’’டி.ஐ.ஜி ரூபா ரோல்ல நயன்தாரா (Or) அனுஷ்கா நடிப்பாங்க..!'' - `வனயுத்தம்' இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டினார். இதனால், ரூபா சிறைத்துறையிலிருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ரூபாவை மையமாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாக குப்பி, காதலர் குடியிருப்பு, வனயுத்தம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார். படத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக ரமேஷிடம் பேசினோம்.

இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ்

''என்னுடைய படங்கள் முழுவதும் உண்மை சம்பவத்தை வைத்துதான் இருக்கும். அந்த வகையில் 'வனயுத்தம்' திரைப்படம் பண்ணும்போது அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் செய்தி சேகரிக்க சென்றிருக்கிறேன். அதனால், ஜெயிலில் நடக்கும் சில காரியங்கள் பற்றி தெரியும். மேலும், எனக்கு அனைத்துச் சிறைச்சாலையில் இருக்கும் அதிகாரிகளுடன் பழக்கம் உண்டு. அவர்களிடமெல்லாம் விசாரிக்காமல், ஒரு படத்தை இயக்க மாட்டேன். 'வனயுத்தம்' திரைப்படத்துக்காக பெங்களூரு, டெல்லி சிறைச்சாலைகளுக்கு சென்றேன். பல கிரிமினல்களையும் நேர்காணல் செய்திருக்கிறேன். படத்தின் உண்மைத் தன்மைக்காக 'வனயுத்தம்' படத்தின்போது வீரப்பன் கூட்டாளிகளைச் சிறையில் பேட்டி எடுத்தேன். 

சசிகலா சம்பந்தமாக சிறையில் இருக்கும் எல்லா அதிகாரிகளிடமும் விசாரித்து வருகிறேன். ரூபா மேடமிடம் பேசிகொண்டுதான் இருக்கிறேன். ஆதாரம் இல்லாமல் படத்தை எடுக்க மாட்டேன். யாருக்கும் ஆதரவாகவும் பேச மாட்டேன். ரூபாவின் சின்ன வயது விஷயங்களிலிருந்து எல்லாவற்றையும் சேகரித்து வருகிறேன். அவர் பள்ளியில் படிக்கும்போது எல்லாவற்றிலும் முதல் மாணவியாக இருந்துள்ளார். மெரிட் ஸ்டூடன்ட்டும்கூட.

roopa

என் படங்களில் பயன்படுத்தப்படும் பெயர்கள்கூட உண்மையான பெயர்களாகத்தான் இருக்கும். செந்தாமரை கண்ணன், வீரப்பன், நடிகர் ராஜ்குமார், ஐபிஎஸ் விஜயகுமார் என்றால் அதே பெயரைத்தான் படத்திலும் பயன்படுத்தினேன். அதே மாதிரிதான் இந்தப் படத்திலும் ரூபா, சசிகலா என்ற பெயரைப் பயன்படுத்துவேன்’’ என்றவர் இந்தப் படத்தை எடுப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்.

’’சசிகலா வெளியே சென்றுவந்தார் என்று தெரிந்தவுடனே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். சசிகலாவை வெளியே பார்த்தவர்கள்கூட என்னிடம் சொன்னார்கள். படத்தில் இதையெல்லாம் சொல்வேன்.  இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ரூபா கதாபாத்திரத்தில் நயன்தாரா, அனுஷ்கா நடித்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், இதுபற்றி அவர்களிடம் இன்னும் பேசவில்லை. சசிகலா கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். படத்துக்கான பெயர் இன்னும் முடிவுசெய்யவில்லை. கன்னடம் மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தை  என்னுடைய சொந்தத் தயாரிப்பில்தான் தயாரிக்கப் போகிறேன்'' என்று கூறினார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!