``எல்லோரையும் இயற்கைக்கு மாற்றுவோம்!''- `ஜல்லிக்கட்டு' ஆரி இப்போ 'விவசாயி' ஆரி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் களத்தில் நின்ற நடிகர் ஆரி தற்போது 'நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளார். எல்லோரும் விவசாயிகளாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு நேற்று கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுவதற்காக ஆரியைத் தொடர்புகொண்டோம்.

aari

''மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையுடன் இணைந்து, சத்ய பாமா நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் டிரான்ஸ் இந்தியா சேர்ந்து 'நானும் ஒரு விவசாயி' நிகழ்ச்சியை திண்டிவனம் அவனிபூரில் நடத்தியிருக்கோம். 'உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷமாகி'விட்டது. இதற்குக் காரணம் வியாபாரக் கையில் விவசாயம் போனதனால்தான். நமக்கான ஆரோக்கியத்தை நம்மலே உருவாக்குவதற்காகப் பாரம்பர்ய விவசாயத்துக்கு நாம் எல்லோரும் செல்ல வேண்டும். பூச்சிக்கொல்லி வேண்டாம், பூச்சிவிரட்டிபோதும் என்பதுதான் எங்கள் கொள்கை. நாட்டு விதைகளை விதைத்து விவசாயம் செய்வோம். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தாய் விதை இருக்கு. நாட்டு விதைகள் 80 சதவிகிதத்துக்கு மேல் அழிந்துவிட்டது. 

சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்களிடம் சுத்தமாக இல்லை. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி... இதையெல்லாம் சொன்னாலே இவையெல்லாம் ஏழைகள் சாப்பிடுகின்ற உணவுகள் என்று தள்ளிவைக்க ஆரம்பித்துவிடுகின்றனர். பணக்காரர் சாப்பிடுகிற உணவுகள் பீட்சா, பர்கர் என்ற நிலையில் உள்ளனர். வறுமையை ஒழிப்பதாக நினைத்துவிட்டு, பாக்கெட்டில் இருக்கும் காசையும் நம்மையும் தொலைத்துவிட்டு நிற்கிறோம். ஒரு கிலோ அரிசி உற்பத்தியாக 4,500 லிட்டர் மறைநீர் தேவைப்படும். ஆனால், சிறுதானியங்களுக்கு 150 லிட்டர் தண்ணீர் இருந்தால்போதும். அதுமட்டுமல்லாமல் சிறுதானியங்கள் மட்டும்தான் நம் நாட்டில் ஆர்கானிக் முறையில் வளரும். இயற்கையான முறையில் வளரும். அது சார்ந்த விழிப்புஉணர்வைதான் நாங்கள் ஏற்படுத்தியிருக்கோம். இதைச் சாப்பிட மக்களையும் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

aari

அதனால்தான் இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 5,000 பேரும் நாட்டு விதைகளை விதைத்தோம். அவனிபூரில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் எங்களுக்காக நிலம் கொடுத்தது. முப்பது ஏக்கர் நிலம் இருந்தது. அதில் நான்கு ஏக்கர் நிலத்தில் நாட்டு விதைகள் விதைத்தோம். இதில் கலந்துகொண்டவர்களில் 80 சதவிகிதம் விவசாயிகள் கிடையாது. ஆனால், எல்லோரையும் விவசாயிகளாக மாற்ற வேண்டும். ஏனென்றால் பாமரன் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் உணவுத் தேவை உண்டு. டாக்டர், இன்ஜினீயர் படித்தால் மட்டுமே போதாது. வெளிநாடுகளில் பார்த்தால் விவசாய வாழ்க்கை முறை அவர்களின் கல்வியல் முறையில் இருக்கும். அதைத்தான் நம் நாட்டில் பின்பற்ற வேண்டும். 

பலர் மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. தண்ணீர்கூட பாட்டிலில் நாங்கள் கொடுக்கவில்லை. ஏனென்றால் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புஉணர்வும் மக்களிடம் வரவேண்டும். கலந்துகொண்டவர்களுக்கு சிறுதானியத்தால் சமைக்கப்பட்ட உணவுகளைத்தான் கொடுத்தோம். இந்த நாட்டு விதை விவசாயத்தை நாம் வீட்டிலிருந்தே செய்யலாம். நாட்டு விதைகள் வீட்டிலேயே விதைக்கலாம். அந்த விழிப்புஉணர்வைதான் இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்தினோம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு இது இல்லை. அனைவரும் விவசாயத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கான நிகழ்வுதான் இது’’ என்றார் ஆரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!