'அஜித்திடம் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கிறது..!' - விவரிக்கும் இயக்குநர் சிங்கம்புலி | Actor Singam puli speaks about Ajith

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (06/09/2017)

கடைசி தொடர்பு:16:52 (20/10/2017)

'அஜித்திடம் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கிறது..!' - விவரிக்கும் இயக்குநர் சிங்கம்புலி

யக்குநராகும் கனவோடு தமிழ் சினிமாவுக்கு வந்து அஜித்தை வைத்து 'ரெட்' படத்தையும், சூர்யா - ஜோதிகாவை வைத்து 'மாயாவி' படத்தையும் கொடுத்தவர் இயக்குநர் சிங்கம் புலி. 'கண்ணன் வருவான்', 'ரேனிகுண்டா', 'பேரழகன்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் இவர், தற்போது காமெடி நடிகராக வலம் வருகிறார்.

singam puli

''இயக்குநராகும் கனவோடுதான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். என் ஆசைப்படி இரண்டு படங்களை இயக்கினேன். அதுதவிர சில படங்களுக்கு வசனமும் எழுதினேன். கொஞ்சம் டிராக் மாறி தற்போது காமெடி ரோல் செய்துகொண்டிருக்கிறேன். ரோட்டில் இருக்கும் பேரிகார்டு மாதிரி இதுக்குமேல் வரக் கூடாது என்றெல்லாம் சினிமாவில் இல்லை. 

சமீபத்தில் விஜய் சேதுபதி 'கருப்பன்' படத்தில்கூட அவரின் முறைமாமனாக நடித்திருக்கிறேன். 'ரேனிகுண்டா' காலத்திலிருந்தே பன்னீர் செல்வத்தைத் தெரியும். அதனால் இந்தப் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் என்பதால் நடித்தேன். என்னை படத்தில் அனைவரும் 'சில்க்' என்றுதான் அழைப்பார்கள். இன்னும் பெரிய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் உள்ளது.

ஆனால், இந்த வருடம் இறுதியில் என்னை இயக்குநராகவும் பார்க்கலாம். படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். அதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். மண் சார்ந்த கதையாக இருக்கும். எனக்குள், மண் சார்ந்த திரைப்படத்தை இயக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. அதனால், அந்த முயற்சியில் இருக்கிறேன். இந்தப் படம் உணர்வுபூர்வமான படமாகவும் இருக்கும். இதற்காக சில ஹீரோக்களிடம் பேசி வருகிறேன். அதுமட்டுமல்லாமல், நானும் ஜெயமோகன் சாரும் சேர்ந்து ஒரு கதை எழுதியிருக்கிறோம். நட்பு சம்பந்தமான இந்தக் கதையில் நடிக்க சமுத்திரக்கனி சாரிடம் பேசியிருக்கிறேன். இந்த வருடத்துக்குள் நல்ல செய்தி வரும் என்று நினைக்கிறேன்'' என்றவர், அஜித்தைப் பற்றிய சில தகவல்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

''சிட்டிசன் படம் முடித்த கையோடு எனக்காக அஜித் நடித்த படம்தான் ரெட். இந்தப் படம் மதுரையை மையமாக வைத்த ஒரு கதை. ஆனால், அதற்காக நாங்கள் மதுரையில் ஷுட்டிங் நடத்தவில்லை. இதனால் பல விமர்சனங்கள் என்னை நோக்கி வந்தது. மதுரை போன்று செட் அமைத்து 'ரெட் ' திரைப்படத்தை எடுத்தோம். இதற்குக் காரணம், மதுரையில் அஜித் ரசிகரின் திருமணம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் போனபோது, அஜித்தைப் பார்க்க நிறைய ரசிகர்கள் வந்தனர். அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு திருமண நிகழ்விலேயே அவரைப் பார்க்க இவ்வளவு தள்ளுமுள்ளு ஏற்படும்போது, 80 நாள்கள் மதுரையில் ஷுட்டிங் நடத்தினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எனவேதான், மதுரை போன்று செட் அமைத்து படப்பிடிப்பை முடித்தோம். 

ajith

இந்தப் படத்தின் கதையும் அஜித்துக்காக உருவாக்கிய கதைதான். இந்தப் படத்துக்காக நான் முதலில் வைத்த பெயர்கூட 'என்ன சொல்ல போகிறாய்' என்பதுதான். லவ் ஸ்டோரியாக உருவாக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்புறம்தான் அவருக்கு இருக்கும் மாஸ் எல்லாம் சேர்த்து ஆக்‌ஷன், காதல் எல்லாம் சேர்த்து ஒரு கமர்ஷியல் படமாகக் கொடுத்தேன். அதே மாதிரி 'ரெட்' என்று வைத்தற்கும் காரணம் உண்டு. எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் எம்.ஜி.ஆர், 'மிஸ்டர் ரெட்' என்ற பெயரில்தான் வருவார். இது கம்யூனிஸ சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல். எல்லோரும் நேர்மையாக இருக்கணும்; மற்றவர்கள் சந்தோஷத்துக்காக ஒருத்தன் வாழ்ந்தான் என்பதை தெரிவிக்கத்தான் இந்தப் பெயர் வைத்தேன்.

இப்போது இருக்கும் அஜித்தைப் பார்த்து பிரமிக்கிறேன். நிறைய முதிர்ச்சி அடைந்திருக்கிறார். உலக சினிமாவில் கமர்ஷியல் சினிமா எந்த பிளாட்பார்மில் உள்ளது? நாம் எதுபோன்று செய்ய வேண்டும் என்பது குறித்து ஏராளமான ஐடியாக்களை வைத்திருக்கிறார் அஜித். அவருடைய சால்ட் & பெப்பர் கெட்டப் எனக்குப் பிடிக்கும். ஹாலிவுட் ஹீரோக்களே செய்யத் தயங்கும், பெப்பர் சால்ட் கெட்டப்பை இயல்பாகச் செய்து காட்டினார். அதிலும் ஹிட் கொடுத்திருக்கிறார். நாளுக்குநாள் அதிகரிக்கும் அவருடைய ரசிகர்களைப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. அவருடைய உழைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். அதன்பிறகு, 'மாயாவி' திரைப்படத்தை இயக்கினேன். 'நான் கடவுள், 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்', எத்தன் உள்ளிட்ட படங்களில் நான் செய்த காமெடி ரோல் என்னை மக்களிடம் நகைச்சுவை நடிகராகவே கொண்டுபோய்விட்டது" என்றார் இயக்குநர் சிங்கம் புலி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close