Published:Updated:

’’கீச்சதில்ல, எகுறு, அல்லு, சில்லு..!’’ - ’மெர்சல்’ அரசன் பாடல் பின்னணி சொல்கிறார் சரண்யா ஸ்ரீநிவாஸ்

மா.பாண்டியராஜன்
’’கீச்சதில்ல, எகுறு, அல்லு, சில்லு..!’’ - ’மெர்சல்’ அரசன் பாடல் பின்னணி சொல்கிறார் சரண்யா ஸ்ரீநிவாஸ்
’’கீச்சதில்ல, எகுறு, அல்லு, சில்லு..!’’ - ’மெர்சல்’ அரசன் பாடல் பின்னணி சொல்கிறார் சரண்யா ஸ்ரீநிவாஸ்

தயா, அழகிய தமிழ் மகன் படங்களுக்குப் பிறகு மெர்சல் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதனால் மெர்சல் பாடல்களின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்திசெய்யும் விதமாக மெர்சல் படத்தில் பாடல் அமைந்துள்ளது. அதில் பலருக்கு ஃபேவரைட்டான பாடல் மெர்சல் அரசன். அந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், நரேஷ் ஐயருடன் இணைந்து பாடகர் ஸ்ரீநிவாஸின் மகள் சரண்யாவும் பாடியுள்ளார். பாடல் அனுபவத்தைப் பற்றி பாடகி சரண்யா ஸ்ரீநிவாஸிடம் பேசினோம்.

” மெர்சல் அரசன் பாட்டு நான்தான் பாடப்போறேன்னு முதலில் எனக்கு தெரியாது. ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆஃபிஸ்ல இருந்து ரெக்கார்டிங் வரச்சொல்லி போன் வந்தது. வழக்கம்போல கோரஸ் பாடுறதுக்கு கூப்பிடுறாங்கன்னு நினைச்சுதான் போனேன். அங்கப்போய் பார்க்கும் போதுதான் மெர்சல் படத்துல நான் பாடப்போற விஷயம் தெரிஞ்சது. ரொம்ப குஷியாகிட்டேன். பாடும்போது பாடலாசிரியர் விவேக் அண்ணா அங்கதான் இருந்தார். பாடி முடிக்கும்போது அட்லீ அண்ணாவும் வந்துட்டார். ரெண்டு பேரும் பாட்டைக் கேட்டுட்டு ‛ரொம்ப நல்லா இருக்கு’னு சொன்னாங்க. பாடல் ரிலீஸானதுக்கு அப்பறம் நிறைய பேரு பாராட்டுறாங்க.’’

பாட்டைக் கேட்டுட்டு விஜய் எதுவும் சொன்னாரா..?

’’விஜய் அண்ணா படங்களில் மாஸ் எண்ட்ரி சாங் மிஸ் ஆகாம வந்திரும். அப்படி ஒரு சாங்தான் இந்த மெர்சல் அரசன். கண்டிப்பா இந்தப் பாட்டு விஜய் அண்ணாக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இதுவரை நான் விஜய் அண்ணாவை மீட் பண்ணலை. அதுனால அவர் என்ன ஃபீல் பண்றாருனு எனக்கு தெரியலை. மெர்சல் படத்தோட ஆடியோ லான்ச் அன்னைக்குதான் என்னோட கல்யாணம் நடந்துச்சு. அதுனால எங்களால ஆடியோ லான்சுக்கு போக முடியலை. போயிருந்தேன்னா விஜய் அண்ணாகிட்ட பேசியிருப்பேன். ’’

மெர்சல் அரசன் பாடலுக்கு முன்னாடி என்னென்ன பாடல்கள் பாடியிருக்கீங்க..?

