வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (05/09/2017)

கடைசி தொடர்பு:20:15 (05/09/2017)

``ஸ்கூல் குழந்தைகளுக்கு நான் நடிகைனு தெரியாது!'' - தேவயானியின் டீச்சர் அனுபவம்

பள்ளிப் பருவ காலத்தில் மறக்க முடியாத நினைவுகள் அதிகமாகயிருக்கும். அதிலும், நம்முடன் நம்மை வழிநடத்தி சென்ற ஆசிரியர்களை யாராலும் மறக்க முடியாது. நம்மைக் கண்டித்த ஆசிரியராக இருக்கட்டும், அரவணைத்த ஆசிரியராக இருக்கட்டும் அனைவரையும் நினைக்கும்போது மலரும் நினைவுகள் அதிகமாகத்தான் தென்படும். முகநூலில் இருக்கும் பலரும் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்கள் ஆசிரியரின் பெயரையும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் வேளையில், திரைத்துறையிலிருந்து பள்ளிக்கு ஆசிரியராகச் சென்ற நடிகை தேவயானியிடம் ஆசிரியர் தினம் பற்றிப் பேசினோம்.

தேவயானி

''சினிமா எனக்குப் பிடிக்கும். நடிப்பது எப்போதும் வேண்டாமென்று சொல்லமாட்டேன். ஆனால், எனக்கு சினிமா பிடித்தது போலவே டீச்சர் வேலையும் மிகவும் பிடிக்கும். என்னிடம் இருந்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய இடைவெளியிருந்தது. அப்போதுதான் சர்ச் பார்க் ஸ்கூலில் டீச்சராக வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது நான் ஆசிரியராக இல்லை. சிறிது காலம் மட்டுமே அங்கு டீச்சராகப் பணிபுரிந்தேன்

ஆசிரியர் வேலை மிகவும் மகத்தான வேலை. அதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு வேண்டும். 24 மணி நேரமும் நம்மிடம் படிக்கும் குழந்தைகளைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். சின்ன வயதிலிருந்தே எனக்கு டீச்சர் வேலை பிடிக்கும். ஒருவேளை நடிக்க வரலைன்னா டீச்சராகப் போயிருப்பேன். சின்ன குழந்தைகளுக்குதான் டீச்சராக ஒர்க் பண்ணினேன். அவர்களிடம் பேசுவது, பழகுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது என எல்லாமே நன்றாகயிருக்கும். எப்போதும் என்னைச் சுற்றி தேவயானி மிஸ் என்றுதான் வருவார்கள். 

கொஞ்ச காலம் டீச்சராகயிருந்தாலும், எங்கே பார்த்தாலும் அவர்களுக்கு நான் மிஸ்தான். அவர்களுக்கு நான் நடிகை என்பது தெரியாது. ரொம்ப நன்றாகயிருந்தது நான் டீச்சராகயிருந்த நாள்கள். எங்கே பார்த்தாலும் எனக்கு விஸ் பண்ணுவாங்க. ரொம்ப நைஸ் ஃபீலீங்ஸ் அது. இப்போதும்கூட என் குழந்தைகளுக்கு நான்தான் படிப்பு சொல்லித் தருவேன். தினமும் ஸ்கூலில் கொண்டுபோய் விடுவேன்'' என்றவரிடம் அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத டீச்சர் பற்றிக் கேட்டோம்.

''நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது, கணக்கு சுத்தமாகப் பிடிக்காது. அப்போது எனக்கு டியூசன் டீச்சர் ஒருத்தர் இருந்தாங்க. அவங்க என்னை அடிக்காமல் எனக்குப் புரியும்படி சொல்லிக்கொடுப்பாங்க. அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தற்போது என் குழந்தையின் டீச்சர்கள் பலரையும் பார்க்கும்போதுகூட எனக்கு அவர்கள் எல்லோரும் நினைவுக்கு வருவார்கள். திரும்பவும் ஆசிரியராக ஆகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அந்த வேலையைச் செய்வேன்'' என்று முடித்தார் தேவயானி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்