''அனிதா நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால்கூட மனசு ஆறியிருக்கும்!'' - இயக்குநர் அமீர்

நீட் தேர்வினால் தான் படிக்க நினைத்த மருத்துவப்படிப்பை படிக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் மரணம் தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடந்தேறி வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் இயக்குநர் அமீரிடம் இதுதொடர்பாகப் பேசினோம்.

anitha

’’எனக்கு நினைவு தெரிந்து நிறைய மரணங்களைப் பார்த்திருக்கிறேன். கொள்கைக்காக, கட்சிக்காக, இனத்தின் மீது பற்றுகொண்டு, மொழியின் மீது பற்றுகொண்டு எனப் பலரின் மரணத்தைப் பார்த்திருக்கிறேன். இவர்கள் மரணத்தைக் கடந்துதான் வந்திருக்கிறேன். ரொம்ப பக்கத்தில் இருந்தும் பார்த்திருக்கிறேன். முத்துகுமாராக இருக்கட்டும், விக்னேஷாக இருக்கட்டும் இன்னும் எண்ணற்றவர்கள். இவர்கள் எல்லோரும் அவர்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையிலும், சித்தாத்த அடிப்படையிலும் மரணத்தைச் சந்தித்தார்கள். ஆனால், அனிதாவின் மரணம் என்பது ஒரு சமூகம் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு தனது மக்களைக் கொலை செய்தது. எந்த மக்களால் ஓட்டு வாங்கி, ஆட்சியில் வந்து அமர்ந்திருக்கிறார்களோ அந்த ஆட்சியாளர்களே நேரடியாகத் தனது மக்களைக் கொல்வது என்பதுதான் அனிதாவுடைய மரணம். அந்த மரணம் நிகழக் கூடாது. அது ஒரு சமூகக் கொடுமை. கொடுங்கோல் ஆட்சியின் அடையாளம்தான் அனிதாவின் மரணம். 

இந்த சமூகம் என்பது, தேசம் என்பது எல்லா சமூக மக்கள் இருந்தாலும் அவர்களுக்கு உரிமை சரியாகக் கிடைக்க வேண்டும், கல்வி சரியாகக் கிடைக்க வேண்டும், மருத்துவம், உணவு, உடை, இருப்பிடம் எல்லாம் சரியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு அரசே அமைக்கப்படுகிறது. அதில் இருக்கக்கூடிய உரிமை பறிக்கப்பட்டால் அதை சரி செய்யத்தான் நீதிமன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டுமே சேர்ந்து ஒரு ஏழை மாணவியைக்  கொன்றுவிட்டது. இது தமிழகத்தில் நடந்தது பெரிதும் வேதனை.

AMEER

அனிதா நோய்வாய்பட்டு இறந்திருந்தால் மனசு ஆறியிருக்கும். ஆனால், இந்த அரசாங்கம் என்ன பாடத் திட்டம் வைத்திருந்ததோ அதைப் படித்து, அதற்கான  மார்க்கும் பெற்றிருந்தும், அனிதாவின் கனவு நிறைவேற்றப்படாமல் நசுக்கப்பட்டு அதனால் இறந்திருக்கிறார். அனிதா கையில் பணம் இருந்திருந்தால் அவர் நீட் கோச்சிங் கிளாஸ் போய் படித்து பாஸ் செய்திருப்பார். நுழைவுத்தேர்வு பாடத் திட்டத்தை அவள் படித்திருப்பாள். இந்த நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தை அரசாங்கம் கொண்டுவருகிறதா என்றால், இல்லை. அது ஒரு தனியார் நடத்தும் பாடத்திட்டம் அதைப் படிக்க அரசும் நீதிமன்றமும் வற்புறுத்துறாங்க. இதைவிடக் கொடுமை என்னயிருக்கு. 

கார்ப்பரேட் நிறுவனமும் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கமும் நீதிமன்றமும் சேர்ந்து செய்த கொடுமை இது. ஜெயலலிதா இருந்திருந்தால் நீட்டுக்கு அனுமதி கிடைத்திருக்குமா என்றால், கண்டிப்பாக இல்லை. நான் ஜெயலலிதாவை நம்புகிறேன். அவர் கண்டிப்பாக அப்படி செய்திருக்க மாட்டார். ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்திருந்தாலும்கூட,  அவர் மாநிலத்துடைய சுயாட்சியில்தான் இருந்தார். தமிழகத்தை விட்டுக்கொடுக்க மாட்டார். மாநிலத்தை எந்தச் சூழ்நிலையிலும் அவர் அடகு வைக்கவே இல்லை. மத்தியில் இருந்து வரக்கூடிய எந்தக் கட்சியாகயிருந்தாலும் அவர்கள் ஜெயலலிதாவை நெருங்க முடியாது. எளிதில் நட்பு வைத்துக்கொள்ள முடியாது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்கூட பா.ஜ.க அரசு அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வைத்துக்கொள்ள தயாராகயிருந்தாலும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் எதிர்த்தும் நின்றார்கள். பா.ஜ.க-வை தமிழகத்தின் உள்ளே கொண்டு வரக் கூடாது என்பதில் அவர் தீர்க்கமாகயிருந்தார். அவருடைய பிரசாரத்தில்கூட 'உங்களுக்காக நிற்கிற லேடியா இல்லை எங்கோயிருந்து வரக்கூடிய மோடியா?' என்றுதான் கேட்டார்கள். அதையெல்லாம் இன்று காற்றில் தூக்கிப் போட்டுவிட்டார்கள் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள்'' என்று வருத்தத்துடன் சொன்னார் இயக்குநர் அமீர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!