Published:Updated:

பெண்ணாக மாறும் சிவப்பு ஆமையின் கதை! #TheRedTurtle

சுரேஷ் கண்ணன்
பெண்ணாக மாறும் சிவப்பு ஆமையின் கதை! #TheRedTurtle
பெண்ணாக மாறும் சிவப்பு ஆமையின் கதை! #TheRedTurtle

இந்த ஆண்டில் ஆஸ்கர் விருதின் நாமினேஷன் பட்டியலில் இருந்த அனிமேஷன் திரைப்படம் The Red Turtle. கான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. சற்று முதிர்ச்சியான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது என்றாலும் சிறுவர்களும் நிதானமாக அமர்ந்து பார்க்க வேண்டிய திரைப்படம். மனித குலம் பரிணாமம் அடைந்த விதத்தைக் கவிதைக் கணங்களாக ரீவைண்ட் செய்து சித்திரிக்கும் படைப்பு இது. 

மனிதகுலம் இன்று, எத்தனையோ வகையான விஷயங்களைக் கடந்து நாகரிக உலகை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்து கொண்டிருந்தாலும், இன்று ஒரு மனிதன் தனிமையான தீவில் சிக்கிக் கொண்டால் என்னவெல்லாம் ஆகும்? ஆதிமனிதனைப் போலவே ஒவ்வொரு விஷயத்தையும் அவன் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ‘எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு’ முதலில் இருந்து தொடங்குவதுபோல் அந்த வாழ்க்கையும் கண்டுபிடிப்புகளும் அமையும்.

அதுபோன்றதொரு ‘மறுகண்டுபிடிப்பு’ திரைப்படம் இது. வசனமே இல்லாத இந்தத் திரைப்படம் அற்புதமான இயற்கைக் காட்சிகளையும் நெகிழ்வான சம்பவங்களையும் கொண்டது.

அவன் யாரென்று நமக்குத் தெரியாது; எங்கிருந்து வருகிறான் என்பதும் தெரியாது. கடலில் பயணம் செய்து கொண்டிருந்த அவன் எப்படி விபத்தில் சிக்கினான் என்கிற விவரங்கள் எல்லாம் நமக்குத் தெரியாது. இளைஞனான அவன் கடல் அலைகளில் சிக்கித் தவிக்கிறான். உயிருக்காக பெரும்போராட்டத்தை நிகழ்த்துகிறான். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது, தான் கரையில் ஒதுங்கி உயிர் தப்பியிருப்பதை உணர்கிறான்.

அதுவொரு தீவு. மனித வாசனை எதுவுமே அங்கு இருப்பது போல் தெரிவதில்லை. மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் காடு ஒன்று பின்னணியில் இருக்கிறது. கடற்கரையில் சிறிய நண்டுகள் ‘தத்தக்கா பித்தக்கா’ என்று ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைத் தவிர அந்தப் பிரதேசத்தில் வேறு எதுவுமே இருப்பது போல் தெரியவில்லை.

அந்த மனிதன் திகைத்து நிற்கிறான். என்ன செய்வதென்று புரியவில்லை. இங்கிருந்து எப்படி தப்பிப்பது? அந்த இடத்தின் ஒவ்வோர் அசைவும் அவனைப் பயமுறுத்துகிறது. எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கிறான். மரத்திலிருக்கும் விநோதமான காய்களைப் பறித்து பசியைப் போக்குகிறான். நல்ல நீர் தேடி அருகிலிருக்கும் குட்டை ஒன்றைக் கண்டுபிடிக்கிறான். மலையிலிருந்து ஒரு ரகசிய பள்ளத்திற்குள் சறுக்கி விழுந்து தவித்துப் போய் பிறகு பாறை இடைவெளியின் வழியாக உயிர் தப்பி வருகிறான். 

அங்கிருந்து தப்பிச் செல்ல, மிகுந்த சிரமத்துடன் மூங்கில் கொம்புகளைக் கொண்டு படகை அமைக்கிறான். ஆனால், அந்தப் படகைக் கொண்டு அவன் கடலில் சிறிது தூரத்தைக் கடந்தவுடன் ஏதோவொன்று மோதி படகு சுக்கல் சுக்கலாக உடைந்து சிதறுகிறது. 

