Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“பூனையாக இருந்த ஃபெப்சியைப் புலியாக்கி விட்டனர்!” - கொதிக்கும் ஆர்.கே.செல்வமணி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ‘திரைப்படப் படப்பிடிப்பில் வேலைசெய்ய ஆள்கள் தேவை' என விளம்பரம் செய்ததைப் பார்த்து ஃபெப்சி அமைப்பு கொந்தளித்துவிட்டது. திடீரென ஃபெப்சி சம்மேளனம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால், ரஜினியின் `காலா', விஜய்யின் `மெர்சல்', சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்பட 40 படங்களின் படப்பிடிப்புகள் நின்றுவிட்டன. அதுமட்டுல்ல, ஒருநாள் வேலை நிறுத்தத்தால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினோம்...

செல்வமணி

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பின்மீது சில கோரிக்கைகள் வைத்திருந்தனர். கடந்த ஐந்து மாதங்களில் அவர்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எங்கள் அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களிடம் இன்றைய சூழ்நிலையை எடுத்துக் கூறி, அவர்கள் பெற்றுவந்த சலுகைகளைக்கூட விலக்கிக்கொண்டோம். தயாரிப்பாளர் கவுன்சில் கொடுத்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கான சம்பளப் பட்டியலைக்கூட 60 சதவிகிதம் ஒப்புக்கொண்டோம். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதைக் குறையாகச் சொல்லவில்லை, ஆதங்கமாகத்தான் சொல்கிறோம்.

திரைப்படத் துறைக்கு என்ன நோய்  இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை தராமல், வேறோரு நோய்க்கான மருந்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக தொழிலாளர்கள் யூனியன் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகின்றனர். அப்படி இவர்களால் ஏற்படுத்தப்படும் தொழிலாளர்கள், சம்பளம் வாங்காமலேயே வேலை பார்ப்பார்களா? ஃபெப்சி தொழிலாளர்கள் நிர்வாகத்தில் குளறுபடி நடந்தவற்றில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வகையில் பங்கு இருக்கிறது. நான் தவறே நடக்கவில்லை எனக் கூறவில்லை. இப்போது நாங்கள் ஃபெப்சி அமைப்பில் ஓர் ஒழுக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். எந்த அமைப்பும் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை அமைத்திருக்கிறோம். ஆளாளுக்கு நாட்டாமை செய்யக் கூடாது. திடீரென படப்பிடிப்பை நிறுத்தக் கூடாது என்று ஒழுங்கு நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். 

‘தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விரும்பும் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம்' என்று ஏற்கெனவே நாங்கள் அறிவித்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் `சினிமா தொழிலாளர்கள் வேலைக்கு ஆள்கள் தேவை' என அதிகாரபூர்வமாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளர், படப்பிடிப்பை தனியாக நடத்தட்டும். ஆனால், ஓர் அமைப்பே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவது எந்த வகையில் நியாயம்? தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் ஃபெப்சி அமைப்பும் கடந்த 50 ஆண்டுகளாக இணைந்து வேலைசெய்துவரும் வேளையில், இந்த அறிவிப்பு இருவரிடமும் பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு கேமராமேன் ‘அந்த லைட்டை மாற்று’ என்றுதான் சொல்வார். அவர் எந்த லைட்டை மாற்றச் சொல்கிறார் என்பது அந்த லைட்மேனுக்கும் மட்டுமே தெரிந்த தொழில் நேர்த்தி. ஓர் இயக்குநர், உதவி இயக்குநரிடம் ‘அதை எடு’ என்றுதான் சொல்வார் எந்தப் பொருளை எடுத்துத் தரவேண்டும் என்பது உதவி இயக்குநருக்குத் தெளிவாகத் தெரியும். இந்தத் தொழில் அனுபவம் நீங்கள் புதுசாக வேலைக்குச் சேர்க்கும் தொழிலாளிகளுக்கு உடனே வந்துவிடாது. இந்த உண்மை எதுவும் தெரியாமல், ஏதோ எடுத்தேன்... கவிழ்த்தேன் என எதிலும் செயல்படக் கூடாது.

சினிமா படப்பிடிப்புத் தளத்தில் தயாரிப்புத் தரப்பினர் ஒருசிலர் இருப்பார்கள். அங்கே நூறு தொழிலாளர்கள் வேலைபார்க்கும்போது மெஜாரிட்டி அதிகமாக இருப்பதால் அவர்கள் மாஸ் காட்டுவதற்கு முற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதே சமயம் ஆயிரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும் காவலர் சீருடை அணிந்த ஒரே ஒரு போக்குவரத்து போலீஸ் நின்றால், அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார்கள். அதுபோலத்தான் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் இருந்தால் அனைத்து தொழிலாளர்களும் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். ஒரு தவறும் நடக்காது.

ஃபெப்சி

ஆனால், தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பில் இருப்பதில்லை. தன்னுடைய பொறுப்பாளராக ஒருவரை நியமித்துவிட்டு, பணம் புரட்டும் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். ஃபெப்சி அமைப்பு, சம்பளத்துக்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறது. இப்போது நடப்பது சம்பள உயர்வு கேட்டு நடத்தும் போராட்டம் அல்ல. நாங்கள் எங்கள் உரிமையை விட்டுக்கொடுத்திருக்கிறோம். இப்போது சம்பளத்தைக் கொடுத்துவிட்டு எங்களை அழிக்கப்பார்க்கிறார்கள். மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதுபோல் ஊற்றிவிட்டு, கோடரியைக்கொண்டு மரத்தின் ஆணிவேரை வெட்டும் வேலையைச் செய்கிறது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஃபெப்சி அமைப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கே வேலை கொடுக்க முடியவில்லை. இன்னோர் அமைப்பை உருவாக்கி ஃபெப்சி தொழிலாளர்களை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஒருநாள் வேலைநிறுத்தத்தால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பள இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நாற்பது படங்களின் படப்பிடிப்புகள் நின்றுபோய்விட்டன. எல்லா தயாரிப்பாளர்களும் எனக்கு போன் போட்டுக் கேட்கிறார்கள். `காலா' தயாரிப்பாளர் தனுஷ்கூட பேசினார். `என்னிடம் கேட்கும் கேள்வியை, தயாரிப்பாளர்கள் சங்கத்திடமும் கேளுங்கள்' எனச் சொன்னேன்.  ஃபெப்சியை  அழைத்துப் பேசுங்கள்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி அமைப்பை அடியோடு அழிக்கும் எண்ணத்தில் செயல்படுகிறது. ஃபெப்சி, தான்செய்த தவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறது. அதே சமயம் அழிக்க வேண்டும் என நினைத்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. பொதுவாக வீட்டில் இருக்கும் எல்லா கதவுகளையும் மூடினால் பூனை கூட புலியாக மாறி பாய்ந்துவிடும். ஏற்கெனவே புலியாக இருக்கும் தொழிலாளர்களை , கடந்த ஐந்து மாதங்களாக நான் சமாதானம் செய்து அடக்கிவைத்திருக்கிறேன். இனிமேலும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. இனிமேல் எந்தச் சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை.” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்