விஜய், அஜித் இருவருக்குமான ஒற்றுமைகள் என்ன..? - சொல்கிறார் டேனியல் பாலாஜி

கமல், விஜய், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் டேனியல் பாலாஜி. மிரட்டலான வில்லனாக பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்துவர், விரைவில் வெளியாகவிருக்கும் மாயவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து...

daniel balaji

''வில்லன் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். ஹீரோவாக வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. எனக்குப் பிடித்த மாதிரி நிறைய வில்லன் கேரக்டர் செய்துகொண்டுதான் இருக்கிறேன். தற்போது சி.வி.குமார் இயக்கத்தில் 'மாயவன்' படத்தில் வில்லன் கேரக்டர் செய்திருக்கிறேன். இந்தப் படத்தில் நான்கு வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு வில்லனாக நானும் வருவேன். என் கேரக்டர் பெயர் இதில் ருத்ரன். ஒரு தன்னம்பிக்கைக் கொடுக்கக்கூடிய ஒரு ஸ்பீக்கர் திடீரென்று மாயவனாக மாறினால் எப்படியிருக்கும் என்பதுதான் என் கேரக்டர். படத்தில் நிறைய மாயவன்கள் இருக்கிறார்கள். 

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' படத்தில் என்னை முழு வில்லனாக பார்க்கலாம். அதில் படம் முழுக்க நான் ஒருவன் மட்டும்தான் வில்லன். விறுவிறுப்பான திரைக்கதையில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறேன்'' என்றவர், வடசென்னை படத்தில் தன் கேரக்டர் பற்றி சொல்கிறார். ’’வடசென்னை படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் செய்கிறேன். அதை வில்லன் என்று சொல்ல முடியாது. வெற்றி என்னிடம் பேசும்போது சொன்னார், ’எப்போதும் வில்லன் கேரக்டர் பண்ணுறே, நீ ஒரு நல்ல ஆக்டருன்னு நிரூபிக்கணும்’னு. அதனால்தான் இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ரோல் கொடுத்தார். இது ஒரு முக்கியமான கேரக்டர். மூன்று கெட்டப்களில் இந்தப் படத்தில் தோன்றுவேன். 25 வயது, 30 வயது, 40 வயது என மூன்று வயதுகளிலும் நடித்திருக்கிறேன். என் நடிப்புக்குத் தீனி போடக்கூடிய ஒரு கேரக்டர். வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறேன். வடசென்னை படத்தின் பார்ட் ஒன்னில் என் கேரக்டர் இருக்கும். ஆனால், பார்ட் 2-ல் இருக்குமா என்றுதான் தெரியவில்லை. படத்தில் தனுஷூடன் என் சீக்வென்ஸ் இருக்கும். என்னுடைய மேஜர் சீன்ஸ் எல்லாம் அவருடன் வரும்’’ என்றவர், தனுஷின் வளர்ச்சி பற்றிச் சொல்கிறார். 

’’அவருடன் 'பொல்லாதவன்' படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், அதற்கு முன்பாகவே 'காதல் கொண்டேன்' படத்திலும் நடித்திருப்பேன். அப்போதே அவருடைய நடிப்பு பற்றி தெரியும். செம ஆக்டர்'' என்றவரிடம் விஜய், அஜித் படங்களிலும் வில்லன் ரோல் நடித்திருப்பது பற்றி கேட்டால், ‘’படங்களைத் தாண்டி இவர்கள் இருவரிடமும் நான் கவனித்த விஷயங்கள் நிறைய இருக்கு. ஷூட்டிங் நடக்கும்போது கரெக்டான டைமுக்கு வருவதாகயிருக்கட்டும். எல்லோருக்கும் விஷ் பண்ணுவது, மற்றவர்களிடம் தன்மையாகப் பேசுவது, டைரக்டர் - தயாரிப்பாளர்களை அணுகும் முறை என விஜய், அஜித் இருவரிடமும் பொதுவான கேரக்டர் நிறைய இருக்கு.  ஆனால், தேவையில்லமால் அவர்களின் ரசிகர்கள் சிலர்தான் இணையத்தில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். உண்மையாகவே அஜித், விஜய் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள்’’ என்று முடித்தார் வில்லன் டேனியல் பாலாஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!