இதுபோல் ஒரு முறையல்ல. அவன் தப்ப முயற்சிக்கும் மூன்று முறைகளிலும் இது போலவே நடக்கிறது. திகைத்துப் போகும் அவன், தான் தப்பிச் செல்வதை எவரோ விரும்பவில்லையென்பதை உணர்கிறான். பிடிவாதமாக நான்காவது முறையும் தப்பிக்கும் போது படகின் அடியில் ஒரு சிவப்பு நிற ஆமை வருவதைக் காண்கிறான். இப்போதுதான் படகு உடைந்த ரகசியம் அவனுக்குத் தெரிகிறது. 

சிவப்பு ஆமையைத் தாக்க முயல்கிறான். ம்..ஹூம். முடியவில்லை. ஆமை படகைத் தாக்குகிறது. படகு உடைந்து மறுபடியும் தீவிற்குச் செல்ல வேண்டிய நிலைமை. 

ஒரு சமயத்தில், அந்த ஆமை கரையை நோக்கி வருவதைப் பார்க்கிறான். அவனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. மூங்கில் கொம்பு கொண்டு ஆமையின் தலையில் ஓங்கி அடிக்கிறான். அப்போதும் கோபம் தீராமல் ஆமையைப் புரட்டிப் போடுகிறான். ஆமையை அப்படிப் போட்டால் அதனால் எங்கும் நகர முடியாது. 

ஆமையை அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறான். ஆனால் சிறிது நேரத்தில் அவனுடைய மனம் இரங்குகிறது. அதை எழுப்புவதற்காக முயற்சிக்கிறான். அது அசையவேயில்லை. 

ஒரு நாள் – அந்த ஆமை, பெண்ணுடலாக மாறியிருப்பதை திகைப்புடன் பார்க்கிறான். பிறகு என்னவாகிறது? ஆமையாக இருந்து பெண்ணுடலாக மாறிய அவள் யார்? அங்கிருந்து அவன் அல்லது அவர்கள் தப்பித்தார்களா? என்பதையெல்லாம் நிதானமான சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

 The Red Turtle பிரெஞ்ச்-பெல்ஜியம்-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பு. Michaël Dudok de Wit என்கிற டச்சு இயக்குநர் உருவாக்கிய திரைப்படம்.

இந்த அனிமேஷன் படத்தில் சித்திரிக்கப்படும் இயற்கைக் காட்சிகள் நம்மை முதலில் கவர்கின்றன. பிரம்மாண்டமான அந்தக் கடல் விதவிதமான வண்ணங்களால் பிரமிப்பூட்டுகிறது. இரவுக்காட்சிகளில் நிலவின் பின்னணியில் கடல் அற்புதமாக ஜொலிக்கிறது. கடற்கரை முழுதும் சிறுபிள்ளைகள் போல் ஓடித்திரிந்து குறும்புகள் செய்யும் நண்டுகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. 

சுனாமி வரும் காட்சியொன்று அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு முன்னால் மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கின்ற மரங்களையெல்லாம் ஆழிப்பேரலை அடித்துச் செல்கிறது. 

மகிழ்ச்சி, துக்கம், பிரிவு, தத்துவம், மரணம், அன்பு என்று மனிதகுலம் எதிர்கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளையும் இந்தப் படம் காட்டுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, பெண் மீண்டும் ஆமையாகி நகரும் காட்சி மிக உருக்கமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

முக்கியமான தருணங்களில் ஒலிக்கும் அபாரமான பின்னணி இசை நம்மைக் கவர்கிறது.  சற்று நிதானமாக நகரும் திரைப்படம்தான் என்றாலும் பொறுமையாகப் பார்த்தால் இந்த அனிமேஷன் திரைப்படம் நமக்குள் செய்யும் மெல்லிய மாற்றங்களை நிச்சயம் உணர முடியும். 

ஆதி மனிதனை அனிமேஷன் வடிவில் பார்க்கும் ஓர் அரிய சந்தர்ப்பத்தை இந்தத் திரைப்படம் சாத்தியமாக்குகிறது. வரைகலை நுட்பமானது, சாகசகமாக அல்லாமல் காட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிதானத்துடன் கையாளப்பட்டுள்ளது. 

சுரேஷ் கண்ணன்