’’என்னோட அப்பா பாடகரா இருந்தனால சின்ன வயசுல இருந்தே எனக்கும் பாடகி ஆகணும்னு ஆசை இருந்தது. நான் காலேஜ் முடிக்கும் போதுதான் அதை உறுதியா முடிவு பண்ணினேன். தெனாலி படத்துல ’ஆலங்கட்டி மழை...’ சாங்தான் என்னோட முதல் பாடல். சின்ன வயசுலேயே இந்தப் பாட்டை பாடிட்டேன். காலேஜ் முடிச்சதும் நான் பாடின முதல் பாடல், அப்பாவோட மியூசிக்லதான். அது ஒரு மலையாளப்படம். ‛கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல்’ படத்துல நான் பாடின பாடல்தான் தமிழ்ல என்னோட முதல் பாடல். ரஹ்மான் சாரோட மியூசிக் ஸ்கூல்ல படிச்சதால, அப்பப்போ ரஹ்மான் சார் பாடல்களுக்கு கோரஸ் பாடப்போவேன். அப்படி போயிட்டு இருக்கும் போதுதான் ‛அம்பிகாபதி’ படத்துல ரெண்டு பாடல் பாடினேன். இமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜஸ்டின் பிரபாகரன், ஜோஸ்வா ஸ்ரீதர்னு நிறைய பேரோட மியூசிக்ல கிட்டத்தட்ட இருபது பாடல்கள் பாடியிருக்கேன். ஆனா, இந்தப் பாடல்களினால் எனக்கு கிடைக்காத பெயர், மெர்சல் அரசன் பாட்டு மூலமா கிடைச்சிருக்கு. இந்தப் பாட்டுக்கு அப்பறம் நிறைய பாடல் வாய்ப்புகள் வருது. அதையெல்லாம் இப்போ பயன்படுத்திட்டு வரேன்.’’ 

உங்களோட திருமணம் காதல் திருமணமா..?

’’ஆமா. மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் நிறைய மியூசிக்கல் கான்செர்ட் பண்ணிட்டு இருந்தேன். அப்படி நான் பண்ணின ஒரு கான்செர்ட்டைப் பார்க்க என் கணவர் அவங்க குடும்பத்தோடு வந்திருந்தாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் அவங்க என்னை மீட் பண்ணி நான் பாடினதைப் பற்றி சொன்னாங்க. அப்போதான் என் கணவர் எனக்கு அறிமுகமானார். அதுக்கப்பறம் நானும், நாராயணனும் ஃபேஸ்புக்ல பேசி, பழக ஆரம்பிச்சோம். அந்த பழக்கம் காதலா மலர்ந்து இப்போ கல்யாணமா மாறியிருக்கு.’’ 

காதல் திருமணத்துக்கு வீட்டில் ஓகே வாங்க கஷ்டப்பட்டீங்களா..?

’’கஷ்டப்பட்டெல்லாம் ஓகே வாங்கலை. எங்களோட காதலை எங்க ரெண்டு வீட்டுல சொல்லும் போது, ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. எப்போ கல்யாணம்னு அவங்களே கேட்டாங்க. எல்லாமே நல்லபடியா நடந்துச்சு. எல்லாரும் காதல் பண்ணும் போது இருக்கிற லவ், கல்யாணத்துக்கு அப்பறம் இருக்காதுன்னு சொல்றாங்க. அப்படியெல்லாம் இல்லைங்க. லவ் பண்ணும் போது நாராயணன் என்னை எப்படி பார்த்துக்கிட்டாரோ அதே மாதிரிதான் இப்போதும் பார்த்துக்கிறார். சொல்லப்போன எங்க லவ் இன்னும் அதிகமாகியிருக்கு.’’ 

உங்க கணவரும் பாடகரா.?

’’இல்ல. அவர் ஆர்க்கிடெக் அண்ட் இன்ட்டீரியர் டிசைனரா இருக்கார். ஆனா அவரும் நல்லா பாடுவார். எங்களோட கல்யாண டைம்ல நாங்க எந்த வேலையும் கமிட் பண்ணிக்கலை. முழுசா கல்யாண வேலைகளில்தான் மூழ்கி இருந்தோம். கல்யாணத்துக்கு அப்பறம் நிறைய வேலைகள் இருந்தனால இன்னும் எங்கேயும் போகலை. எங்க போறதுன்னு ப்ளானும் பண்ணலை. ஒரு நாள் மட்டும் பாண்டிச்சேரி போனோம். எங்களோட வேலைகளை முடிச்சுட்டு ஒரு ட்ரிப்புக்கு ப்ளான் பண்ணணும். ’’

உங்களோட சிங்கிங் கரியர் எப்படி போகணும்னு ஆசைப்படுறீங்க..?

