''சவாலான படங்களுக்கு மட்டும்தான் இசையமைப்பேன்..!’’ - வித்யாசாகர்

மெலடி பாடல்களால் மனதை வருடுவதும், அதிரடிப் பாடல்களால் துள்ளல் ஆட்டம் போட வைப்பதும் இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு கைவந்த கலை. விஜய், அஜித், ரஜினி, கமல் எனப் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தவர். சற்று இடைவெளிக்குப் பிறகு, 'திருட்டுப்பயலே 2' படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கும் வித்யாசாகரைத் தொடர்புகொண்டு பேசினோம். நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மெட்டுக்கட்டி பதில் சொல்கிறார் வித்யாசாகர். 

வித்யாசாகர்

’’சமீபத்தில் எந்தத் தமிழ் பாடல்களையும் நான் கேட்கவில்லை. கேட்ட வரைக்கும் ஒன்று நன்றாகத்தான் தெரிந்தது. மக்களின் ரசனை மாறியிருக்கிறது. அதாவது, பலகாரங்களும் மாறியிருக்கிறது. சாப்பிடுறவங்களும் மாறியிருக்காங்க. எல்லோரும் ஒரு புதிய இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். எல்லோருடைய பயணமும் அப்படிதான் இருக்கு. இதை ஆரோக்கியமானதாக இருக்குனு சொல்ல முடியாது. ஒரு புதுமையைத் தேடி போய்க்கிட்டிருக்காங்க’' என்றவர், 'திருட்டுப்பயலே 2' படத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

'' ‘திருட்டுப் பயலே 2’ படத்துக்கு முன்பாகவே, சில தமிழ் படங்களுக்கு இசையமைக்கச் சொல்லி என்னிடம் கேட்டார்கள். ஆனால், எனக்கு ’திருட்டுப் பயலே2’ படத்தின் கதை பிடித்திருந்தது. அதனால் பண்ணினேன். அதுமட்டுமில்லாமல், சில மலையாள படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தேன். சவாலாகயிருக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைக்கலாம் என்று இருந்தேன். ஏனென்றால், பணம் நிறைய சம்பாதித்து விட்டேன். அதனால்தான் இந்த கேப். 'திருட்டுப் பயலே 2' படத்தின் பாடல்கள் நன்றாகயிருக்கும். கேட்டால் எல்லோருக்கும் பிடிக்கும்'' என்றவரிடம், ’இந்த ட்ரெண்டை விட்டு நீங்கள் தள்ளி இருப்பதாக தோன்றுயிருக்கிறதா என்று கேட்டதற்கு, ‘‘என்னுடைய ஸ்டைல் எப்போதும் இருக்கும். என்னுடைய தனித்துவத்தை எந்த நிலையிலும் விடாமல், அதைக் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன். எப்போதும் புதுமைக்காகப் புதுமை செய்யக்கூடாது. அது தானாக அமைய வேண்டும். தற்போது ட்ரெண்டில் இருக்கும் எந்தப் பாடலையும் நான் கேட்கக்கூட இல்லை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!