Published:Updated:

``ஐ சப்போர்ட் ஓவியா'' - ஓவியா ஆர்மியில் ஆரவ்வின் அண்ணன்!

பிர்தோஸ் . அ
``ஐ சப்போர்ட் ஓவியா'' - ஓவியா ஆர்மியில் ஆரவ்வின் அண்ணன்!
``ஐ சப்போர்ட் ஓவியா'' - ஓவியா ஆர்மியில் ஆரவ்வின் அண்ணன்!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் `பிக் பாஸ்’ விளையாட்டு நிகழ்ச்சி, ஒட்டுமொத்த மனிதர்களின் நேர்மறை, எதிர்மறை முகங்களை பிரதிபலித்துவருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமல் இருந்த ஓவியா, ஏகப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் `ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் அணி திரண்டு, `பிக் பாஸ்' நிகழ்ச்சியில்  அவருக்கு எதிராக இயங்கியவர்களைக் கலாய்த்து காலி செய்துவருகின்றனர். குறிப்பாக, காயத்ரி, ஷக்தி, ஜூலி ஆகிய மூவரும் குறிவைத்து கலாய்க்கப்பட்டனர். 

`பிக் பாஸ்' விளையாட்டின் முதல் நாளிலிருந்தே ஓவியாவும் ஆரவ்வும் நல்ல நண்பர்களாகப் பழகினர். நாளடைவில் ஆரவ்வை ஓவியா காதலிக்கத் தொடங்கினார். அதை பல்வேறு தருணங்களில் ஆரவ்விடமும் வெளிப்படுத்தினார். போட்டியாளர்களில் பலரும் ஓவியாவுக்கு எதிராக அணி திரண்டபோது, ஆரவ் மட்டும் அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டார். அப்போது அவர் மீதான ஓவியாவின் காதல் இன்னும் இறுக்கமானது. ஆனால், `நண்பர்களாக இருப்போம். உன்னுடன் அப்படி ஓர் எண்ணத்துடன் நான் பழகவில்லை’ என்றார் ஆரவ். `வீட்டில் ஒருவரின் அன்புகூட தனக்கு கிடைக்கவில்லையே’ என மனம் வெறுத்த ஓவியா, `பிக் பாஸ்' வீட்டிலிருந்து தானாக வெளியேறினார்.

அதன் பிறகு ஓவியாவுக்கு ஆரவ் முத்தம் கொடுத்த விஷயத்தை, ஆரவ்வின் வாயிலிருந்தே வரவைத்தார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன். ஓவியாவை சாந்தப்படுத்தவே தான் முத்தம் கொடுத்ததாக ஆரவ் கூறினார். அதற்கு கமல், ‘இதுதான் மருத்துவ முத்தமோ!’ என்று கூற, நாளடைவில் ‘மருத்துவ முத்தம்’ என்ற வார்த்தை வைரலானது. 

இதற்கிடையில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தி, ஜூலி உள்ளிட்ட சிலர் மீண்டும் `பிக் பாஸ்' வீட்டுக்குள் வந்தனர். இதில் ஆர்த்தி, ஆரவ்விடம் ஓவியாவைப் பற்றி தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். ஒருசமயம், `ஓவியாவை ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ஆரவ் பிடிகொடுக்காமலேயே பேசினார். இந்தச் சமயத்தில் ‘பிக் பாஸ்’ வீட்டில் ஆரவ்வின் செயல்பாடு எப்படி உள்ளது, ஓவியா விவகாரத்தை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்ள, ஆரவ்வின் அண்ணன் நதீமைத் தொடர்புகொண்டோம்... 

``ஆரவ்வுக்கும் எனக்கும் 10 வருஷ இடைவெளி. அவருக்கு நான் அண்ணனாக இருந்ததைவிட அப்பாவாக இருந்து பார்த்துக்கொண்ட நாள்கள்தான் அதிகம். அவரைப் பிரிஞ்சு இருக்கிறது வருத்தமாத்தான் இருக்கு. அதனால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துடுவேன். `பிக் பாஸ்' வீட்ல இருந்து ஓவியா போனது வருத்தமாத்தான் இருக்கு. அவர் வெளியே போன பிறகு இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறவங்களோட எண்ணிக்கையும் குறைஞ்சிருக்குனு சொல்றாங்க. 

ஓவியா வெளியேறியதுக்கு ஆரவ்தான் காரணம்னு சிலர் சொல்றாங்க. அதை நான் ஏத்துக்க மாட்டேன். அதுக்கு அந்த வீட்ல இருந்த எல்லாரும்தான் காரணம். குறிப்பா காயத்ரி, ஷக்தினு சிலரால்தான் ஓவியா வெளியேற்றம் நடந்தது. அந்தச் சூழல்ல ஓவியாவுக்கு பக்கபலமா இருந்தது ஆரவ் மட்டும்தான். அதனால் அவரை குறைசொல்ல முடியாது, குறை சொல்லவும் கூடாது.

தவிர, ஆரவ்வின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிப்போம். தன் எதிர்கால துணை யார் என்பது பற்றி ஆரவ்தான் முடிவுசெய்ய வேண்டும். அதில் நான் குறுக்கிட்டு கருத்து சொல்ல முடியாது. அவர் எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஓகேதான். நான் ஆரவ்வை நம்புகிறேன். அவர் தன் பெற்றோரைப் புண்படுத்தும் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். தவிர, நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் இந்த விளையாட்டை நேர்மையாக விளையாடி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

வெளியே இருக்கும் பலர் ஆரவ்வை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக பெண்களின் சப்போர்ட் ஆரவுக்கு உண்டு. அதேபோல் ஆண்களின் ஆதரவு ஓவியாவுக்கு இருந்தது. நான் இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டிருக்கிறேன். ஆமாம், ஐ சப்போர்ட் ஆரவ் அண்ட் ஓவியா. ஆரவ் `பிக் பாஸ்' டைட்டிலை ஜெயித்தால் சந்தோஷம்.”

பிர்தோஸ் . அ

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..