வேலைக்காரன் முதல் வீரா வரை..! - பூஜை விடுமுறைக்கு படையெடுக்கும் படங்கள் | These are the movies will release on pooja holidays

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (06/09/2017)

கடைசி தொடர்பு:10:27 (06/09/2017)

வேலைக்காரன் முதல் வீரா வரை..! - பூஜை விடுமுறைக்கு படையெடுக்கும் படங்கள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விடுமுறை தினத்திற்கு அதிகப்படங்கள் வருவது வழக்கம். அந்த வரிசையில் இந்த மாத இறுதியிலும், அடுத்த மாத தொடக்கத்திலும் வரவிருக்கிற நான்கு நாள்கள் தொடர் விடுமுறையை குறிவைத்து பல படங்கள் ரிலீஸாகின்றன. அந்தப் படங்கள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வேலைக்காரன்:

தனிஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் வேலைக்காரன் பட வேலைகளில் இறங்கினர். நயன்தாரா, பஹத் பாசில், அனிருத், ராம்ஜி என பக்கா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 24AM STUDIOS சார்ப்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். வேலைக்காரன் படம் வெளிவருவதற்கு முன்பே அதன் சாட்டிலைட் உரிமம் அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டது. பூஜை விடுமுறையை குறிவைத்து ரெடியாகிவரும் இந்தப் திரைப்படம் சில காரணங்களுக்காக தள்ளிப்போகலாம் என தகவல்கள் வந்தாலும், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனவே இந்த பூஜை விடுமுறைக்கு வேலைக்காரன் படத்தை எதிர்ப்பார்க்கலாம்.

அறம்:

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் திரைப்படம் அறம். ஹீரோ இல்லாமல் ஹீரோயினுக்கு அதிகம் முக்கியத்துவம் கொண்ட இந்தத் திரைப்படம் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. வேலைக்காரன் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸானால், நயன்தாராவின் கெரியரில் இரண்டு முக்கியமான படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

கருப்பன்:

ரேணிகுண்டா படத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம், விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் திரைப்படம் கருப்பன். கிராமத்து பின்னணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பூஜை விடுமுறையை குறிவைத்துதான் இந்தப் படக்குழுவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்தப் படம் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளிவந்தால் ரெமோ-றெக்க படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி படமும் சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸாகும்.

சர்வர் சுந்தரம்:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு என வரிசையான ஹீரோ வேடத்தில்தான் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் சர்வர் சுந்தரம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படமும் செப்டம்பர் 29ஆம் தேதிதான் ரிலீஸாகவுள்ளது. பூஜை விடுமுறைக்கு காமெடி விருந்தை பரிமாற வருகிறார் சர்வர் சுந்தரம்.

செம போத ஆகாத:

பாணா காத்தாடி படத்தின் மூலம் அதர்வாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், மீண்டும் அதர்வாவோடு கைகோத்திருக்கும் படம்தான் செம போத ஆகாத. அதர்வா, மிஷ்டி, அனைகா, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதர்வா தயாரித்து, நடிக்கும் இந்தப் படம், செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறுகிறார்கள்.

வீரா:

ராஜாராமன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஐஷ்வர்யா மேனன், கருணாகரன், யோகி பாபு நடித்திருக்கும் திரைப்படம் வீரா. இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தையும் பூஜை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பட்டிகை திரைப்படம் வெளியானப்பிறகு கிருஷ்ணாவின் அடுத்தப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யுமா என்று பார்ப்போம்.

இந்த லிஸ்ட்டில் இருக்கும் படங்கள் பூஜை விடுமுறைக்கு ரிலீஸாகாமல் தள்ளிவும் போகவும், இன்னும் சில படங்கள் இந்த லிஸ்ட்டில் சேரவும் வாய்ப்பு இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close