால் காலில் பெரிய மாவுக்கட்டு போட்டனர். 

பூந்தமல்லியிலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தேன். இடையில் ஒருநாள் தேனி சென்று  மாவு கட்டை அகற்றிவிட்டு அங்குள்ள நாட்டு மருத்துவரிடம் எண்ணெய் பூசி கட்டுபோட்டுக்கொண்டு சென்னைக்கு திரும்பினேன். தற்போது சாலிகிராமத்தில் உள்ள என் வீட்டிலேயே ஒய்வுபெற்று வருகிறேன். இப்போது  என்னால் ஓரளவு நடக்க முடிகிறது.

கடந்த 27-ம்தேதியில் இருந்து மீண்டும் 'காலா' படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். படத்தில் ரஜினி சாரின் பக்கத்தில் இருப்பவர்களில் நானும் ஒருவன். இதுவரை எத்தனையோ படங்களில் நடித்து விட்டேன்' 'காலா' படத்தில் ரஜினி சாருடன் நடிப்பதால் என்முகம்  உலகம்  முழுக்க சென்றடையும் என்று நினைக்கும்போது காலில் ஏற்பட்ட காயத்தின் வலி பெரிதாக தெரியவில்லை" அருள்தாஸின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. 

எம்.குணா