’’நம்மளோட கரியர் இப்படித்தான் போகணும்னு எனக்கு எந்த ஆசையும் இல்ல. ஆனா, நான் சிங்கிங்ல ரொம்ப ஃபோகஸா இருக்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா, மியூசிக்தான் எனக்கு திருப்தி கொடுக்கும். நிறைய பாடல்கள் பாடணும். ஒவ்வொரு பாடல் ரெக்கார்டிங்கிலும் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். நிறைய கத்துக்கலாம். மேடை நிகழ்ச்சிகள் அதிகம் பண்ணணும். அதுபோக, இண்டிபென்டண்ட் பாடல்கள் நிறைய பண்ணணும். இப்போ கூட கர்னாட்டிக் ஃப்யூசன் சாங் ஒண்ணு பண்ணினேன். அது ஃபேஸ்புக்ல ஒன் மில்லியன் வியூஸ் போச்சு. அந்த மாதிரி நிறைய இண்டிபென்டண்ட் பாடல்கள் பண்ணணும்.’’

ஒவ்வொரு சாங் ரெக்கார்டிங்கிலும் நிறைய கத்துக்கலாம்னு சொன்னீங்க... மெர்சல் அரசன் சாங் ரெக்கார்டிங்கில் என்ன கத்துக்கிட்டீங்க..?

’’நிறைய கத்துக்கிட்டேன். நான் சென்னைப் பொண்ணுதான், சென்னை ஸ்லாங் பேசவரும். ஆனா அந்த ஸ்லாங்கிலேயே என்னால பாட முடியுமானு முதலில் தெரியலை. மெர்சல் அரசன் சாங்ல நிறைய சென்னை ஸ்லாங் வார்த்தைகள்தான் இருக்கும். கத்தி ஆனா கீச்சதில்ல, தலிவன் ஆட இசைப்புயல் ஒண்ணு பிரிக்குது எகுறு... அல்லு சில்லு என நான் இதுவரை அதிகம் பேசாத வார்த்தைகளா இந்தப் பாட்டில் இருந்தனால அதை பாடும்போது புது அனுபவமா இருந்தது. என்னாலையும் சென்னை ஸ்லாங்ல ஒரு பாட்டு பாட முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன், கத்துக்கிட்டேன். என் வாய்ஸை மாத்திதான் இந்தப் பாட்டை பாடினேன்.’’ 

அப்பா, அம்மா சினிமால இருக்கிறதால அவங்க பசங்களுக்கு சுலபமா வாய்ப்பு கிடைச்சிடும்னு சொல்லுவாங்க. அப்படித்தான் உங்களுக்கும் பாடல் வாய்ப்புகள் கிடைக்கிறதா..?

’’நிறைய பேரு அப்படிதான் நினைக்கிறாங்க. ஆனால், அப்படியெல்லாம் இல்லைங்க. என் அப்பா எனக்காக யார்கிட்டையும் சிபாரிசு பண்ணலை. அப்படி பண்றதுக்கு அவர் கூச்சப்படுவார். எனக்கும் அது பிடிக்காது. என்னோட சொந்த முயற்சியாலதான் நான் மேல வரணும்னு நினைக்கிறேன். நான் 2012ல பாடல்கள் பாட ஆரம்பிச்சேன். என் அப்பாவோட சிபாரிசுல எனக்கு வாய்ப்பு வரதா இருந்தா அப்போவே எனக்கு பெரிய படத்துல பாட வாய்ப்பு வந்திருக்கும். இத்தனை வருஷங்களுக்கு அப்பறம் வந்திருக்காது. நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு பல பாடல்கள் கோரஸ் பாடியிருக்கேன். இப்போதும் கோரஸ் பாடிட்டு இருக்கேன். அவரா பார்த்துதான் எனக்கு இந்த பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கார். என் அப்பா நிறைய பாடகர்களுக்கு சிபாரிசு பண்ணியிருக்கார். எனக்காக அவர் எப்போதும் சிபாரிசு பண்ணனது இல்லை.’’

மா.பாண்டியராஜன்

Journalist